அனுமதி இல்லாமல் ஆதார் சேவை எண்: மன்னிப்பு கோரிய கூகுள்

  • 4 ஆகஸ்ட் 2018
UIADI
Image caption இந்த ஸ்கிரீன்ஷாட்கள் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் எடுக்கலாம்

பயனாளர்கள் அனுமதி இல்லாமல் ஆதார் சேவை எண்கள் தானாக அலைபேசியில் சேமிக்கப்படும் சர்ச்சையில் விளக்கமும் மன்னிப்பும் கோரி உள்ளது கூகுள் நிறுவனம்.

''நாங்கள் இவ்விவகாரம் குறித்து எங்களுக்குள் ஆய்வு மேற்கொண்டோம். ஆண்ட்ராய்ட் மொபைலின் வழிகாட்டி அமைப்புக்கான நிரலில் யுஐடிஏஐ மற்றும் 112 ஆகியவை அவசர உதவி எண்கள் பட்டியலில் தவறுதலாக சேர்க்கப்பட்டு விட்டன என்பது தெரிய வந்தது. அப்போதிலிருந்து இந்த எண் பயனர்களின் அலைபேசி எண் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டது. அப்பயனர்கள் புது திறன்பேசி வாங்கும்போது இந்த எண்ணும் பரிமாறப்பட்டுவிட்டது."

"இது குறித்து ஏதேனும் கவலைகள் ஏற்பட்டிருந்தது எனில் எங்களை மன்னிக்கவும். ஆண்டிராய்டு சாதனங்களில் உரிமையாளரை தவிரவும் அதிகாரபூர்வமற்ற முறையில் அணுக முடியும் என்ற சூழ்நிலையாக கருதத்தேவையில்லை என உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறோம். பயனர்கள் இந்த எண்கள் வேண்டாம் என நினைத்தால், அவர்களது சாதனங்களில் இருந்து நீக்கிக்கொள்ள முடியும்."

"இந்த பிரச்னை குறித்து எதிர்வரும் ஆண்ட்ராய்டு வழிகாட்டியில் சீர் செய்து வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளோம்'' என கூகுள் தெரிவித்துள்ளது.

உங்கள் மொபைலில் நீங்கள் சேமிக்காத எண்…

யுஐடிஏஐ என்ற பெயரில் 1800-300-1947 எனும் எண் சேமிக்கப்பட்டிருந்ததை பார்த்து பல மொபைல் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பார்ப்பதற்கு ஹெல்ப்லைன் எண் போல தோன்றினாலும், டயல் செய்தால் ரிங் செல்வதில்லை, ஆனால் பதிவு செய்யப்பட்ட குரல் எண் உபயோகத்தில் இல்லை என்று கூறுகிறது.

இந்த எண் பொதுமக்களின் மொபைலில் எப்போது சேமிக்கப்பட்டது என்ற தகவல் எதுவும் உறுதியாக தெரியவில்லை. ஆனால் இந்த விஷயம் வெள்ளிக்கிழமையன்று எலியட் ஆண்டர்சனின் @ fs0c131y என்ற ட்வீட் மூலம் டிவிட்டர் ஹேண்டிலில் பரபரப்பானது.

என்ன நடக்கிறது என்று யுஐடிஏஐயிடம் இந்த டிவிட்டர் செய்தி கேள்வி எழுப்புகிறது.

இந்த டிவிட்டர் ஹேண்டில், ஆதார் எண்ணின் ரகசியத்தன்மை பாதுகாப்பு குறித்து ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தது.

வதந்திகள், பயம் மற்றும் உண்மைகள்

  • யுஐடிஏஐ என்று பெயரில் சேமிக்கப்படும் இந்த எண், ஆண்ட்ராய்டு போனில் மட்டுமே சேமிக்கப்படுகிறது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், ஐஃபோன் வைத்திருக்கும் சில பயனர்களும் இதே பிரச்சனையை எதிர்கொண்டுள்ளனர்.
  • போனில் அப்டேட் செய்யும்போது இந்த எண் சேமிக்கப்பட்டிருக்கலாம் என சிலர் கூறுகின்றனர். ஆனால், தொழில்நுட்ப நிபுணர் ரிதேஷ் பாடியாவிடம் பிபிசி பேசியபோது, இதற்கு வாய்ப்பே இல்லை என்று உறுதியாக சொல்கிறார்.
  • ஆதார் எண் இருப்பவர்களின் போனில் மட்டுமே யுஐடிஏஐ என்ற எண் சேமிக்கப்படுகிறது. ஆனால் ஆதார் எண் இருக்கும் அனைவரின் போன்களிலும் இந்த எண் சேமிக்கப்படவில்லை.
  • இரண்டு ஆண்டு பழைய போனில் இந்த எண் சேமிக்கப்படவில்லை என்று சொல்லப்பட்டாலும், அது முற்றிலும் உண்மையில்லை.

ஆதாரின் விளக்கம்

படத்தின் காப்புரிமை NARINDER NANU/AFP/Getty Images

அரசின் ஆணைப்படி மொபைல் சேவை நிறுவனங்கள் தானாகவே இந்த எண்ணை சேமிக்கின்றதா என்று சிலருக்கு சந்தேகம் எழுகிறது.

ஆனால் இந்த சந்தேகத்திற்கு விளக்கம் அளிக்கும் யுஐடிஏஐ, எந்த சேவை வழங்கும் நிறுவனத்திற்கும் தாங்கள் இதுபோன்ற அறிவுறுத்தல்களை வழங்கவில்லை என்று கூறுகிறது.

ஆதார் தொடர்பான டிவிட்டர் ஹேண்டில், `யுஐடிஏஐ-இன் காலவதியான இலவச தொலைபேசி எண் 1800-300-1947, உங்கள் ஆண்ட்ராய்டு போன்களில் தானாகவே சேமித்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பான விளக்கம் இது. இதுபோன்ற வசதிகளை வழங்கவேண்டும் என எந்த தயாரிப்பு நிறுவனம் அல்லது சேவை வழங்குனரை யுஐடிஏஐ கேட்கவில்லை என்று தெளிவுபடுத்துகிறோம். இந்த எண் யுஐடிஏஐயின் இலவச எண் அல்ல. தனிப்பட்ட சில நலன்களுக்காக பொது மக்களிடையே குழப்பம் ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற வதந்திகள் பரப்பப்படுகிறது. 1947 என்ற எங்களுடைய இலவச எண், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருக்கிறது."

யுஐடிஏஐ, தனது தன்னிலை விளக்கத்தில் வெறும் ஆண்ட்ராய்டு போன்கள் பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளது. ஆனால் உண்மையில் ஆப்பிள் போன்களிலும் அந்த குறிப்பிட்ட எண் சேமிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை ஹேக்கிங் மற்றும் தனியுரிமை மீறல்களாக பலர் கருதுகின்றனர். மூத்த பத்திரிகையாளர் பிரபு சாவ்லா வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், "இது உண்மையான செய்தி என்றால், உங்களுக்கு தெரிவிக்காமலேயே, ஏஜென்சிகள் உங்கள் போனில் எதை வேண்டுமானாலும் ஏற்றலாம், எதையும் நீக்கலாம் என்பது உறுதியாகிறது.

ஆதிஷ் போஸ் என்ற பயனாளர் வோடஃபோன் பற்றி குறிப்பிட்டு, இந்த நம்பர் தனது தொடர்பு பட்டியலில் எப்படி வந்தது எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வோடஃபோன், "எங்கள் வாடிக்கையாளரின் தகவல்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் செய்கிறோம், அனைத்து விதிகளுக்கும் கீழ்படிகிறோம். உங்கள் கேள்விகளை privacyofficer@vodafone.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்" என்று கூறியுள்ளது.

சாத்தியமான காரணங்கள்

படத்தின் காப்புரிமை MANSI THAPLIYAL

மும்பையைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர் ரிதேஷ் பாடியாவின் கருத்துப்படி, இந்த சிக்கலுக்கான காரணத்தை தன்னால் இதுவரை முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார்.

மொபைல் சேவை வழங்குநர்கள் ஒருவேளை இப்படி செய்திருக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறும் அவர், "நீங்கள் சிம் கார்டு வாங்கும் போது, சில தொடர்புகள் ஏற்கனவே சேமிக்கப்பட்டிருக்கும். அதில் வாடிக்கையாளர் சேவை எண் முதல், ஆம்புலன்ஸ் மற்றும் பீட்ஸா ஆர்டர் கொடுப்பது என பல்வேறு எண்கள் சேமிக்கப்பட்டிருக்கும்" என்பதை சுட்டிக்காட்டுகிறார்.

"யுஐடிஏஐயின் எந்தப் செயலியையும் பதிவிறக்கம் செய்வதால் நடந்திருக்குமா? ஆனால் அந்த செயலியை பதிவிறக்கம் செய்யாதவர்களுக்கும் அந்த குறிப்பிட்ட எண் பதிவாகியிருப்பது ஆச்சரியப்படுத்துகிறது" என்கிறார் அவர்.

மொபைல் போனின் மென்பொருளை அப்டேட் செய்வதால் இந்த எண் சேமிக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றவில்லை என்று ரிதேஷ் பாடியா கூறுகிறார்.

மொபைல் நிறுவனங்களும் கைவிரிக்கின்றன

படத்தின் காப்புரிமை Getty Images

தொலை தொடர்பு ஆப்ரேட்டர்களிடமும் இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி பேசியது. இந்த விவகாரம் தொடர்பாக அவர் கூறும் விளக்கம் இதுதான்: "செல்லுலார் ஆப்ரேட்டர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா" (சி.ஒ.ஏ.ஐ) தொலைபேசி எண்ணில் அறியப்படாத சில எண்களை சேமிக்கும் முயற்சியில் தொலைபேசி சேவை வழங்குநர்கள் ஈடுபடவில்லை."

சி.ஒ.ஏ.ஐ தலைவர் ராஜன் மேத்யூஸ் பிபிசிக்கு அளித்த பேட்டியில், "இது மொபைல் போன் தொடர்பான விஷயமாக இருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம், தொலை தொடர்பு அதிகாரிகளுக்கு இது பற்றிய தகவல்கள் தெரியவில்லை மற்றும் அதன் பின்னணியில் அவர்கள் இல்லை" என்று கூறுகிறார். இதுபற்றி கண்டறிவது யூ.ஐ.டி.ஏ.ஐயின் பொறுப்பு. வேலை செய்யாத எந்த எண்ணையும் தொலை தொடர்பு ஆபரேட்டர்கள் அனுப்புவதில்லை" என்று கூறுகிறார்.

எனினும், எலியட் ஆண்டர்சன் ட்விட்டர் ஹேண்டிலில் இந்த விஷயம் சிக்கலாக இருப்பதாக கூறப்பட்டாலும், இது புதிய விஷயம் இல்லை என்றும் குறிப்பிடுகிறது.

அனிவர் அர்விந்த் என்ற ஒரு நபர் 2017 என்ற பெயரில் செய்த டிவிட்டர் செய்தியை மீண்டும் பகிர்ந்திருக்கும் எலியட் ஆண்டர்சன், யூஐடிஐஏவின் எண் தானாகவே மொபைலில் சேமிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறார்.

2017 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதியன்று அவர் வெளியிட்ட செய்தியில், "இந்தியாவில் விற்கப்படும் தொலைபேசிகள் ஏற்கனவே யூ.ஐ.டி.ஏ.ஐயின் இலவச தொலைபேசி எண்ணை கொண்டிருக்கின்றன, இது தொடர்பாக அரசாங்க உத்தரவு ஏதேனும் இருக்கிறதா அல்லது அரசு நம்மை தனது கைமுட்டிக்குள் வைக்கும் முயற்சியா?"

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :