கர்நாடக சங்கீதம் இந்து கடவுள்களுக்கு மட்டும் சொந்தமானதா?

  • பிரமிளா கிருஷ்ணன்
  • பிபிசி தமிழ்

சமூக வலைத்தளங்களில் வெளியான மோசமான கருத்துகள் தன்னை பாதித்ததாகவும், குடும்ப உறவுகள் கேட்டுக்கொண்ட காரணத்தாலும், 'இயேசுவின் சங்கம சங்கீதம் ' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என கர்நாடக இசைக்கலைஞர் ஓ.எஸ்.அருண் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Twitter

இந்துத்துவாவாதிகளாக சமூகவலைத்தளங்களில் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் சில நபர்கள், ஓ.எஸ்.அருண் ஓர் இந்து, அவர் இயேசுவை பற்றிய பாடல்களை பாடக்கூடாது என்றும் அவர் மதம் மாறிவிட்டார் என்றும், அவரது நிகழ்ச்சிகளை இந்துக்கள் புறக்கணிக்கவேண்டும் என்றும் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

கர்த்தரை கர்நாட சங்கீதத்தில் பாட எதிர்ப்பு?

பிபிசி தமிழிடம் பேசிய ஓ.எஸ்.அருண் தனது சொந்த காரணங்களுக்காக 'இயேசுவின் சங்கம சங்கீதம் ' நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று கூறினார்.

''ஆகஸ்ட் மாதம் 25ம்தேதி கர்த்தரைப் பற்றி ஒரு கச்சேரி பாடுவதாக இருந்தது. நான் கிருத்துவனாக மதம் மாறிவிட்டேன் என்று சிலர் கருத்துகளை வெளியிட்டார்கள். எனது கச்சேரியைப் பற்றி சமூகவலைதளங்களில் தெரிவித்த மோசமான கருத்துக்கள் என்னை வருத்தப்படவைத்தது. என் குடும்பத்தினரும் வருத்தப்பட்டதால், அவர்களுக்கு மதிப்பளிக்கும் வண்ணம் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று அறிவித்தேன்,'' என்று பிபிசிதமிழிடம் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் தமிழில் கஜல் பாடல்களைப் பாடியுள்ளதாக கூறும் அருண், ''கஜல் பாடல்களைப் பாடியதால் நான் இஸ்லாமியராக மாறிவிட்டேன் என்று கூறமுடியுமா? நான் ஒரு பாடகர். ஏழுஸ்வரம் என்பது உயிரெழுத்து போன்றது. உலகில் உள்ள எல்லா இசைக்கும் இந்த ஸ்வரங்கள்தான் முதல் எழுத்துக்கள். எனது 35 ஆண்டு கால இசைவாழ்க்கையில் இதுபோன்ற ஒரு சர்ச்சை எழுந்ததில்லை. நான் ஒரு தீவிர இந்து. ஆனால் தீவிர இந்து கொள்கை கொண்டவர்கள் எதையும் தெரிந்துகொள்ளாமல் இல்லாததைச் சொல்கிறார்கள். நம் நாடு முன்னேறுகிறது என்று கூறுகிறார்கள், ஆனால் முன்னேறவில்லை என்றே தோன்றுகிறது,'' என்று கூறினார்.

''எனது ரசிகர்கள் பலரும் 'வி ஆர் வித் யு அருண்' என்று என்னை உற்சாகப்படுத்துகிறார்கள். புரிதல் இல்லாத கீழ்த்தரமான கருத்துகளைக் கொண்டவர்கள் வசைபாடுகிறார்கள். சிலர் நான் ஏன் இயேசுவைப் பற்றி பாட ஒத்துக்கொண்டேன் என்றும் கேட்கிறார்கள். இதில் என்ன நியாயம் இருக்கிறது? இசை ஒரு மொழி, அது தெய்வீகமானது,'' என்று தெரிவித்தார்.

தேவாலயத்தில் ஒலித்த அல்லாவின் பாடல்

பாடகர் ஓ.எஸ்.அருணின் விவகாரத்தை அடுத்து சர்ச்சைகள் பலவற்றை சந்தித்துள்ள கர்நாடக சங்கீத பாடகர் டி.எம்.கிருஷ்ணா ஒவ்வொரு மாதமும் இயேசு அல்லது அல்லாவைப் பற்றி பாடல்களை வெளியிடவுள்ளதாக ட்விட்டர் தளத்தில் அறிவித்துள்ளார்.

''கர்த்தரைப் பற்றிய பாடல்களைப் பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அச்சுறுத்தல்கள் வெளியாகியுள்ளதைப் பார்க்கும்போது, ஒவ்வொரு மாதமும் கர்த்தர் அல்லது அல்லாவைப் பற்றி ஒரு படலை நான் வெளியிடவுள்ளேன் என்பதை அறிவிக்கின்றேன்,'' என்று தெரிவித்துள்ளார் டி.எம்.கிருஷ்ணா.

கடந்த ஆண்டு மும்பையில் கொலாபா பகுதியில் உள்ள தேவாலயத்தில் நடந்த இசைவிழாவில் அல்லாவைப் பற்றி நாகூர் ஹனிபாவின் பாடலை பாடியதற்காக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை டி.எம்.கிருஷ்ணா எதிர்கொண்டார். ஆனாலும் தொடர்ந்து மதவேற்றுமைகளுக்கு எதிராக டி.எம்.கிருஷ்ணா பாடிவருவது குறிப்பிடத்தக்கது.

''ராமா என்பதற்கு பதிலாக இயேசு என்று பாடவில்லை''

இந்து அல்லாத பிற மத கடவுள்களை பாடுவது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையின் தொடர்ச்சியாக, தியாகராஜ கீர்த்தனைகளை பிற கடவுளர்களை பாட பயன்படுத்துவதாக பிரபல பாடகர்கள் நித்யஸ்ரீ மகாதேவன், அருணா சாய்ராம் போன்றவர்கள் மீதும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இந்த கருத்துகளுக்கு பதில் அளிக்கும் வகையில் நித்யஸ்ரீ தனது பேஸ்புக் பக்கத்தில் இதுவரை ராமா என்ற வார்த்தைக்கு பதிலாக இயேசு என்று பயன்படுத்தி எந்த பாடலையும் தான் பாடவில்லை என்று எழுதியுள்ளார்.

''என்னைப் பற்றிய குற்றச்சாட்டுகள் வைரலாகி உள்ளதைப் பார்த்து மிகுந்த வேதனை அடைந்தேன். சமூக நல்லிணக்கத்திற்காக நான் இயேசுவைப் பற்றி பாடலை பாடியுள்ளேன். தியாகராஜ கீர்த்தனையில் ராமா என்ற வார்த்தையை மாற்றி எந்த ஒரு பெயரையும் பயன்படுத்திப் பாட நான் ஒருபோதும் முற்படமாட்டேன். நான் மதமாற்றத்திற்கு எதிரான கருத்தை கொண்டுள்ளேன். மதமாற்றத்தை ஆதரிக்கும் அல்லது மதமாற்றத்தை பரப்பும் செயல்களில் நான் ஒருபோதும் ஈடுபடமாட்டேன். இந்து பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் இருந்துவந்த நான், இந்து மதத்தைப் பின்பற்றும் நபராக இருந்துவருகிறேன். அவ்வாறே நான் இருப்பேன்,'' என்று கூறியுள்ளார்.

அதேபோல அருணா சாய்ராமும் தனது ட்விட்டர் பக்கத்தில் தனிப்பட்ட அல்லது வியாபார நோக்கத்திற்காக தியாராஜ கீர்த்தனைகளைப் பயன்படுத்தி அல்லது அதில் மாற்றங்களை ஏற்படுத்தி மதமாற்றக் காரியங்களுக்கு எப்போதும் பயன்படுத்தியதில்லை என உறுதிபட தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஓ.எஸ்.அருண் சந்தித்த விமர்சங்களைப் பற்றி கருத்துகேட்க இந்து அமைப்புகள் மற்றும் இந்துத்துவ அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலரை பிபிசி தமிழ் தொடர்புகொண்டபோது கருத்து சொல்ல விருப்பம் இல்லை என்று தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: