பெண்களுக்கு எதிரான வன்முறைகள்: தமிழகத்தில் சிறப்பு செல்

சிறப்பு செல்

பட மூலாதாரம், Getty Images

பெண்களின் பிரச்சனைகளை பிரதானப்படுத்தி அவர்களுக்காக மட்டுமே சிறப்பு செல் ஒன்று தமிழ்நாட்டில் திறக்கப்பட்டுள்ளது.

தேசிய பெண்கள் ஆணையம் மற்றும் டாடாவின் சமூக அறிவியல் அமைப்பு ஆகியவை தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து தொடங்கியதுதான் பெண்களுக்கான இந்த சிறப்பு செல்.

சென்னை, மதுரை, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களில் முதலில் இது தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு 3ஆம் தேதியன்று சென்னை காவல்துறை ஆணையர் விஷ்வனாதன் இதனை தொடங்கி வைத்தார்.

குடும்ப வன்முறை, பணியிடத்தில் பாலியல் தொல்லை, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவளித்து வசதி ஏற்படுத்தி தருவது என அனைத்தையும் இந்த சிறப்பு செல் பார்த்துக் கொள்கிறது

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவும் உதவியும்

இதில் பணியாற்றும் சமூக சேவகி மோகனப்பிரியாவை பிபிசி தமிழ் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, இந்த செல் எதற்கு, இதனால் என்ன பயன் என்பதை விவரித்தார்.

"பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அனைத்து வகைகளிலும் ஆதரவும் உதவியும் தருவதே இந்த சிறப்பு செல்லின் நோக்கம். நாங்கள் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்குவதோடு, சட்ட மற்றும் மருத்துவ ரீதியான உதவிகளையும் வழங்குகிறோம்" என்று தெரிவித்தார்.

உதாரணமாக பெண் ஒருவரின் கணவர் குடிக்கு அடிமையாகியிருந்து, அப்பெண்ணால் வீட்டில் இருக்க முடியாத சூழல் இருந்தால், அவர்கள் தற்காலிக விடுதிகளில் தங்கிக்கொள்ள வசதி ஏற்படுத்தி கொடுப்போம். தேவைப்பட்டால், நீண்ட நாட்கள் இருக்கவும் விடுதிகள் ஏற்பாடு செய்து தரப்படும் என்றார்.

பட மூலாதாரம், ROBERTO SCHMIDT

தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இருந்தால் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும் என்று தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட பெண்களின் பலவீனத்தை அறிந்து அதற்கு ஏற்றாற்போல நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

"முக்கியமாக பெண்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கு என்பதை அவர்களுக்கு உணர்த்துவோம்."

அவர்களுக்கான பிரச்சனைளுக்கு அவர்களே தீர்வு தேடும்வரை, அவர்கள் கூடவே பயணித்து நல்ல நிலைக்கு கொண்டு வருவதே எங்கள் இலக்கு.

எவ்வாறு தொடர்பு கொள்ளலாம்?

சென்னை அண்ணா சாலையில் இயங்கி வரும் இந்த பெண்களுக்கான சிறப்பு செல்லின் தலைமை அலுவலகத்தில், திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பாதிக்கப்பட்ட பெண்கள் அணுகலாம்.

இந்த குறிப்பிட்ட நேரத்தை தாண்டி யாரேனும் தொடர்பு கொண்டால்கூட, அவர்களுக்கு உதவ தயாராக இருப்பதாக மோகனப்பிரியா தெரிவிக்கிறார்.

மேலும், செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில், அவர்களை அறிமுகப்படுத்திக்கொள்ள, மற்ற காவல்நிலையங்களுக்கு பயணம் செய்வது, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது, போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தப்படும் என்று அவர் கூறினார்.

இந்த சிறப்பு செல்லுக்கு, காவல்நிலையங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் என அனைத்து தரப்பில் இருந்தும் வழக்குகள் பரிந்துரைக்கப்படும்.

பெண்கள் சிறப்பு செல்லை தொடர்பு கொள்ள: 9498336002

தொடர்ந்து தொடர்பு கொள்ளும் பாதிக்கப்பட்ட பெண்கள்

பட மூலாதாரம், PEDRO UGARTE

பெண்களுக்கான சிறப்பு செல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் முன்பே, பல அழைப்புகள் வந்த வண்ணம் இருந்ததாகவும், தற்போதும் பல பெண்கள் தங்களை தொடர்பு கொள்வதாகவும் கூறுகிறார் மோகனப்பிரியா

வீட்டில் கொடுமை, பணியிடத்தில் பாலியல் தொல்லை, விவாகரத்து விவகாரம் என எல்லா பிரச்சனைகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல் தன்னை தொடர்பு கொண்ட பெண் ஒருவருக்கு எப்படி உதவி வழங்கப்பட்டது என்பதையும் இவர் நம்முடன் பகிர்கிரார்.

"சில நாட்களுக்கு முன் உதவிக்காக ஒரு பெண் எங்களை தொடர்பு கொண்டார். தனியார் மருத்துவமனை பணியில் இருந்த அவருக்கு, குடும்ப சூழல் சரியானதாக இல்லை. வீட்டில் கணவர் தொல்லையினால் பல கொடுமைகளை எதிர்கொண்டிருந்த அவரை வேலைக்கு வேண்டாம் என்று மருத்துவமனை நிர்வாகம் நீக்கியது. அதனை எதிர்த்து போராட முடிவு செய்த அப்பெண் எங்களை தொடர்பு கொண்டார். உடனே நிர்வாகத்திடம் பேசி, வீட்டில் அவரது நிலை என்ன என்பதை புரிய வைத்தோம். அவருக்கு தற்போதைய தேவை நல்ல ஆதரவு என்றுக்கூறி மீண்டும் அவருக்கு பணி கிடைக்கும்படி செய்தோம்" என்கிறார்.

வரவேற்கத்தக்கது

பெண்களுக்கு எதிரான இவ்வாறான சிறப்பு செல் அமைப்பது வரவேற்கத்தக்கது என்று கூறுகிறார் பிபிசியிடம் பேசிய குடும்பநல வழக்கறிஞர் சாந்தகுமாரி.

ஆனால், இது எவ்வாறு செயல்படப் போகிறது என்ற தெளிவு வேண்டும் என்றும், நல்ல விளைவுகளை அளித்தால் அது மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு தேசிய குற்றப்பதிவுகள் ஆணையத்தின் தரவுகள்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :