இந்தியாவில் முதல் முறையாக கருப்பை மாற்று அறுவைசிகிச்சை மூலம் கருத்தரிப்பு

  • சரோஜ் சிங்
  • பிபிசி செய்தியாளர்
கருப்பை

பட மூலாதாரம், Wales News Service

"28 வயதான எனக்கு இதுவரை மூன்று முறை கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. ஒரு முறை பிரசவத்தின்போது குழந்தை இறந்தே பிறந்தது. இனிமேல் குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். ஆனால் எனக்கு என்னுடைய குழந்தை வேண்டும். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. அதேபோல் ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளவும் விருப்பம் இல்லை. ஆனால் எனக்கு குழந்தை வேண்டும். சரி இந்த பெண்ணின் ஆசை நிறைவேறுமா?"

மருத்துவர் ஷைலேஷ் புண்டேகரிடம் இந்த கேள்விகளை கேட்டபோது முடியும் என்று ஒற்றை வரியில் பதில் கிடைத்தது.

2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குஜராத் மாநிலம் பரூச்சில் வசிக்கும் மீனாக்ஷி வலாண்ட் என்னும் பெண், மீண்டும் தனது குடும்பத்தினருடன் மருத்துவர் ஷைலேஷ் புண்டேகரிடம் சென்றார். புணேயில் கேலக்ஸி மருத்துவமனையில் பணிபுரியும் ஷைலேஷ் புண்டேகர், கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்காக நாடு முழுவதும் அறியப்படுபவர்.

பட மூலாதாரம், GALAXY HOSPITAL, PUNE

படக்குறிப்பு,

மீனாக்ஷி வலாண்ட்

'அர்ஷ்மென் சிண்ட்ரோம்' (Asherman syndrome) என்றால் என்ன?

மீனாக்ஷியின் கருப்பையில் அர்ஷ்மென் சிண்ட்ரோம் என்று அழைக்கப்படும் பிரச்சனை இருந்தது. இது பெண்களுக்கு மாதவிடாய் வராமல் இருப்பதாலோ அல்லது பல ஆண்டுகளாக கருப்பை செயல்படாத நிலையில் ஏற்படக்கூடிய பிரச்சனை. தொடர்ந்து கருச்சிதைவுகள் ஏற்படும்போதும், முந்தைய பிரசவத்தின்போது கருப்பை சேதமடைந்திருந்தாலோ இந்த பாதிப்பு ஏற்படும்.

இண்டர்நேஷனல் ஜேனல் ஆஃப் அப்ளைட் ரிசர்ச் (International Journal of Applied Research) என்ற சஞ்சிகையில் வெளியான ஒரு ஆய்வறிக்கையின்படி, உலகில் 15 சதவிகித பெண்கள் பல்வேறு காரணங்களால் கருவுற முடியாத நிலையில் இருக்கின்றனர். அதில் 3 முதல் 5 சதவிகித பெண்களுக்கு கருப்பை தொடர்பான பிரச்சனையால் கரு தரிக்க முடிவதில்லை.

மீனாக்ஷி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கரு தரித்திருந்தார். அதன் பிறகு கருவுற முடியாமல் வருத்தப்பட்ட அவருக்கு மீண்டும் அதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

"என்னுடைய குழந்தையை நானே சுமக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறிவிட்டது. நவம்பர் மாதத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்" என்று அவர் சொல்கிறார்.

2017ஆம் ஆண்டு மே மாதம் அவருக்கு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. கடந்த ஐந்து மாதங்களாக மருத்துவமனையில் தங்கியிருக்கும் மீனாக்ஷி, தற்போது 21 வார கர்பிணி.

பட மூலாதாரம், Thinkstock

கருப்பை மாற்று அறுவை சிகிச்சை - தரவுகள் சொல்வதென்ன?

உலக அளவில் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை என்பது பெரிய அளவில் நடைபெறவதில்லை. சர்வதேச அளவில் இதுவரை 26 பெண்களுக்குத்தான் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றிருக்கிறது, அதில் 14 தான் வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது.

ஆனால் சில ஊடக தகவல்களின்படி, இதுவரை உலக அளவில் 42 கருப்பை மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றிருக்கிறது, அதில் வெறும் 8 பெண்களே கரு தரிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கின்றனர்.

கருதரித்திருக்கும் எட்டு பேரில் ஏழு பேர் ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர்கள் ஒருவர் அமெரிக்காவில் வசிப்பவர். ஆசியாவில் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்டு கரு தரித்திருக்கும் முதல் பெண் மீனாக்ஷி தான்.

மீனாக்ஷிக்கு கருப்பையை தானமாக கொடுத்திருப்பது 49 வயதான அவரது தாய். 40 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களிடம் இருந்தே கருப்பை பொதுவாக தானமாக பெறப்படுகிறது.

பட மூலாதாரம், GALAXY TRANSPA

படக்குறிப்பு,

மருத்துவர் ஷைலேஷ் தனது குழுவினருடன்

கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள முன்வருபவர்களிடம் ஷைலேஷ் முன்வைக்கும் முதல் நிபந்தனை என்ன தெரியுமா? கருப்பையை தானமாக கொடுப்பவர்கள், தானமாக பெறுபவரின் தாய், சகோதரி அல்லது தாயின் சகோதரியாக இருக்க வேண்டும் என்பதே.

நம் நாட்டில் இது தொடர்பான சட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை. ஏனெனில் இந்தத் துறையில் விஞ்ஞானம் இன்னும் அதிகம் முன்னேறவில்லை.

டாக்டர் ஷைலேஷின் நிபந்தனைகளுக்கு ஏற்ப கருப்பை தானமாக கிடைத்த உடன், லேபராஸ்கோபி முறையில் கருப்பை உடலிலிருந்து நீக்கப்படுகிறது. கருப்பை மாற்று அறுவை சிகிச்சை என்பது வாழ்க்கையையே மாற்றும் நடைமுறை. முழு நடைமுறைக்கு 10 முதல் 12 மணி நேரம் ஆகும்.

இதில் உயிருடன் இருக்கும் பெண்ணிடம் இருந்துதான் கருப்பையை தானமாக பெறமுடியும். பிற உறுப்பு தானங்களை போல் இறந்த பெண்ணிடம் இருந்து கருப்பையை தானமாக பெறமுடியாது.

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு,

சித்தரிப்பு புகைப்படம்

கருத்தரிப்பதில் அதிக ஆபத்து

கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் கருப்பை பொருத்திய பெண், ஓராண்டுக்கு பிறகே கருவுற முடியும், ஆனால் இயற்கையான முறையில் கரு தரிக்க முடியாது.

மருத்துவர்களின் கருத்துப்படி, மாற்று உறுப்புகளை பொருத்தும்போது, உடல் அதை ஏற்றுக் கொள்ளாமல் போகும் சாத்தியக்கூறுகள் அதிகம். அதாவது பிறரிடம் இருந்து தானமாக பெற்ற உறுப்பை, ஒருவரின் உடல் ஏற்றுக் கொள்ளாமல் போகலாம். எனவே புதிய உறுப்பு பொருத்தப்பட்டவரை ஓராண்டு வரை கண்காணித்து வரவேண்டும்.

கருப்பை மாற்று அறுவை சிகிச்சையின் பின் குழந்தை விரும்பினால், ஆய்வகத்தில் சோதனைக் குழாயில் கரு உருவாக்கப்பட்டு, பின்னர் கருப்பையில் வைக்கப்படுகிறது.

தாயின் சினைமுட்டையும் தந்தையின் விந்தணுவையும் சேர்த்து ஆய்வகத்தில் சோதனைக் குழாயில் உருவாக்கப்பட்ட கரு, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில், டாக்டர் ஷைலீஷ் மற்றும் அவருடைய குழுவினரால் மீனாக்ஷியின் கருப்பையில் வைக்கப்பட்டது.

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு,

சித்தரிக்கப்பட்ட புகைப்படம்

கடந்த ஐந்து மாதங்களாக புணே மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார் மீனாக்ஷி.

இதுபோன்ற கருத்தரிப்புகளில் அதிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியிருப்பதை மருத்துவர் ஷைலேஷ் சுட்டிக்காட்டுகிறார். மீனாக்ஷியின் விஷயத்தில் அவருடைய குடும்பத்தினரோ அல்லது மருத்துவக் குழுவினரோ எந்தவித அபாயத்தையும் எதிர்கொள்ள விரும்பவில்லை.

இதுபோன்று கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்களுக்கு பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்கள் என்ன?

"மீனாக்ஷிக்கு பல வகையான நோயெதிர்ப்பு மருந்துகளை கொடுத்திருக்கிறோம். இது, கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோயை அதிகரிக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் அதை கண்காணிக்க வேண்டியிருக்கிறது. ரத்த அழுத்தம் அதிகரிக்கவோ, குறையவோ வாய்ப்பு இல்லை. மீனாக்ஷியை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம்" என்று டாக்டர் ஷைலஷ் கூறுகிறார்.

2017 மே முதல் இன்றுவரை டாக்டர் ஷைலேஷின் மருத்துவக் குழு ஆறு கருப்பை மாற்று அறுவை சிகிச்சைகளை செய்துள்ளனர், அவை அனைத்துமே வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

தானமாக பெறப்பட்ட கருப்பைக்கு கருவை தாங்கும் திறன் குறைவாக இருப்பதால், கருப்பை மாற்று அறுவை சிகிச்சையின் பின்னர் கர்ப்பம் தரிப்பதில் அபாயம் அதிகம். மீனாஷியின் விஷயத்தை எடுத்துக் கொண்டால், அவரது தாய் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கடைசியாக கர்ப்பம் தரித்திருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அந்த கருப்பை வேறொரு உடலில் பொருத்தப்பட்டு, கருதரிக்கும்போது சிக்கல்கள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகமாகிறது.

மீனாக்ஷிக்கு பிரசவம், அறுவை சிகிச்சை மூலம் நடக்கும் என்று டாக்டர் ஷைலேஷ் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சித்தரிப்பு புகைப்படம்

சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பில்லையா?

கருப்பை மாற்று அறுவை சிகிச்சையில், கருப்பை மட்டுமே மாற்றப்படுகிறது; நரம்புகள் மாற்றப்படுவதில்லை. எனவே குழந்தை வளர்ந்தவுடன் பிரசவ வலி ஏற்படாது என்று விளக்குகிறார் டாக்டர் ஷைலேஷ்.

இந்த முறையில் பிறக்கும் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன?

இந்தியாவில் முதல்முறையாக கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் கரு தரித்திருக்கும் நிகழ்வு இது என்பதால், இதில் பழைய அனுபவம் எதுவும் இல்லை என்பதை சுட்டிக்காட்டும் டாக்டர் ஷைலேஷ், உலகில் இதுவரை எட்டு பேருக்கு மட்டுமே கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு குழந்தைகள் பிறந்திருப்பதாக கூறுகிறார்.

அந்த பிரசவங்களில் பெரிய அளவிலான பிரச்சனைகள் இல்லை. ஆனால் பிரசவத்திற்கு பிறகு, தாய் இயல்பு நிலைக்கு திரும்ப 12 முதல் 15 வாரங்கள் காலம் எடுக்கும். மீனாக்ஷியின் விஷயத்திலும் இதேபோன்ற நிலையே இருக்கும் என்று நம்புகிறோம் என்று டாக்டர் ஷைலேஷ் கூறுகிறார்.

கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏழு முதல் பத்து லட்சம் ரூபாய் செலவாகும் என அப்ளிகேஷன் ரிசர்ச் இன்டர்நேஷனல் சஞ்சிகையின் ஆய்வு கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :