ஓடும் ரயிலில் 'கிகி சேலஞ்ச்': வினோதமான தண்டனை அளித்த நீதிபதி

படத்தின் காப்புரிமை FUNCHO ENTERTAINMENT

மும்பையில் ஓடும் ரயிலில் வைரலாகி வரும் கிகி சேலஞ்சை மேற்கொண்ட மூன்று இளைஞர்களுக்கு அங்குள்ள ரயில் நிலையத்தை மூன்று நாட்களுக்கு சுத்தம் செய்யும் தண்டனைவிதித்து அங்குள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிகி சேலஞ்சை மேற்கொண்ட மூன்று இளைஞர்களை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, நீதிபதி இந்த தண்டனையை உறுதி செய்தார்.

அந்த இளைஞர்களின் காணொளியானது, வெவ்வேறு இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள் கிகி சேலஞ்சை எப்படி மேற்கொள்வார்கள் என்பதை சித்தரிக்கும் வகையில் இருந்தது.

காரில் டிரேக் என்னும் கனேடிய பாடகரின் கிகி பாடல் ஒலிக்க, ஓடும் காரிலிருந்து வெளியே குதித்து அந்த பாடலுக்கு நடனம் ஆட வேண்டும், அதை காரிலிருப்பவர் உள்ளிருந்த படியே பதிவு செய்வதே கிகி சேலஞ்ச் என்பதாகும். இதற்கு, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் மற்றும் இந்தியாவை சேர்ந்த அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஃபன்சோ என்டர்டைன்மெண்ட் என்னும் யூடியூப் பக்கத்தில், மும்பை ரயிலில் மேற்கொள்ளப்பட்ட கிகி சேலஞ்ச் காணொளியை இதுவரை இருபது லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

அந்த காணொளியில், ஒரு இளைஞர் ரயிலிலிருந்து கீழிறங்கி,, பாடலுக்கேற்ற நடனம் ஆட அதே ரயிலின் உள்ளே இருக்கும் மற்றொரு இளைஞர் கைபேசியில் படம்பிடிக்கிறார். மேலும், அந்த ரயில் நகர ஆரம்பிக்கும்போது, அதற்கு இணையாக ஓடிக்கொண்டே அவர் நடனமாடுகிறார். அதுமட்டுமில்லாமல், நகர்ந்துக்கொண்டிருக்கும் ரயிலின் கதவில் பாதி தொங்கியபடி அவர் நடனமாடுவதும் அந்த காணொளியில் இடம்பெற்றுள்ளது.

"நாங்கள் இந்த காணொளியை யூடியூபில் பார்த்தவுடன், விரார் ரயில் நிலையத்தில் பதிவாகியுள்ள கண்காணிப்பு கேமராவில் இளைஞர்களின் செயல்பாடு பதிவாகி இருப்பதை உறுதிசெய்தோம்" என்று பிபிசியிடம் கூறுகிறார் ரயில்வே துறை அதிகாரியான அனுப் ஷுக்லா.

அந்த மூன்று இளைஞர்களும் 'தவறான விஷயத்தை' மேற்கொண்டதாக குறிப்பிட்ட நீதிபதி, "உங்களுக்கும், மற்றவர்களுக்கும் அபாயத்தை விளைவிக்க கூடிய இந்த செயலை பற்றிய விழிப்புணர்வை மூன்று நாட்களுக்கு பொது மக்களுக்கு நீங்கள் அளிக்க வேண்டும்" என்று அப்போது நீதிபதிகள் கூறினர்.

இந்நிலையில், அந்த யூடியூப் பக்கத்தின் நிர்வாகி ஒருவர், அந்த காணொளியின் கீழ், கிகி சேலஞ்சை மேற்கொண்ட இந்த இளைஞர்களுக்கு இதைவிட மோசமான தண்டனையை அளிக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :