மெரினா கடற்கரையில் இடம் பிடிப்பது ஏன் முக்கியமானது?

தமிழக திராவிடத் தலைவர்கள் பலரும் இறப்பிற்குப் பிறகு சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்படுகிறார்கள். அங்கு அடக்கம் செய்யப்படுவது மிக முக்கியமானதாகவும், கெளரவமானதாகவும் கருதப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

உலகின் இரண்டாவது நீண்ட நகர்ப்புற கடற்கரையான மெரினா கடற்கரையின் வடகோடியில் அமைந்திருக்கிறது முதலமைச்சர் சி.என். அண்ணாதுரையின் நினைவிடம். மெரினா கடற்கரையில் முதன்முதலாக நல்லடக்கம் செய்யப்பட்ட முதலமைச்சர் அவர்தான்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழக முதல்வர்களாகப் பதவிவகித்தவர்களில் சி.என். அண்ணாதுரைக்கு முன்பாக மரணமடைந்தவர் பி.எஸ். குமாரசாமி ராஜா மட்டுமே.

1949 ஏப்ரல் 6ஆம் தேதி முதல் ஏப்ரல் 10, 1952 வரை இவர் முதலமைச்சராகப் பதவிவகித்தார். பதவியைவிட்டு விலகி ஐந்தாண்டுகளுக்குப் பின் 1957 மார்ச் 16ஆம் தேதியன்று அவர் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் அவரது குடும்ப வழக்கப்படியே நடந்து முடிந்தன.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அண்ணாதுரை மறைந்தபோது, அவருக்கு முந்தைய பிற முதலமைச்சர்களான ஓ.பி. ராமசாமி ரெட்டியார், ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம் ஆகியோர் உயிருடனேயே இருந்தார்கள். திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரான பெரியாரும் அப்போது இருந்தார்.

தவிர, முதலமைச்சர் பதவியில் இருக்கும்போதே அதுவரை யாரும் மரணமடைந்திருக்கவில்லை. ஆகவே, மெரினாவில் புதைப்பது குறித்தோ, மிகப் பெரிய நினைவுச் சின்னம் எழுப்புவது குறித்தே அந்தத் தருணத்தில் யாரும் யோசிக்கவும் இல்லை.

அண்ணாதுரை மறைந்தபோது குடும்ப வழக்கப்படி உடலை எரியூட்ட அவரது குடும்பத்தினர் முடிவுசெய்தனர். அடுத்த நாள் காலையில் கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் உடல் எரியூட்டப்படவிருப்பதாக நாளிதழ்களிலும் செய்தி வெளியானது.

ஆனால், அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க. அதனை விரும்பவில்லை.

தனது வாழ்க்கை வரலாற்று நூலான நெஞ்சுக்கு நீதியில் அண்ணாதுரையின் மறைவு குறித்த பகுதியில், "தமிழினத்தையே தலை நிமிர்ந்திடச் செய்து, கலங்கரை விளக்கமாக வழிகாட்டிய, ஒளியூட்டிய அண்ணா அவர்களுக்குக் காலாகாலத்திற்கும் அழியவே அழியாத ஒரு நிலையான நினைவுச் சின்னம் எழுப்புவதே முறையான நன்றிக்கடன் ஆகும் என்று நம்பினோம். அதற்கு அவர்தம் சடலத்தை எரிக்காமல் புதைக்கச் செய்து, அங்கே கல்லறை எழுப்புவதே சரி என்றும் கருதினோம்" என கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்குப் பிறகு, அண்ணாதுரையின் மனைவி ராணி அண்ணாதுரை மற்றும் அவரது பிற குடும்ப உறுப்பினர்களிடம் பேசி அவரது உடலைப் புதைக்க ஒப்புதல் பெறப்பட்டது.

அதன் பிறகு, மெரினாவின் வடகோடியில் புதர் மண்டிக் கிடந்த இடம் தேர்வுசெய்யப்பட்டது. அந்த இடம் உடனடியாக சுத்தம்செய்யப்பட்டு, அண்ணாவின் உடல் அங்கே அடக்கம் செய்யப்பட்டது.

அண்ணாவின் கல்லறையின் மீது, "எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது" என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டன.

ராஜாஜி, காமராஜர் ஆகியோர் மறைந்தபோது குடும்ப வழக்கப்படியே அவர்களது உடல்கள் எரியூட்டப்பட்டன. காமராஜர், பக்தவத்சலம் ஆகியோருக்கு சர்தார் படேல் சாலையில் நினைவு மண்டபங்கள் பிறகு அமைக்கப்பட்டன.

அண்ணாவுக்குப் பிறகுதான் காமராஜர், ராஜாஜி, பக்தவத்சலம் ஆகியோர் மரணமடைந்திருந்தாலும் திராவிட இயக்க சித்தாந்தத்தின் சின்னமாகப் பார்க்கப்பட்ட அண்ணாவின் நினைவிடத்தை ஒட்டி தங்களுக்கு நினைவிடம் அமைக்கப்படுவதை விரும்பியிருக்க மாட்டார்கள்.

அண்ணாதுரைக்குப் பிறகு, திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரான பெரியார் மறைந்தபோது அவரது உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை அவரது இயக்கமான திராவிடர் கழகம் எழுப்பவில்லை. அவர் பெரியார் திடலிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்.

1987 டிசம்பரில் முதலமைச்சராக இருந்த எம்.ஜி. ராமச்சந்திரன் மரணமடைந்தபோது, மீண்டும் மெரினா கடற்கரை முக்கியத்துவம் பெற்றது. எம்.ஜி.ஆரை அண்ணாதுரையின் நினைவிடத்திற்கு அருகில் அடக்கம்செய்ய அப்போதைய தமிழக அமைச்சரவை முடிவுசெய்தது.

இதற்குப் பிறகு, 2016ஆம் ஆண்டின் இறுதியில் ஜெயலலிதா மரணமடைந்தபோது அவரது உடலையும் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய அமைச்சரவை முடிவெடுத்தது.

ஆனால், கடற்கரை ஒழுங்காற்று மண்டல விதிகள் கடுமையாக இருந்ததால், புதிதாக ஓரிடத்தைத் தேர்வுசெய்யாமல், அ.தி.மு.கவின் நிறுவனரும் மறைந்த முதல்வருமான எம்.ஜி.ஆரின் நினைவிடத்தின் அருகிலேயே ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தி.மு.க. தலைவர் கருணாநிதியைப் பொறுத்தவரை தனது உடலுக்கு எப்படி இறுதிச் சடங்குகள் நடக்க வேண்டுமென கருணாநிதி கூறவில்லை.

ஆனால், அவரது தன் வரலாற்று நூலான நெஞ்சுக்கு நீதியின் முதல் பாகம் வெளியானபோது, அவர் ஒய்வெடுக்கும் காலம் வந்துவிட்டதாக பலர் விமர்சித்தனர்.

அற்குப் பதிலளித்த கருணாநிதி, "ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வுகொண்டிருக்கிறான் என்று என் கல்லறையின் மீதுதான் எழுதப்படும்" என்று குறிப்பிட்டார். இதே வாசகங்களை சமீபத்தில் வெளியான நெஞ்சுக்கு நீதியின் ஆறாவது பாகத்தின் முன்னுரையிலும் குறிப்பிட்டார் அவர்.

அவர் விரும்பியபடியே அவரது உடல் வைக்கப்பட்ட சந்தனப் பேழையின் மீது இந்த வாசகங்கள் தற்போது பொறிக்கப்பட்டிருக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :