வீட்டு வேலை செய்யும் பெண்களின் உரிமைப் போராட்டம்

  • 4 ஆகஸ்ட் 2018

வீட்டு வேலைப் பணியாளர்களுக்கென புதிய சட்டத்தை தொழிலாளர் நல அமைச்சகம் உருவாக்கி உரிமைகளை பாதுகாக்கக் கோரி டெல்லியின் நாடாளுமன்ற வீதியில் வீட்டுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை BBC/ ANSHUL

வீட்டு வேலை செய்யும் பணியாளர் ஒரு நாள் வேலைக்கு வரவில்லை என்றாலே வீடு அல்லோகலப்படும், அதிலும் கணவன் மனைவி இருவருமே அலுவலகத்திற்கு செல்பவர்கள் என்றால் நிலைமை இன்னும் மோசம்.

இன்றைய காலகட்டத்தில் வீட்டு வேலைக்காக ஆள் வைப்பது வழக்கமாகிவிட்டது. சில வீடுகளில் காலை தேநீர் முதல் இரவு உணவு தயாரிப்பது வரை அனைத்து வேலைகளையும் செய்வது வீட்டு பணியாளர் தான்.

ஆனால், இந்த வேலை செய்வது பிடித்திருக்கிறதா என்ற கேள்வியை யாராவது உங்கள் வீட்டு பணியாளரிடம் கேட்டிருக்கிறீர்களா? கட்டாயத்தின் பேரில் வேலை செய்கிறார்களா என்று உங்களுக்கு தெரியுமா? எது எப்படியிருந்தாலும் உங்களுக்கும், உங்கள் வீட்டு வேலைகளை செய்பவருக்கும் இடையிலான உறவு சுமூகமாக இருக்கிறதா?

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த கேள்விகள் அனைத்தையும் நேரடியாக அனைவரிடமும் கேட்கும் வகையில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வசிக்கும் வீட்டுப் பணியாளர்கள் வியாழன்று தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற வீதியில் இறங்கி, உரக்க கேட்டனர்.

டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த வீட்டுப் பணியாளர்கள் நூற்றுக்கணக்கில் டெல்லியில் வந்து குவிந்தனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கும் இவர்களின் கோரிக்கைகள் ஒன்றுபோலவே இருக்கின்றன.

வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான தேசிய அமைப்பு (National Platform for Domestic Workers) மற்றும் மத்திய தொழிற்சங்கத்தின் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய தொழிலாளர் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோருகின்றனர். வீட்டு தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இங்கு வந்துள்ளதாக வீட்டு வேலை தொழிலாளர்களுக்கான தேசிய அமைப்பின் உறுப்பினர் ரவீந்திர குமார் கூறுகிறார்.

முக்கிய கோரிக்கைகள்...

•வேலைக்கான ஊதியத்தையும், பணி நேரத்தையும் நிர்ணயிப்பது.

•மாதத்திற்கு நான்கு நாள் விடுமுறை

•உரிய முறையில் நடத்துவது

•சமூக பாதுகாப்பு

படத்தின் காப்புரிமை BBC/ANSHUL

இந்தியாவில் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை என்பதை ஊகிப்பது கடினமானது என்று இந்த அமைப்பின் அமைப்பாளர் அனிதா ஜுனேஜா கூறுகிறார்.

2005 ஆம் ஆண்டின் தேசிய மாதிரி கணக்கெடுப்பின் (NSS) படி, நாட்டில் 47 லட்சம் வீட்டு வேலை தொழிலாளர்கள் இருந்தனர். ஆனால் இப்போது அந்த எண்ணிக்கை ஒன்பது கோடியாக உயர்ந்திருக்கலாம் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

"2008இல் உருவாக்கப்பட்ட 'அமைப்புசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்புச் சட்டத்தில்' வீட்டு வேலை பணியாளர்கள் சேர்க்கப்பட்டாலும், ஆனால் அதில் தகவல்கள் தெளிவாக கூறப்படவில்லை. சமூக பாதுகாப்பு வழங்குவதற்கு பதிலாக எங்கள் சமூகத்திற்கு ஆதரவளிப்பதாக அரசு கூறுகிறது. ஆனால் வீட்டுவேலைப் பணியாளர்களின் ஊதியம் நிர்ணயிக்கப்படவில்லை" என்று அனிதா ஜுனேஜா கூறுகிறார்.

இருந்தபோதிலும், புதிய தொழிலாளர் சட்டத்தில், வீட்டுவேலை பணியாளர்கள் திறமைக்கு மதிப்பு கொடுத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அனிதா கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை BBC/ANSHUL

வீட்டுவேலைப் பணியாளர்களின் கோரிக்கை

அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதியங்கள், பணிபுரியும் இடங்களில் மதிப்பு மற்றும் அவர்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்காக இந்தச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

ஆனால், அதன்பிறகு வீட்டு வேலை பணியாளர்களுக்கு என பிரத்யேக சட்டங்கள் தேவை என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

10 ஆண்டுகளாகியும் அரசாங்கம் அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை.

டெல்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்ட பெண்களில் பலர், தாங்கள் மரியாதையுடன் நடத்தப்படுவதில்லை என்று வருத்தப்படுகிறார்கள்.

சிறு வயதில் இருந்தே வீட்டு வேலைக்கு அனுப்பப்பட்டதாக கூறும் கரன்ஜீத் என்ற பெண், ஆனால் யாருமே மதிப்புடன் நடத்தியதில்லை என்று தெரிவித்தார்.

விடுமுறை எடுக்க எங்களுக்கு உரிமையில்லை, ஏன் சம்பளம் கேட்பது கூட தவறானதாக கருதப்படும். ஊதிய உயர்வு வேண்டும் என்று கேட்கவே அச்சமாக இருக்கும். எத்தனை வேலை செய்தாலும் அதில் திருப்தியடையாமல், சின்ன வேலை தானே, இதையும் முடித்துவிட்டுப் போ என்று அதிகாரம் செய்வார்கள் முதலாளிகள் என்று வருத்தப்படுகிறார் கரன்ஜீத்.

அதுகூட பரவாயில்லை, வீட்டில் எதாவது பொருள் காணமல் போய்விட்டால் முதலில் சந்தேகப்படுவது எங்களைத்தான் என்றும் அவர் கூறுகிறார்.

வீட்டு வேலைப் பணியாளர்களுக்கென புதிய சட்டத்தை தொழிலாளர் நல அமைச்சகம் உருவாக்கி, அவர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று அமைப்பின் உறுப்பினர் ரவீந்திர் கோருகிறார்.

சட்டம் உருவானால் எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும், சம்பளம் நிர்ணயிக்கப்படும். பணி நேரமும் முடிவு செய்யப்படும், விடுமுறை கிடைக்கும், மருத்துவ வசதிகளும் கிடைக்கும், விபத்து ஏற்பட்டால் இழப்பீடு கிடைக்கும். இப்போது பணியாளர்கள் என்பதன் அடிப்படையில் எங்களுக்கு எந்தவித வசதிகளுமே கிடைப்பதில்லை என்று ரவீந்திர் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

இந்தச் செய்தி குறித்து மேலும்