கருணாநிதியின் இளம் வயது வறுமை கற்றுத்தந்த பாடங்களால் உருவான திட்டங்கள்!

படத்தின் காப்புரிமை Hindustan Times
Image caption கருணாநிதி

அன்றைய முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் மறைவுக்குப் பிறகு, 1969-ல் முதல் முறையாக கருணாநிதி முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். ஆனால், அதையடுத்து நடந்த 1971 தேர்தலில் வெற்றி பெற்று 1976 வரை அவர் நடத்திய ஆட்சியே முதல் முறையாக அவர் கிட்டத்தட்ட முழு ஐந்தாண்டு காலமும் பதவி வகித்த முதல் காலம். அவர் முதல்வராக இறுதியாக ஆண்ட காலம், 2006 முதல் 2011 வரை.

முதல் முழு ஆட்சிக் காலத்துக்கும் இறுதி ஆட்சிக் காலத்துக்கும் இடையில் ஏராளமான பரிணாமங்களைக் கண்டவர் கருணாநிதி. அவரது அனுபவங்கள் ஒவ்வொன்றும் அவர் செயல்படுத்திய திட்டங்களிலும் எதிரொலித்தன என்பது ஆய்வாளர்களின் பார்வை.

அந்த வகையில், முதல் மற்றும் கடைசி ஆட்சிக்காலத்தில் அவர் கொண்டுவந்த திட்டங்கள் என்ன, அவரின் முடிவுகள் மக்களுக்கு பயனளித்தனவா, வளர்ச்சித்திட்டங்களை கொண்டுவந்தபோதும் அடுத்த தேர்தல்களில் அதிமுகவால் ஏன் தோற்கடிக்கப்பட்டார், திமுகவின் வெற்றியை எவ்வாறு சாத்தியமாக்கினார்?

படத்தின் காப்புரிமை Hindustan Times
Image caption கருணாநிதி

மனிதனை மனிதன் சுமந்து செல்லும் இழிநிலை இருக்கக்கூடாது என்று கூறி கை ரிக்சாக்களை ஒழித்து, சைக்கிள் ரிக்சா முறையை ஊக்குவித்தது, சேலம் மாவட்டத்தில் உருக்காலையை திறக்க எடுத்த முயற்சிகள் பெரும் கவனம் பெற்றன. அரசு நிர்வாகத்தைப் பொறுத்தவரை திங்களன்று மாவட்ட ஆட்சியர்கள் பொதுமக்களிடம் மனு பெற்று, பிரச்சனைகளை தீர்ப்பதற்கு 'மனு நாள்' நடத்தவேண்டும் என்ற உத்தரவும், காவல்துறையின் சீரமைப்பிற்காக ஆணையம் கொண்டுவந்ததும் குறிப்பிடத்தக்கவை.

2006-11வரை முதல்வராக இருந்த காலத்தில் நியாயவிலைக் கடைகளில் ரூ.2க்கு அரிசி வழங்கும் திட்டம், எட்டு ஏக்கர் பரப்பளவில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைத்தது, கோவை, மதுரை,திருச்சி மற்றும் நெல்லையில் தகவல் தொழில்நுட்ப பூங்காங்களை அமைத்தது போன்ற முக்கிய திட்டங்களை செயல்படுத்தினார்.

முதலும் முடிவும் எப்படி அமைந்தது?

முறைசாரா தொழிலாளர்களுக்கான வாரியங்களை அமைத்தது, மதுரையில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி உள்ளிட்ட நான்கு பஞ்சாயத்துக்களில் முதன்முதலாக தேர்தல் நடத்தப்பட்டு ஜனநாயக முறைப்படி பஞ்சாயத்து தலைவர்கள் தேர்வுசெய்யப்பட்டது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

2006 தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டதுபோலவே ஒவ்வொரு இல்லத்திற்கும் இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டம் நாடுமுழுவதும் பேசப்பட்டது. திமுகவின் தேர்தல் அறிக்கைதான் 2006ம்ஆண்டின் ஹீரோ என அன்றைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளிப்படையாகவே பேசினார்.

ஆட்சிக்கு வந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் முழுவதுமாக ரூ.6,866 கோடி தள்ளுபடி செய்தது திமுக. அதுவரை இருந்த அரசுகள், வட்டியை மட்டுமே தள்ளுபடி செய்துவந்த நிலையில், கடன்தொகை முழுவதையும் ரத்து செய்தது பெரிதும் பேசப்பட்டது.

படத்தின் காப்புரிமை AFP

கருணாநிதி முதல்வராக செயல்பட்ட முதல் மற்றும் இறுதி ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்த திட்டங்களால் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் எஸ்.ஆனந்தியிடம் கேட்டோம்.

முதலில் கருணாநிதியின் பின்புலத்துடன் அவர் கொண்டுவந்த திட்டங்களை அலசுவது முக்கியம் என்றார் அவர். ''இளவயதில் வறுமை, உணவு, படிப்பு என அடிப்படை தேவைகளுக்காக அவர் சந்தித்த சவால்கள் பிற்காலத்தில் அதிகாரத்திற்கு வந்தபோது, சமூகநீதிக்காக திட்டங்களை கொண்டுவரவேண்டும் என்று அவரை தூண்டியது. கருணாநிதி கொண்டுவந்த முக்கிய திட்டங்களை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் விரிவுபடுத்துவது அல்லது நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது என்ற அளவில் செயல்படுத்தினார்கள். தொடக்கப்புள்ளியாக கருணாநிதி இருந்தார் என்பது வெளிப்படை,''என்கிறார் ஆனந்தி.

முன்மாதிரி முதல்வர்

''முதல் ஆட்சிக்காலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக சட்டநாதன் கமிஷன் கொண்டுவந்ததால், நீண்ட காலத்தில் பின்தங்கிய குடும்பங்களில் இருந்துவந்த பல்லாயிரம் பேர் இடஒதுக்கீட்டில் படிக்கவும், வேலைவாய்ப்பு பெறவும் முடிந்தது. இந்தியாவில் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்கள் பலரும் ஏற்றம் கண்டுள்ள மாநிலமாகவும் தமிழகம் இருப்பதற்கு காரணம் இடஒதுக்கீடு,'' என்றார் அவர்.

இறுதி ஆட்சிக்காலத்தை பொறுத்தவரை இலவசமாக தொலைக்காட்சி பெட்டி கொடுத்தது உள்ளிட்ட இலவசபொருட்களை வழங்கும் கவர்ச்சித் திட்டங்கள் மக்களை கவர்ந்திழுக்க பயனளித்திருந்தாலும், சமூக மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்கிறார் ஆனந்தி.

''கடந்த ஐம்பது ஆண்டு காலத்தில், திமுகவின் அமைச்சரவை மற்றும் திமுகவில் முக்கிய பொறுப்புகளில், முடிவு எடுக்கும் பொறுப்புகளில் பெண்களின் பங்கு மிகவும் குறைவு. குடும்ப பொறுப்பை தாண்டி அரசியல் மற்றும் பொதுவாழ்வில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்கவேண்டும் என்ற இலக்கை அடைவதில் பெரும் பின்னடைவை அவர் சந்தித்தார். சத்தியவாணிமுத்து, சற்குணம் என வெகுசிலரே திமுகவின் பெண் முகங்களாக தெரிந்தார்கள். இன்றும் பெண் முகங்களை தேடவேண்டிய நிலையில்தான் உள்ளது,'' என்று கூறிய ஆனந்தி, பெண்கள் வாக்குவங்கியாக, பயனாளியாக மட்டுமே தக்கவைக்கப்பட்டதாகவும் தோன்றுகிறது என்கிறார்.

படத்தின் காப்புரிமை The India Today Group

தமிழகத்தில் சமூக நீதிக்காக தொடங்கப்பட்ட அமைப்பில் உருவான தலைவர் ஒருவாரல் சாதிக்கமுடிந்தவை என பட்டியலிட்டால் அதில் கருணாநிதியின் சாதனைகளை மற்ற முதல்வர்கள் எட்டமுடியவில்லை. ஆனால் சமூகமாற்றத்தை மையமாக கொண்டு கட்சியை நடத்திவந்த கருணாநிதியிடம் பெண்களும்,தாழ்த்தப்பட்ட மக்களும் இன்னும் பல தளங்களில் ஒடுக்கப்பட்டவர்களும் கொண்டிருந்த எதிர்பார்ப்பை அவர் முழுமையாக பூர்த்திசெய்தாரா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது என்றார்.

முன்னோடி திட்டங்களை கொண்டுவந்தவர்

கருணாநிதி முதல்வராக செயல்பட்ட ஐந்து முறையும் பல வெற்றிதிட்டங்களை கொண்டுவந்தபோதும் ஏன் தொடர்ந்து ஆட்சி அமைக்க முடியவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. இதுதொடர்பாக அரசியல் விமர்சகர் மற்றும் எழுத்தாளர் அருணனிடம் கேட்டோம்.

''திராவிடர் கழகத்தில், பெரியார் பள்ளியில் இருந்து வந்த கருணாநிதி சமூகமாற்றத்தை தனது திட்டங்களில் காணவேண்டும் என்பதை உறுதியாக நம்பியவர். முதல் முறையாக முதல்வராக இருக்கும்போதும், அவரது இறுதி ஆட்சிக்காலத்தின் போதும் கொண்டுவந்த திட்டங்கள் பலவும் முன்னோடியான திட்டங்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவை எவ்வாறு செயலுக்கு வந்தன என்பதையும் பார்க்கவேண்டும்,'' என்றார்.

''முதல் ஆட்சிக்காலத்தில் தனியார் வசம் இருந்த பேருந்து போக்குவரத்தை அரசுடமையாக்கி, அரசு போக்குவரத்து கழகங்கள் அமைத்ததால், பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பெற்றனர். சிறு கிராமங்களில் இருந்தவர்கள் தங்களது வேலைக்காக அண்டை நகரங்களுக்கு செல்ல பேருந்துகள் உதவின. எளிய மக்களின் நகர்தலுக்கு பெரும் உதவியாக இருந்த பேருந்துகள் அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தியது. இதுவே பின்னாளில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அளிக்கும் திட்டத்திற்கு முன்னோடியாக அமைந்தது,''என்றார்.

''இந்தியாவில் மின்சார வசதி இல்லாத கிராமங்கள் இன்றும் உள்ளன. ஆனால், 1970ல் தமிழகத்தின் மொத்த கிராமங்களான 57,000 கிராமங்களில் 42,000 கிராமங்களில் மின்சார இணைப்புகள் கொடுக்கப்பட்டது என்பது பெரும் சாதனை. அதேபோல இறுதியாக 2006ல் தொடங்கி 2011வரை செய்த ஆட்சியிலும் மானிய விலையில் அரசி கொடுத்து நியாயவிலைக் கடைகளை வலுப்படுத்தி, சாதாரண மக்களின் உணவு பிரச்சினையை தீர்த்தது. உணவுக்காக அல்லாடத் தேவையில்லை என்ற நிலையை ஏற்படுத்தி, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள் பலவும் நம்பிக்கையோடு வாழ்வதற்கு இந்த திட்டம் உதவியது. கூட்டுறவு வங்கியில் விவசாயிகளின் கடனை உடனடியாக தள்ளுபடி செய்ததால், பலரும் பயன்பெற்றனர்,'' என்றார்.

இடஒதுக்கீட்டிற்கு வித்திட்ட சட்டநாதன்கமிஷன்

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தற்போது நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவர கருணாநிதியின் முதல் ஆட்சிக்காலத்தில் அமைத்த சட்டநாதன் கமிஷன்தான் காரணம் என்ற அருணன், ''பிராமண ஆதிக்கத்தை ஒடுக்கி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்பு அளிப்பது என்பதை திராவிடர் கழக காலத்தில் இருந்து பேசிவந்த கருணாநிதி, இடஒதுக்கீடு முறைக்கு வித்திட்டார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டுமே 69 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. கடைசி முறை முதல்வராக இருந்தபோது கூட அருந்ததியர் இன மக்களுக்கான உள் ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தி அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தார்,'' என்றார் அருணன்.

திமுக-வின் பின்னடைவு குறித்து பேசிய அவர்,''நலத்திட்டங்களை அடுக்கிக்கொண்டே போனாலும், ஊழல் புகார்கள் கருணாநிதியின் ஆட்சியில் அவர் மேற்கொண்ட பயன்தரும் திட்டங்களால் அவர் சேர்த்த புகழை நிலைகுலைய வைத்துவிட்டது. அதுவும் அவரது முதல்ஆட்சிக்காலம் மற்றும் இறுதி ஆட்சிக்காலத்திலும் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக அதிமுகவுக்கு ஆட்சியை பறிகொடுத்ததால், அதில் இருந்து மீண்டுவருவதில் சிரமம் இருந்தது,'' என்கிறார் அருணன்.

படத்தின் காப்புரிமை The India Today Group

2006-2011ல், மத்தியில் திமுகவின் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஊழல் வழக்குகளை சந்திக்க நேர்ந்ததால், கருணாநிதிக்கு கிடைக்கவேண்டிய தேர்தல் வெற்றியில் தொய்வு ஏற்பட்டது என்றார்.

2011ல் அடைந்த தோல்விக்கு மற்றொரு காரணமாக மின்சாரத் தட்டுப்பாடு அமைந்துவிட்டது. அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியில், தமிழத்தை மின்வெட்டு மாநிலம் என்ற நிலையில் இருந்து மின்மிகை மாநிலமாக மாற்றப்போவதாகச் சொல்லி ஓட்டு சேகரிக்கும் அளவுக்கு மின்வெட்டு பிரச்சனை விஸ்வரூபமாகி இருந்தது.

ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்திருந்தாலும், ஆட்சி அமைத்த ஒவ்வொரு முறையும் சமூகநீதியை நிலைநாட்டும் விதத்தில் அவர் அறிமுகப்படுத்திய பல திட்டங்கள் தற்போதும் கூட வேறு மாநிலங்களில் சாத்தியமா என்று தெரியவில்லை என்று கூறிய அருணன், கடைசி முறை முதல்வராக இருந்தபோது எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :