ராஜிவ் காந்தி கொலை வழக்கு : '7 பேரை விடுவிக்க முடியாது' - மத்திய அரசு

  • 10 ஆகஸ்ட் 2018

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட ஏழு பேரை விடுவிக்க முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Str
Image caption ராஜிவ் காந்தி

முன்னதாக ராஜிவ் காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தபோது மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது.

மத்திய அரசிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்றது நீதிமன்றம். மேலும் ஏழு பேரை விடுவிக்க இடைக்காலத்தடை விதித்தது.

நாங்கள் மத்திய அரசிடம் எங்கள் கோரிக்கையை தெரிவித்திருந்தோம். அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை. அவர்கள் பதிலளிக்காமல் நேரடியாக நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கிவிட்டார்கள் . மத்திய அரசின் நிலைப்பாடு தெரியவேண்டும் என்றது தமிழக அரசு.

இந்நிலையில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை உச்சநீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது.

நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான பெஞ்சிற்கு வந்த இவ்வழக்கில் மத்திய அரசு வாதிடுகையில், இந்திய நாட்டின் முன்னாள் பிரதமரை கொன்றது மிகக்கடுமையான குற்றம். அயல்நாட்டைச் சேர்ந்தவர்கள் தீவிரவாத இயக்கங்களின் உதவியோடு கொன்றுள்ளனர். ஏற்கனவே இவர்களுக்கு கருணை வழங்கப்பட்டு விட்டது.

மரண தண்டனை ஆயுள் தண்டனையாகிவிட்டது. இனி இன்னொரு முறை கருணை காண்பிக்கமுடியாது. ஏனெனில் இவர்களை விடுவித்தால் அது ஓர் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். ஆகவே இவ்வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றது.

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த ஏப்ரல் மாதம் 18-ம் தேதியே இம்முடிவை தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பிவிட்டது. இந்நிலையில் நீதிமன்றத்திலும் இன்று வழக்கு விசாரணையின்போது தனது கருத்தை தெரிவித்திருக்கிறது மத்திய அரசு.

ஏழு பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் மனுவை குடியரசு தலைவர் நிராகரித்துள்ளார்.

இந்நிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்து மீண்டும் மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து தேதி குறிப்பிடாமல் இவ்வழக்கை ஒத்திவைத்துள்ளது மத்திய அரசு.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கு தூக்குத்தண்டனையும், மற்ற நால்வருக்கும் ஆயுள்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக்கூறி மூன்று பேரும் ஜனாதிபதிக்கு மனு அனுப்பியிருந்தனர். இம்மனு குறித்து ஜனாதிபதி முடிவு எடுக்க காலமானதாக கூறி உச்ச நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டில் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :