கருப்புக் கண்ணாடியும், மஞ்சள் சால்வையும் கருணாநிதியின் அடையாளமானது எப்படி?

  • 9 ஆகஸ்ட் 2018

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதியின் அடையாளமாக கருதப்படுவைகளில் கருப்புக்கண்ணாடியும், மஞ்சள் சால்வையும் அடங்கும்.

இவற்றை அவர் எப்போதிலிருந்து அணிய ஆரம்பித்தார், ஏன் அணிகிறார் என்பது போன்ற கேள்விகளுக்கு இந்த தொகுப்பு விடை அளிக்கும்.

மஞ்சள் துண்டிற்கான காரணம்?

கருணாநிதி வழக்கமாக வெள்ளைத் துண்டு அணியும் வழக்கமுடையவர். 1994ஆம் ஆண்டுக்குப் பிறகே அவர் மஞ்சள் துண்டு அணிய ஆரம்பித்தார். 1994ஆம் ஆண்டில் அவருடைய கன்னத்தில் சிறிய வீக்கம் ஏற்பட்டது. அவருடைய உமிழ்நீர்ச் சுரப்பியில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாகவே இது ஏற்பட்டது. ஆகவே அந்தப் பகுதியை கததகப்பாக வைத்துக்கொள்ள சால்வை ஒன்றை அணிந்தால் நல்லது என மருத்துவர்கள் தெரிவித்தனர். அப்போது அவர் அணிந்த சால்வை மஞ்சள் நிறத்தில் இருந்தது.

அது அவருக்கு நன்றாக இருப்பதாகவும் தனி அடையாளத்தைப் போல இருப்பதாகவும் உறவினர்களும் நண்பர்களும் கூறவே அவர் அதனைத் தொடர்ந்து அணிய ஆரம்பித்தார்.

மூடநம்பிக்கையின் காரணமாக கருணாநிதி இந்த வண்ணத்தில் துண்டை அணிவதாக கூறப்படுவது குறித்து பல பேட்டிகளில் கேள்வியெழுப்பப்பட்டபோது, இதைப் பற்றி ஓஷோ எழுதியதை கருணாநிதி மேற்கொள் காட்டியிருக்கிறார். "தன்னியல்பை ஆள்பவர் எவரோ, ஒளியும் தெளிவும் உண்மையுமானவர் எவரோ - அவரே மஞ்சளாடை அணியலாம்". .

அவர் கண்களில் என்ன பிரச்சனை? ஏன் கருப்புக்கண்ணாடி அணிகிறார்?

1953ஆம் வருடத்தில் பரமக்குடியிலிருந்து திரும்பி வரும்போது கருணாநிதி வந்த கார் திருச்சிக்கு அருகில் ஒரு மைல் கல்லில் மோதி விபத்திற்குள்ளானது. அந்த விபத்தில் கருணாநிதியின் இடது கண்ணிற்குச் செல்லும் நரம்பு பாதிக்கப்பட்டது. 12 முறை அந்தக் கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. பிறகு 1967ஆம் ஆண்டு செப்டம்பரில் மீண்டும் ஒரு கார் விபத்தில் கருணாநிதி சிக்கியபோது, இடது கண் மேலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு கண்ணில் தொடர் வலி நீடித்தது. 1971ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்குப் பிறகே கருணாநிதி கண்ணாடி அணிய ஆரம்பித்தார். முழுவதுமாக கண்ணை மறைக்கும்படி கண்ணாடி அணிந்திருந்த கருணாநிதி 2000த்தின் முதல் பத்தாண்டுகளின் முற்பகுதியில் கண் வெளியில் தெரியும்படியான கண்ணாடியை அணிய ஆரம்பித்தார்.

Image caption எம்.ஜி.ஆருடன் கருணாநிதி

எம்.ஜி.ஆரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டாரா கருணாநிதி?

ஈரோடு மாவட்டம் சென்றிருந்த கருணாநிதி, எம்ஜிஆர் இறந்த தினத்தன்று அதிகாலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து இறங்கினார். அவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் ரயில் நிலையத்திலிருந்து வரும் வழியில் மாலை வாங்கிக்கொண்டு எம்ஜிஆரின் உடல் வைக்கப்பட்டிருந்த ராமாவரம் தோட்டத்திற்குச் சென்றார். முன்னாள் அமைச்சர் மாதவன் அவரை உள்ளே அழைத்துச் சென்றார். பிறகு எம்.ஜி.ஆரின் உடலுக்கு கருணாநிதி அஞ்சலி செலுத்தினார்.

"நான் அவ்வாறு முடிவெடுத்து உடனடியாகச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தியிருக்காவிட்டால் பின்னர் நான் சென்றிருக்கவே முடியாது. அந்த அளவுக்கு இரு கட்சிகளிடையே காழ்ப்புணர்ச்சி பரவியிருந்தது" என இதனை நினைவுகூர்ந்தார் கருணாநிதி.

ஆனால், எம்.ஜி.ஆரின் மறைவை அடுத்து வெடித்த வன்முறையில் சென்னை மவுண்ட் ரோட்டில் இருந்த கருணாநிதியின் சிலை நொறுக்கப்பட்டது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்