'இந்திய வரலாற்றில் பொற்காலம் என்று எதுவும் இல்லை'

இந்திய வரலாற்றில் பொற்காலம் என்று எதுவும் இல்லை என்கிறார் டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான டி.என்.ஜா.

சமீபத்தில் இவர் எழுதிய 'Against the grain' நூலானது சமூகத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.

மின்னஞ்சலில் பிபிசி இந்திய மொழிகளின் ஆசிரியர் ரூபா ஜா அனுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த டி.என்.ஜா பழங்கால இந்தியா, சமூக நல்லிணக்கம், இந்து மதம், முஸ்லிம் மன்னர்கள் என பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பழங்கால இந்தியா என்பது சமூக நல்லிணக்கம் நிறைந்து பொற்காலமாக இருந்தது....அதற்குப்பின் இடைக்காலத்தில் இஸ்லாமிய அரசர்களின் ஆட்சியின்போதுதான் பயங்கரவாதம் இந்தியாவில் தலை தூக்கியது என இந்துத்துவவாதிகள் கூறுகின்றனர். இதற்கு வரலாற்று ரீதியான ஆதாரங்கள் உள்ளனவா?

இந்திய வரலாற்றில் பொற்காலம் என்று எதுவும் இல்லை. வரலாற்று ஆதாரங்களில் இது தெளிவாக தெரியவருகிறது. பழங்கால இந்தியாவை சமூக நல்லிணக்கமும் அமைதியும் நிறைந்ததாக கருத முடியாது. அச்சமயங்களில் வலுவான சாதி நடைமுறை இருந்ததற்கு ஆதாரம் உள்ளது. பிராமணர்கள் அல்லாதவர்கள் குறிப்பாக சூத்திரர்கள் அதாவது தீண்டத்தகாதோர் என அழைக்கப்பட்டோர் சமூக, சட்ட, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டிருந்தனர். இதற்கு விரிவான ஆதாரங்கள் உள்ளன. இதன் காரணமாக பண்டைய இந்திய சமூகத்தில் பதட்டம் நிறைந்த சூழல் நிலவியது.

தற்போது அம்பானிகளும் அதானிக்களும் உள்ளது போல அப்போது உயர் சாதியினரும் நிலப்பிரபுக்களும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழ்ந்தனர். இதை வைத்து பார்த்தால் அச்சமூகத்தினர் எப்போதும் பொற்காலத்தில் திளைத்தனர் என்பதை மறுக்க முடியாதுதான்.

பண்டைய இந்தியா பொற்காலம் நிலவிய ஒன்றாக இருந்தது என்ற கருத்தாக்கம் 19ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் உருப்பெற்றது. குப்தர்களின் ஆட்சிக்காலத்தை பொற்காலமாகவும் தேசியத்துவம் நிறைந்ததாகவும் வர்ணித்தனர் வரலாற்று ஆய்வாளர்கள். ஆனால் தேசியத்துவத்தை குப்தர்கள் புதுப்பித்தனர் என்பதை விட தேசியத்துவத்தால் குப்தர்கள் பலன் பெற்றனர் என்பதே சரி என்கிறார் வரலாற்று அறிஞர் டி.டி.கோசாம்பி. சமூக அமைதியுடன் கூடிய பொற்காலம் என்ற கருத்தாக்கம் இந்தியாவிலும் அதே சமயம் பிற நாடுகளிலும் வரலாற்று அறிஞர்களால் தவறாக பயன்படுத்தப்பட்டது.

சீர்திருத்தவாதிகள் என அழைக்கப்படுபவர்கள் இஸ்லாமிய ஆட்சியாளர்களை அரக்கர்கள் போன்று சித்தரித்த நிகழ்வும் 19ம் நூற்றாண்டின் இறுதியில் நடந்தது. தயானந்த சரஸ்வதி (1824-1883) தனது சத்யார்த்த பிரகாஷிகா என்ற நூலில் இரு அத்தியாயங்களை இஸ்லாமிய, கிறித்துவ டெனிக்ரேஷன் என்றே ஒதுக்கினார். விவேகானந்தர் (1863-1902) பசிபிக் கடல் பகுதியிலிருந்து அட்லாட்ண்டிக் பகுதி வரை 500 ஆண்டுகளுக்கு ரத்த ஆறு ஓடியதாகவும் இதற்கு இஸ்லாம்தான் காரணம் என்றும் குறிப்பிட்டார்.

இஸ்லாமிய ஆட்சியாளர்களை இழிவு படுத்தும் போக்கு இன்றைய இந்துத்துவவாதிகள் வரை தொடர்கிறது. இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களை தங்கள் மதத்திற்கு வலுக்கட்டாயமாக மாற்றியதாகவும் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் கோயில்களை இடித்து தள்ளியதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. ஆனால் இது போன்ற பரப்புரைகளை தாரா சந்த், முகமது ஹபிப், இர்ஃபான் ஹபிப், ஷிரீன் மூஸ்வி, ஹெர்பான்ஸ் முகியா, ஆட்ரி ட்ரஸ்க் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இஸ்லாமிய மன்னர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டதாகவும் இதற்கு அப்போதைய அரசியல் சூழல்கள் தந்த ஊக்கமே காரணம் என்றும் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும் காலனி ஆதிக்க காலத்திற்கு முன்பு இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் கடும் மோதல் போக்கு காணப்பட்டது என்பதற்கு பெரிய ஆதாரங்கள் ஏதுமில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் சமஸ்கிருதம் அடிப்படையிலான இந்து கலாசாரம் துளிர் விட்டதே முகலாயர் காலத்தில்தான் என்கின்றனர் அவர்கள்.

இந்து மதத்தை சகிப்புத் தன்மை மிக்க மதமாக கருதுகிறீர்களா?

படத்தின் காப்புரிமை Getty Images

என்னை பொறுத்த வரை அனைத்து மதங்களுமே சகிப்புத்தன்மைக்கு அப்பாற்பட்டவைதான். இதற்கு இந்து மதம் மட்டும் விதிவிலக்கல்ல... பிராமணியத்துக்கும் பெளத்தத்திற்கும்....இடையே பழங்கால மற்றும் இடைக்காலங்களில் மோதல் இருந்ததற்கான ஆதாரங்களை பாருங்கள்...கிறிஸ்துவுக்கு 150 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பதஞ்சலி அவரது நூலான மகாபாஷ்யாவில் கூறியது மிகவும் பிரபலம். பிராமணர்களும் பெளத்தர்களும் பாம்பும் கீரியும் போல எதிரிகள்...இது அவர்களின் இலக்கியங்களிலேயே வெளிப்படும்...நாடெங்கும் இருந்த புத்த மடாலயங்கள், கட்டடங்கள் இடித்து வீழ்த்தப்பட்டிருப்பதே மோதல் நடந்ததற்கான கண்கண்ட சாட்சிகளாக உள்ளன. புத்த மதம் இந்தியாவில் வேர் விடாமல் மறைந்து போனதற்கு அதற்கு எதிரான பிராமணியத்தின் வீச்சுதான் காரணம். இதிலிருந்தே இந்து மதம் சகிப்புத்தன்மை மிக்க மதமல்ல என உணரலாம்.

பாரதம் என்ற கருத்தாக்கம் எப்போது, எப்படி உருவானது?

பாரதம் என்பது காலங்களுக்கு அப்பாற்பட்டது எடெர்னல் என்று இந்துத்துவவாதிகள் தொடர் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பாரதம் என்ற நிலப்பரப்பு இந்துக்களின் வேதங்களில் கூட காணப்படவில்லை. வேதங்கள்தான் இந்தியாவில் இருப்பதிலேயே பழமையான ஆவணங்களாக இந்துக்கள் கருதுகிறார்கள். கிறிஸ்துவுக்கு முந்தைய நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர் காரவேலா காலத்தில் கிடைத்த ஆவணங்களில்தான் முதன்முதலாக பாரதவர்ஷா என்ற பெயர் கையாளப்பட்டுள்ளது.

அதுவும் பாரதம் என்ற பகுதி மகத தேசம் இல்லாத பிற வட இந்திய பகுதிகளைத்தான் சுட்டிக்காட்டுகிறது. மகாபாரதத்தில் பாரதம் என்ற பெயர் தற்போதைய நாட்டின் பெரும்பகுதியை குறிப்பது போல் சொல்லப்பட்டிருந்தாலும் தக்காண பகுதிகள் பற்றி அதில் தெளிவாக எதுவும் இல்லை. பாரதவர்ஷா என புராணங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு எல்லைகள் குறிப்பிடபட்டுள்ளன. எந்த ஒரு பழமையான இந்திய ஆவணங்களிலும் அன்னை என தேசம் சித்தரிக்கப்படவில்லை.

பாரத தாய் என்ற சொல்லாக்கம் முதன்முதலாக துவிஜெந்தர் லால் ராய்( 1863-1913) பாடலில்தான் குறிப்பிடப்படுகிறது. பிறகு அச்சொல் பங்கிம் சந்திர சட்டர்ஜியின் ஆனந்த மடம் நூலில் இடம்பெற்றது. பாரதமாதாவின் சித்தரிப்பு உருவத்தை முதன்முதலாக 1905ல் அபனிந்தரநாத் ராய் என்பவர் வரைந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பிராமணியமும் புத்த மதமும் எப்போதும் ஒத்துப்போனதில்லை என உங்கள் புதிய புத்தகத்தில் கூறியுள்ளீர்கள். இதற்கு என்ன பொருள்? இதற்கும் தற்போது தலித்துகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பின்னணியில் பிராமணிய - புத்தமத மோதலை எப்படி பார்க்கிறீர்கள்?

இந்துமதம் என்பது சகிப்புத்தன்மை இல்லாதது என நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். பிராமணர்கள் என்றாலே எப்போதும் பெளத்த எதிர்ப்பாளர்கள்தான். தற்போது தலித்துகள் கொடுமைகளை எதிர்கொள்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பவுத்தர்கள். இந்த கொடுமைகள் என்பது சாதியை வேராக கொண்டது. இந்து மதம் என்ற கட்டமைப்பில் தலித்துகளுக்கு கடைசி இடம் தரப்பட்டுள்ளது. இவர்கள் பசுவின் இறைச்சியை உண்பது இவர்கள் கலாசாரம். ஆனால் இவ்வாறு உண்பதை இந்துக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். இவர்கள் பசி வியாபாரிகளையும் மாட்டிறைச்சி உண்பவர்களையும் தாக்குவதில் ஆச்சரியமில்லை.

தற்காலத்தில் இந்து அடையாளம் என்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

இந்து மதம் என்பது பல்வேறு மதப்பிரிவுகள், நம்பிக்கைகள், நடைமுறைகள் ஆகியவற்றின் கலவையாகும்.

ஆனால் இந்துத்துவாதிகள் என்பவர்கள் அம்மதத்தை ஒற்றைத்தன்மை கொண்டதாக சித்தரிக்க முயல்கிறார்கள். இந்து மதத்தின் பன்முகத் தன்மையை சீர்குலைக்க முயல்வதுதான் புதிய அடையாளங்கள் தோன்றுவதற்கும் அவை ஆக்ரோஷமாகவும் பயங்கரவாத தன்மையுடனும் காணப்படுவதற்கும் இதுதான் காரணம்.

மற்ற கடவுளரை விட ராமரை உயர்த்திப்பிடிப்பது, ராமாயணத்தை பிற இதிகாசங்களை விட உயர்வாக காட்டுவது போன்றவை இதற்கு உதாரணங்கள். தற்காலத்திற்கேற்றவாறு மனுஸ்மிருதியை மாற்றி எழுத ஒரு இந்துத்துவ அமைப்பு முயன்றதாக அண்மையில் கேள்விப்பட்டேன். உண்மையில் இல்லாத ஒற்றைத் தன்மை என்ற ஒன்றைக்கொண்டு நவீன இந்திய தேசத்தை இருண்ட காலத்தில் தள்ளும் செயல்தான் தற்போது நடந்துகொண்டுள்ளது.

பசு என்பது எப்போது கலாசார அடையாளமாக உருவெடுத்தது?

பசு வதைக்கு எதிரான மனப்பாங்கு பழங்காலத்தின் இறுதிப்பகுதியிலும் இடைக்காலத்தின் தொடக்கத்திலும் தொடங்கியது.

இஸ்லாமியர்கள் என்று வரும்போது இந்த மனப்பாங்கு மேலும் தீவிரமடைகிறது. இஸ்லாமியர்கள் என்றாலே மாட்டிறைச்சி உண்பவர்கள் என்ற தோற்றம்தான் ஏற்பட்டுள்ளது. பசு என்பது இடைக்காலத்தில் உணர்வுபூர்வமான கலாசார அடையாளமாக மாறத்தொடங்கி மராத்திய வீரர் சிவாஜி காலத்தில் இது மேலும் வலுப்பட்டது.

சிவாஜி என்பவர் கடவுளின் அவதாரமாக கருதப்பட்டு பிராமணர்களையும் பசுக்களையும் காக்க வந்தவராக கருதப்பட்டார். ஆனால் பசு என்பது அரசியல் ரீதியாக மக்களை ஒருங்கிணைக்க பயன்படுத்தும் போக்கு 1870களில் நடந்த சிக் குலா இயக்கத்தின்போதுதான் தொடங்கியது.

இதே சமயத்தில்தான் 1882ல் தயானந்த சரஸ்வதி கோ ரக்ஷனி சபையை தொடங்கினார். பசு பாதுகாப்பு தீவிரமடைந்த நிலையில்தான் பாரதம் என்பது பாரத மாதாவாக மாறியது.

பசுவை தேசத்தாய் என விளித்தார் ஒரு முதலமைச்சர். இது போன்ற செயல்கள்தான் இந்திய சமூக ஒற்றுமையை சீர்குலைய வைக்கின்றன.

ராமர் என்பவர் அரசியல் கடவுள் ஆகிவிட்டார். 2019 மக்களவை தேர்தல் தொடங்கும் நிலையில் ராமனை மையமாக வைத்து அரசியல் செய்யும் போக்கு தீவிரமடைய உள்ளது. 17 ம் நூற்றாண்டின் இறுதி, 18ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ராமனுக்கு என்று வட இந்தியாவில் கோயிலே இல்லை என்று எழுதியிருந்தீர்கள்?

இந்துத்துவ பட்டாளம் என்ன வேண்டுமானாலும் கூறட்டும்...17, 18ம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் வட இந்தியாவில் ராமர் கோயில் இருந்ததற்கான ஆதாரங்களே இல்லை. மத்திய பிரதேசத்தில் 12 ம் நூற்றாண்டை சேர்ந்த சில ராமர் கோயில்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. உண்மையில் அயோத்தியில் ஜைன மதமும் பவுத்த மதமும்தான் புகழ்பெற்று விளங்கின. 1528ல் அயோத்தியில் மீர் பக்கி மசூதி கட்டும்போது அங்கு ராமர் கோயில் இல்லை.

இந்தியாவை அனைவருக்குமான பூமியாக மாற்ற வரலாறு எத்தகைய பங்களிப்பை வழங்க முடியும் என கருதுகிறீர்கள்?

இந்தியாவை அனைவருக்குமான நாடாக மாற்ற வரலாற்று நிபுணர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும். இதுவரை சாமானிய மனிதனுக்கு புரியாத சொல்லாடல்களில்தான் அவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆங்கிலம் மட்டுமல்லாமல் மற்ற மாநில மொழிகளிலும் அவர்கள் வரலாற்று உண்மைகளை எழுத வேண்டும். கடந்த காலத்தில் இருந்து பாரபட்சம் இல்லாமல் கற்க வேண்டியது என்ன என கற்றுத்தர வேண்டும். மதம் தொடர்பான பாரபட்சமற்ற அணுகுமுறையே அனைவருக்குமான தேசமாக இந்தியாவை மாற்றும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :