திருமுருகன் காந்தி கைது: நேயர்களின் கருத்து என்ன?

  • 10 ஆகஸ்ட் 2018
படத்தின் காப்புரிமை FACEBOOK

ஐ.நா கூட்டத்தில் ஸ்டெர்லைட் தொடர்பாக பேசிவிட்டு இந்தியா திரும்பிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது. மக்கள் பிரச்சனைகளை பேசும் கருத்துரிமை மறுக்கப்படுகிறதா? உள்நாட்டு விவகாரங்களை வெளிநாட்டில் பேசுவது முறையற்றதா? என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு பிபிசி தமிழின் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் வாசகர்கள் தெரிவித்த கருத்துக்களை தொகுத்துத் தருகிறோம்.

"ஜனநாயகத்தை சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள். வெள்ளையனிடம் அடிமைப்பட்டே இருந்திருக்கலாம். உள்நாட்டில் நீதி கிடைக்கவில்லை என்றால் வெளிநாட்டில் சென்று தான் நீதி தேட முடியும் இதில் என்ன தவறு. ராணுவ ரகசியமா வெளியிட்டார். ஏதற்கு இவ்வளவு பயம் இந்த அரசுக்கு" என்று கருத்துத் தெரிவித்துள்ளார் முகம்மது என்ற நேயர்.

"பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள். சகாயம், பொன்மாணிக்க வேல், பியூஸ் மனுஷ், திருமுருகன் காந்தி இவர்கள் எல்லாம் மக்களுக்காக பாடு படுகிறார்கள் என்பதைத் தவிர தவறேதும் செய்யவில்லை என்ற ஒரு காரணம் போதாதா கைது செய்ய?" என்று கூறியுள்ளார் சரோஜா பாலசுப்ரமணியன்.

"உள்நாடு சரியில்லை என்றால் எங்கே சரியிருக்கிறதோ அங்கேதானே போக முடியும். வீடு சரியில்லை என்றால் வீதிக்கு வந்துதானே ஆக வேண்டும். இது ஜனநாகயமா என்றே சந்தேகமாக இருக்கிறது" என்று கூறுகிறார் சுப்பு லட்சுமி என்ற ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்.

"யார் வேண்டுமானாலும் ஐ.நா சபையில் பேசலாமா இல்லை சிறப்பு அனுமதி பெற வேண்டுமா? திருமுருகன் காந்தி எப்படி ஐ.நா வில் பேச முடிகிறது?" என்று கேள்வி எழுப்புகிறார் ஜெய முருகன்.

"உள்நாட்டில் நீதி மறுக்கப்படும் போது உண்மையை உலகறிய பேச ஒரு தளம் கிடைக்கும்போது அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?" என்று கருத்துத் தெரிவித்துள்ளார் வெற்றி ஷா என்ற நேயர்.

"அரசு தன்னை சர்வாதிகார கொள்கையை நோக்கி நகர்த்திச் செல்வதாகவே தோன்றுகிறது. மக்கள் மீது அரங்கேற்றப்படும் உரிமை மற்றும் மனிதநேய மீறல்கள் தொடர்பான கருத்துகளை உள்நாட்டில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று எந்த நாட்டிலும் சட்டங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறு இருக்குமேயானால் ஐ.நா மனித உரிமை ஆணையம் என்றொரு அமைப்பே உருவாகி இருக்காது" என்று கூறியுள்ளார் சக்தி சரவணன் என்ற நேயர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :