மராத்தா போராட்டம்: `செயல்படுத்த முடியாத ஒரு வாக்குறுதி`

  • 11 ஆகஸ்ட் 2018

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

படத்தின் காப்புரிமை Getty Images

2016 ஆகஸ்ட் முதல் 2017 ஆகஸ்ட் வரை, மகாராஷ்டிராவில் உள்ள மராத்தியர்கள் மிகவும் அமைதியாக தங்கள் பலத்தை காட்டியுள்ளார்கள். 58 அமைதி ஊர்வலங்களை நடத்தியுள்ளார்கள். அரசு வேலைகளில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டில் உள்ள அரசியலமைப்புச் சட்ட ரீதியிலான பிரச்சினையை மராட்டிய அரசு தீர்க்கும் என்று ஒரு வருடமாக அவர்கள் பொறுமையாக காத்திருக்கிறார்கள்.

இப்போது அவர்கள் தங்கள் பொறுமையை எல்லாம் இழந்து, வன்முறையில் ஈடுபடும் நிலையில் இருக்கிறார்கள். ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்து 9ஆம் தேதி வரை அவர்கள் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு வந்தார்கள். மாநிலம் முழுவதையும் முற்றுகையிட்டு மறியல் செய்யவும் அவர்கள் முடிவு செய்து அனைத்து பிரதான சாலைகள், நெடுஞ்சாலைகளை கால்நடைகளைக் கொண்டும், மாட்டு வண்டிகளையும் டிராக்டர்களையும் கொண்டு ஏன் மக்களைக் கொண்டும் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

மராத்தியர்கள் தங்கள் கால்நடைகளையும் விவசாய கருவிகளையும் போராட்டக்களத்தில் இறக்கியுள்ளது, அரசு வேலைக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினாலும், நாடெங்கும் வேளாண் நெருக்கடியையும் இது வெளிப்படுத்துகிறது. குஜராத்தில் பட்டிதார்கள், ராஜஸ்தானில் குஜ்ஜார்கள் மற்றும் அரியானாவில் ஜாட்டுகள் உள்ளிட்ட பிறரும் இது போன்று இடஒதுக்கீடு கேட்டு வீதிகளில் இறங்கியுள்ளனர்.

மராத்தா சமூகத்தினரின் போராட்டத்தில் ஒலித்த ‘ஜெயலலிதா’ பெயர்- ஏன்? எதனால்?

இவர்கள் அனைவரும் வேளாண் சமூகத்தினர். ஆனால் இன்று வேளாண்மையில் லாபம் குறைந்து வருகிறது. முன்பு கிராமங்களில் பெரிய நிலச்சுவான்தார்கள் பண்ணையார்கள் இருந்தனர். ஆனால் அரசு நிலம் வைத்திருப்பதில் புகுத்திய கட்டுப்பாடு மற்றும் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலைகளை வழங்காத காரணத்தால் விவசாயிகள் நொடிந்து போய் வறிய நிலையை அடைந்துள்ளனர். உண்மையில் ஒருகாலத்தில் மேலாதிக்கம் செலுத்திய நிலச்சுவான்தார்கள் இன்று சமுதாயத்தின் அடிமட்ட நிலைக்க தள்ளப்பட்டு உள்ளனர். குறிப்பாக தலித்துகள் இட ஒதுக்கீட்டின் பயனை அனுபவித்து தாசில்தாராகவும் மாவட்ட ஆட்சியராகவும் வந்துவிட்டனர். இதன் காரணமாக அவர்கள் உயர்சாதியினரை மேலாதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டனர். ஒரு காலத்தில் அவர்கள் இட ஒதுக்கீட்டினை ஏழைகள் அல்லது சமுதாயத்தில் பின்தங்கியவர்களுக்கானது என்று பார்த்தனர். ஆனால் இன்று இட ஒதுக்கீடு பொருளாதார வளமைக்குப் பாதையாக பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில் 35 சதவீத மக்கள் தொகையைக் கொண்ட மராத்தியர்கள், ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு எதிராகவும் போராடுகிறார்கள். இந்த சட்டத்தைப் பயன்படுத்தி தலித்துகள் தங்கள் மீது பிணையில் வெளிவர முடியாத வகையில் அற்பமான காரணங்களைக் காட்டி வழக்கு தொடர்கிறார்கள் என்று அவர்கள் கொந்தளிக்கின்றனர். இருப்பினும் அரசாங்கம் மராத்தியர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையே வெடிக்கக்கூடிய பெரும் மோதலை பெருமளவில் தடுத்தாலும், தற்போதைய போராட்டத்திற்கு முக்கிய காரணம் அரசாங்கத்தின் பல்வேறு தரப்பில் இருந்து வரும் குழப்பமான அறிக்கைகள் தான். மகாராஷ்டிர முதல் அமைச்சர் தேவேந்திர ஃபட்நவிஸ் சில வாரங்களுக்கு முன் தானாக முன் வந்து ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். மாநிலத்தில் 72000 பணியிடங்களை நிரப்பப் போவதாக அவர் அறிவித்தார். இதில் மராட்டியர்களுக்கு 16 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கும் என்றும் அவர் சொன்னார். பின்னர் இது நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு தலித்துகளையும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டில் துண்டு விழக்கூடும் என்று விழிப்படையச் செய்தது. ஆனாலும் உறங்கிக் கொண்டிருந்த மராட்டியர்கள் விழித்துக் கொண்டனர். அரசு தங்கள் மீது வஞ்சகத்துடன் நடந்து கொள்வதாக அவர்கள் சந்தேகித்தனர். அவர்கள் சந்தேகம் உறுதியடைய மற்றொரு சம்பவம் காரணமாக அமைந்தது. "நாங்கள் இட ஒதுக்கீடு கொடுக்கலாம். ஆனால் வேலை எங்கே இருக்கிறது?" என்று மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளிப்படையாக கூறியதுதான் காரணம்.

இது போதாது என்று, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தன் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினால் தாங்க முடியாது என்று உணர்ந்த ஃபட்நவிஸ், அவர்களிடம், அவர்கள் இட ஒதுக்கீட்டில் கை வைக்க முடியாது என்று உறுதியளித்தார்.

அப்படியானால் மராத்தியர்களுக்கு இட ஒதுக்கீடு எப்படி வரும்? எந்த மாநில அரசும் 52 சதவீத இட ஒதுக்கீட்டை தாண்ட முடியாது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் இதை அதிக அளவில் எதிர்கொண்டுள்ளன. மராத்தியர்கள் ஏற்கனவே முந்தைய காங்கிரஸ்- என்.சி.பி. அரசு தங்களை, அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான 16 சதவீத இடஒதுக்கீடு மூலம் ஏமாற்றியதாக எரிச்சலில் உள்ளனர்.

2015ல் மும்பை உயர் நீதிமன்றம் இந்த இட ஒதுக்கீட்டை செல்லாது என்று தீர்ப்பளித்தது வியப்பளிக்காது. எனவே இப்போது மராட்டியர்கள் அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு 69 சதவீதம் வழங்கப்படுவதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அங்குள்ள திராவிட அரசியல் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் மீது கவனம் செலுத்தி அதனை சாத்தியமாக்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால் மகாராஷ்டிரம் மற்றும் பிற இந்திய மாநிலங்களில் நிலைமை அப்படி இல்லை. மகாராஷ்டிரத்தில் கூடுதலாக தீவிரமான தலித் சமுதாயம் தங்கள் இடஒதுக்கீட்டை குறைக்கும் எந்த நடவடிக்கையையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளும் எந்த ஒரு சமூகத்தையும் தனிமைப்படுத்துவதை நினைத்தும் பார்க்க முடியாது.

மத்திய அரசுக்கும் இது எதிர்பாராத பிரச்சினைகளைத் தரும் விஷயம் என்பதால் இந்த பிரச்சினையை சீண்டிப்பார்க்கும் துணிச்சல் கிடையாது. தற்சமயம், வேளாண் சமுதாயம் இட ஒதுக்கீடு கேட்டு போராடும் அனைத்து மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மாநிலத்திற்கு சலுகை வழங்கினால் மற்ற மாநிலத்திற்கும் இந்த சலுகையை வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும், பிற மாநிலங்களிலும் இட ஒதுக்கீடு கேட்டு நடத்தும் போராட்டம் மற்ற மாநிலங்களுக்கும் பரவும். இப்போதைக்கு இருக்கும் ஒரே வழி, போராடும் சமூகத்தினரை சமாதானம் செய்வது அல்லது நேரம் கேட்பது தான்.

மராத்தியர்கள் சமரசத்திற்கு தயாராக இல்லை. அரசுக்கும் நேரம் கடந்துகொண்டே இருக்கிறது. மராத்தியர்கள் மட்டுமின்றி தாங்கர்கள் (ஆடு மேய்ப்பர்கள்) மற்றும் பிற நாடோடி பிரிவினரும், பா.ஜ.க. அரசை 2014ல் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரிக்கை விடுத்து வருகின்றன.

துரதிருஷ்டவசமாக, இந்த வாக்குறுதியை அரசால் காப்பாற்றவும் முடியாது, உடைக்கவும் முடியாது. காப்பாற்றினாலும் ஆபத்து, உடைத்தாலும் ஆபத்து. முந்தைய அரசுக்கு தெலங்கானா பிரச்சினை போல இந்த அரசுக்கு இட ஒதுக்கீடு போராட்டம் தாங்கிக் கொள்ள முடியாத சுமையாகி உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்