ரஜினிகாந்துடன் பா.ஜ.க கூட்டணியா? - பிரதமர் நரேந்திர மோதி விளக்கம்

இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.

தினத்தந்தி: 'ரஜினிகாந்த்துடன் கூட்டணியா? - மோதி விளக்கம்'

பட மூலாதாரம், Getty Images

தினத்தந்தி நாளிதழுக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோதி. அதில், 'ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால், அந்த கட்சியோடு பா.ஜ.க. கூட்டணி அமைக்குமா?' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, "'உங்கள் கேள்வியே தொடங்கினால்' என்று தொடங்குகிறது. சந்தேகமில்லாமல் ரஜினிகாந்தை அவருடைய சாதனைகளுக்காக நான் மதிக்கிறேன். ஆனால், நிச்சயமாக யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு நான் பதில் அளிக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்." என்று பதிலளித்துள்ளார் மோதி. ரபேல் விவகாரம் குறித்த கேள்விக்கு, "காங்கிரஸ் கட்சியிடம் சொல்வதற்கு என்று எந்த விவகாரமும் இல்லை. தொடர்ந்து திரும்ப திரும்ப எந்தவித ஆதாரமும் இல்லாத உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை திரும்ப திரும்ப கூறி வருகிறார்கள். விமானப்படையின் திறமையான செயல்பாட்டுக்கு ரபேல் விமானங்கள் மிகவும் முக்கியமானதாகும். இது ஒரு அரசாங்கத்துக்கும், மற்றொரு அரசாங்கத்துக்கும் உள்ள ஒப்பந்தமாகும். இது மிகவும் நேர்மையான, வெளிப்படையான கொள்முதல் ஆகும்." என்று தெரிவித்துள்ளார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'எஸ்.பி.ஐ சினிமாஸை கைப்பற்றிய பி.வி.ஆர்'

எஸ்.பி.ஐ சினிமாஸ் நிறுவனத்தை 633 கோடி ரூபாய்க்கு பிவிஆர் சினிமாஸ் கைப்பற்றியது என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ். சென்னையின் அடையாளமாக இருந்த சத்யம் திரையரங்கமும் இதன் மூலம் கைமாறி உள்ளது. எஸ்.பி. ஐ சினிமாஸ் நிறுவனத்திற்கு தமிழ்நாடு, ஆந்திரம், தெலுங்கான, கேரளா, கர்நாடகா மற்றும் மும்பையில் 76 திரையரங்கம் இருந்ததாகவும், பிவிஆர் நிறுவனத்துக்கு இந்தியா முழுவதும் 60 நகரங்களில் 706 திரையரங்கங்கள் இருந்ததாகவும் விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தினமணி: 'பலத்த மழைக்கு வாய்ப்பு'

தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Getty Images

மேற்கு திசை காற்று வலுவடைந்துள்ளதால் தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் தென்மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 35-45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். தென் தமிழக கடலோரப் பகுதியில் தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 35-45கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலமான காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் அந்தமான், மத்திய வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர் என வானிலை மைய அதிகாரி தெரிவித்ததாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

இந்து தமிழில் வெளியான கார்ட்டூன்

பட மூலாதாரம், இந்து தமிழ்

இந்து தமிழ்: 'வங்கிகள் மீதான மக்கள் நம்பிக்கை தொடரட்டும்'

எஃப்ஆர்டிஐ மசோதா திரும்ப பெறப்பட்டது தொடர்பாக தலையங்கம் எழுதி உள்ளது இந்து தமிழ் நாளிதழ்.

பட மூலாதாரம், Getty Images

"வங்கிகளின் வாராக் கடன்களைத் தீர்க்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகக் கொண்டுவரப்பட்ட 'எஃப்ஆர்டிஐ' மசோதாவைத் திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு. வங்கிகளின் வாராக் கடன் அளவு அதிகரித்த நிலையில், கடன்களை அடைக்க வங்கிக்கு 'உள்ளே கிடைக்கும்' நிதி ஆதாரங்களைப் பயன்படுத்தும் உட்பிரிவு இந்த மசோதாவில் இடம்பெற்றிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வங்கிகளில் பணத்தைப் போட்டுவைத்திருக்கும் டெபாசிட்தாரர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இம்மசோதா திரும்பப் பெறப்படும் நிலையில், இந்தக் குழப்பங்கள் முடிவுக்கு வந்திருக்கின்றன.

எஃப்ஆர்டிஐ மசோதாவைத் திரும்பப் பெறும் அதே சமயம், நிதி நிறுவனங்கள் நொடித்துப்போனால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நல்ல கட்டமைப்பையும் அரசு உருவாக்க வேண்டும். 'நிதிநிலையில் நொடிப்பு திவால் நிலை அறிவிப்பு' ஆகியவற்றுக்குப் பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான சட்டம் எந்த அளவுக்குச் செயல்படுகிறது என்றும் ஆராய வேண்டும். 'டெபாசிட் இன்சூரன்ஸ், கடன் உறுதி கார்ப்பரேஷன்' என்ற அமைப்பை வலுப்படுத்த வேண்டும். 1960-களில் இரண்டு வங்கிகள் நொடித்த பிறகு இந்த கார்ப்பரேஷன் ஏற்படுத்தப்பட்டது. டெபாசிட்தாரர்கள் ரூ.1 லட்சத்துக்கும் மேல் வங்கியில் எவ்வளவு வைத்திருந்தாலும், வங்கி திவாலாகும் நிலையில், குறைந்தபட்சம் ரூ.1 லட்சத்தை டெபாசிட்தாரர்களுக்குத் திரும்ப வழங்க இந்த கார்ப்பரேஷன் நிறுவப்பட்டது. வாராக் கடன்களால் மட்டுமல்ல, மோசடியாகக் கடன்பெறுவது அதிகரித்திருப்பதாலும் அரசுத் துறை வங்கிகள் திணறுகின்றன. இந்நிலையில், வங்கிகள் நிதி நெருக்கடிகளில் சிக்கிக்கொள்ளாத வகையிலான நடைமுறைகளை அரசு உறுதிசெய்ய வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, வங்கிகள் மீது வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்க வேண்டும்!" என்று விவரிக்கிறது அந்நாளிதழ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: