‘பாம்பு, வெள்ளம், டால்பின்’- பிரம்மபுத்திரா நதி அறியப்படாத தீவுகளில் ஒரு பயணம்
- ஜுலெஸ் மோண்டெக்
- பிபிசி
பிரம்மபுத்திரா ஆற்றில் ஏராளமான தீவுகள் உள்ளன. அவற்றில் 25 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். ஆனால், மைய நிலத்திலிருந்து தொலைவில் இருப்பதால் அந்த தீவுகள் குறித்து பெரிதாக யாருக்கும் தெரியாது. இப்போது அந்த சிறு தீவுகளும், அதில் வசிக்கும் மக்களின் எதிர்காலமும் அச்சுறுத்தலில் உள்ளது.
தீவுகளில் வாழும் அந்த எளிய மனிதர்களின் நிலை என்ன? என்று அறிந்து கொள்ள பிபிசி ஒரு நெடும் பயணத்தை மேற்கொண்டது.
'எங்கு காணினும் பாம்புகள்'
இந்த பயணத்தில் எங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தவை பாம்புகள்தான்.
மொனாய் டோலி பாம்பு கடியை எப்படி குணப்படுத்துவது என்று என்னிடம் விளக்கினார்.
நாங்கள் முதலில் சென்றது அஸ்ஸாமின் பெக்கலி தீவுக்குதான். அங்கு ஒரு வேளாண் நிலத்தில் கொளுத்தும் வெயிலில் நின்றுக் கொண்டிருக்கிறோம். எங்களிடம் பாம்பு கடியை எப்படி எதிர்கொள்வது என்று மொனாய் விளக்குகிறார்.
மொனாய் அந்தப் பகுதியை சேர்ந்தவர். திடகாத்திரமான மனிதர். அவர் அந்தப் பகுதியில் அதிகமிருக்கும் கல் பாம்புகள்தான் அதிகம் ஆபத்தானவை என்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
அந்த வகை பாம்புகள் கடித்தால் எப்படி குணப்படுத்துவது என்று நம்மிடம் விளக்கினார். பாம்பு கடித்த இடத்தில் வாயை வைத்து உறிஞ்சி அதன் மீது ஒரு மூலிகை பசையை தடவுவது குறித்து விவரித்தார்.
இந்த வீட்டு மருத்துவத்தை தாம் ஒரு மீனவரிடமிருந்து கற்றதாக கூறுகிறார். ஆனால், தாங்கள் இந்த பாம்புகளிடமிருந்து மட்டும் பிரச்சனையை எதிர்கொள்ளவில்லை என்று கூறுகிறார்.
1987 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருமழையால் தீவின் இந்த பகுதிக்கு வர நேரிட்டதாக விவரிக்கும் அவர், இங்கும் ஆபத்து தொடர்வதாகவும், இங்கிருந்து தப்பி செல்ல தயாராகவே இருப்பதாகவும் கூறுகிறார் அவர்.
ஏறத்தாழ 25 லட்சம் மக்கள், அதாவது அசாம் மக்கள் தொகையில் 8 சதவீத மக்கள் இந்த தீவுகளில் வசிக்கிறார்கள். இந்த தீவுகளில் வசிப்பவர்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதற்காக சுகாதார படகுகள் பணிக்கப்பட்டிருக்கின்றன. அந்த படகுகள் ஒன்றில்தான் நாங்கள் பெக்கலி தீவுக்கு சென்றோம்.
பிரம்மபுத்திர நதி அவர்கள் வாழ்வோடு பின்னி பிணைந்திருக்கிறது. அவர்களது நிலத்தை வளமாக்கி இருக்கிறது. அதன் மூலம் அவர்களது வாழ்வையும் மேம்படுத்தி இருக்கிறது. ஆனால், அதே நேரம் இதே நதி அவர்கள் வாழ்வுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்திருக்கிறது. அவர்கள் வாழ்வாதாரத்தை அளித்து அகதிகளாக இடம்பெயர செய்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பருவநிலை மாற்றம்தான். வெள்ளம், மண்சரிவு ஏன் அவ்வபோது நிலநடுக்கமும் அந்தப் பகுதியில் ஏற்படுகிறது. இதனால் சபோரி தீவு மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது.
இதனை தெரிந்து கொள்ளதன் அந்த நதியில் ஒரு பயணத்தை மேற்கொண்டோம்.
'நதியின் ஊடாக'
நிமதி நதிக்கரையிலிருந்து எங்கள் பயணத்தை தொடங்கினோம். அடர்ந்த மூடுபனி எங்கள் பயணத்தை தாமதப்படுத்தியது. நதி பெரும் அமைதியுடன் இருந்தது. எங்கும் நிசப்தம் வியாபித்து இருந்தது. ஆனால், இந்த பயணம் எளிமையாக இருக்கப்போவதில்லை என்பது பயத்தை தொடங்கிய போதே தெளிவாக தெரிந்துவிட்டது,
பட மூலாதாரம், Getty Images
இந்த நதி ஜனிக்கும் இடத்திலிருந்து ஏறத்தாழ 100 கிலோமீட்டர் தொலைவில் நாங்கள் இருந்தோம். திபெத்தில் ஜனிக்கும் இந்த நதி இமயமலை வழியாக பயணித்து, அருணாசல பிரதேசம், அசாம் என பயணிக்கிறது. பின் கங்கை, மேக்னா நதியில் கலந்து தனது 2800 கி.மீ பயணத்தை முடித்துக் கொண்டு வங்காள விரிகுடா கடலில் சங்கமிக்கிறது.
இந்த நதியில் 1950 ஆம் ஆண்டிலிருந்து 25 முறை வெள்ளம் வந்திருக்கிறது. 1977 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் 11 ஆயிரம் பேர் இறந்திருக்கிறார்கள்.
எப்போது வெள்ளம் ஏற்பட்டாலும் மிக மோசமாக பாதிக்கப்படுவது சபோரி தீவு மக்கள்தான்.
'சுகாதார படகு'
இவர்கள் வாழ்வுக்கு பேருதவியாக அமைந்தது 'சுகாதார படகு' தான். அதாவது அந்த தீவுகளில் வாழும் மக்களுக்கு சுகாதார வசதிகள் அளிப்பதற்காக மிதக்கும் மருத்துவமனையாக இந்த நதியில் படகு பயணித்து கொண்டிருக்கிறது.
இந்த சுகாதார படகு யோசனையே ஒரு மரணத்திற்குப் பின் தான் வந்திருக்கிரது. ஒரு வெள்ளத்தின் போது, கர்ப்பிணி பெண் ஒருவர் மைய நிலத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்வது தாமதமாகி இருக்கிறது. இதன் காரணமாக அவர் மரணமடைந்து இருக்கிறார். இந்த தகவல் அங்குள்ள பத்திரிகையாளர் சஞ்சோய்க்கு தெரிந்ததும், அவர் இந்த சுகாதார மருத்துவமனைக்காக முன் முயற்சி எடுத்திருக்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
திரைப்பட இயக்குநரும், ஆய்வாளரும் ஹஸாரிகா இந்த முயற்சியை அடுத்தகட்டத்திற்கு எடுத்து சென்றிருக்கிறார். முதல் சுகாதார படகு சேவையை 2005 ஆம் ஆண்டு தொடங்கி இருக்கிறார். உலக வங்கியும் 20,000 அமெரிக்க டாலர்களை இதற்காக வழங்கி இருக்கிறது. பின் மக்கள் பங்களிப்புடன் அசாம் அரசாங்கத்தின் தேசிய சுகாதார சேவை திட்டத்தின் கீழ் விரிவுப்படுத்தப்பட்ட இந்த திட்டமானது இன்று ஆண்டுக்கு ஏறத்தாழ 350,000 மக்களுக்கு சுகாதார சேவை வழங்கி வருகிறது.
சரி... மீண்டும் பெக்கலி தீவுக்கே வருவோம். இந்த தீவில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் மிஷிங் பழங்குடி குழுவை சேர்ந்தவர்கள். அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தை எதிர்கொள்வதற்காக அவர்களது வீடானது தரையிலிருந்து ஐந்தடி உயரத்தில் மூங்கிலால் எழுப்பப்பட்டிருக்கிறது.
சுகாதார படகு வசதி இங்கு ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், மக்கள் இன்றும் பழமைவாதத்துடன் ஒன்றி வாழ்கிறார்கள். தந்திரம் மந்திரம் நோய்களை குனப்படுத்தும் என்று நம்புகிறார்கள்.
'ஆற்றின் வாசனை'
படகை செலுத்தும் பிபுல் பயங் பிரம்மபுத்திரா நதியில் இரண்டு தசாப்தமாக் படகு ஓட்டுகிறார். "இங்கு ஜி.பி.எஸ் எல்லாம் பலன் தராது. எங்களுக்கு இந்த நதியை நன்கு புரியும்" என்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
சுதந்திர தினத்தின் போது 1950 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரம் பேர் இறந்தார்கள். அதன்பின் இந்த நதியின் போக்கே மாறிவிட்டதாக கூறுகிறார்கள் இந்த பகுதி மக்கள்.
1954 முதல் 2008 இடையிலான காலக்கட்டத்தில் மட்டும் 427,000 ஹெக்டேர் பரப்பிலான நிலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இது மொத்த அசாம் பரப்பளவில் நான்கு சதவீதம். 880 கிராமங்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன, 37,000 வீடுகள் அடித்து செல்லப்பட்டிருக்கிறது.
'அணையும், அழிவும்'
அணை திட்டங்கள் பிரம்மபுத்திராவை பெரிதும் பாதிப்பதாக கூறுகிறார்கள் மக்கள். உயரும் வெப்பம், அதனால் உருகும் இமாலய பனிப்பாறைகளும் பிரம்மபுத்திரா நதியில் ஏற்படும் வெள்ளத்திற்கு காரணமாக அமைவதாக கூறுகிறார்கள்.
பட மூலாதாரம், Getty Images
இதனால் மனிதர்கள் மட்டும் பாதிக்கப்படுவது இல்லை. விலங்குகளும் மோசமாக பாதிக்கப்படுகின்றன. அசாம் காசிரங்கா பகுதியில் மட்டும் 15 காண்டாமிருகம், நான்கு யானைகள் மற்றும் வங்காள புலி உட்பட 346 வனவிலங்குகள் 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் இறந்துள்ளன.
நாங்கள் நதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு குரல், 'சிகு... சிகு...' என ஒலித்தது. அதன் பொருள் டால்பின். ஒரு மின்னல் வெட்டாக குதித்த டால்பினை பார்ப்பதற்கே பெரும் மகிழ்வாக இருந்தது. கங்கை, பிரம்மபுத்திராவில் வசிக்கும் இந்த டால்பின்களின் எதிர்காலமும் அச்சுறுத்தலில்தான் உள்ளன.
அணை கட்டுமானங்களால் டால்பின்கள் பாதிக்கப்படுவது மட்டும் அல்லாமல், எண்ணெய்க்காகவும் அதிகளவில் டால்பின்கள் வேட்டையாடப்படுகின்றன.
ஏறத்தாழ 220 இனக்குழுக்கள் இந்த பிரம்மபுத்திரா பள்ளதாக்கில் வாழ்கின்றன. 25 மொழிகள் இங்கே பேசப்படுகின்றன. அவர்களுக்கென தனி மதம்,சட்டம், பழக்க வழக்கங்கள் உள்ளன.
இந்த பகுதியில் வசிக்கும் இளம் தலைமுறை வாழ்வாதாரத்திற்காக அசாம் மைய நிலத்திற்கு செல்கிறார்கள். பெரும்பாலும் சேவை துறையில் பணி புரிந்தாலும், விவசாயம் அவர்களது வாழ்வாதாரத்திற்கு பெரும் பங்களிக்கிறது.
பிரம்மபுத்திரா நதியின் எதிர்காலமும் அவர்களது மக்களின் வாழ்வும் அச்சுறுத்தலில் உள்ளது. இன்று செய்ய வேண்டிய விஷயங்களில் கவனம் செலுத்தினால்தான் நாளை என்பது அந்தப் பகுதிக்கு சிறப்பான ஒன்றாக இருக்கும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்