ஜே.என்.யூ. மாணவர் தலைவர் உமர் காலித்தை நோக்கி துப்பாக்கி சூடு

  • 13 ஆகஸ்ட் 2018

டெல்லி ஜவர்லால் பல்கலைக்கழக மாணவர் தலைவரும், 2016ல் மற்றொரு மாணவர் தலைவர் கண்ணையா குமாருடன் சேர்த்து தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டவருமான உமர் காலித்தை நோக்கி ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டார். இதில் உமர் காயமின்றித் தப்பினார்.

படத்தின் காப்புரிமை https://www.facebook.com/umar.khalid.984
Image caption உமர் காலித்

டெல்லியின் மையப்பகுதியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப் எனப்படும், அரசமைப்புச் சட்ட மன்றத்தில் 'அச்சத்தில் இருந்து சுதந்திரம்' என்ற தலைப்பில் நடந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்தார் உமர். இந்த மன்றத்துக்கு அருகே ரஃபி சாலையில் உள்ள ஒரு தேனீர் கடையில் உமர் நின்றிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

வெள்ளை சட்டை அணிந்திருந்த ஒரு நபர் உமரை தள்ளி விட்டு, பிறகு துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. அந்த நபர் தள்ளியோது உமர் கீழே விழுந்ததால் அவர் மீது குண்டடி படவில்லை என்றும் கூறப்படுகிறது. அவரைச் சுட்டவர் தப்பிச் சென்றுவிட்டார்.

படத்தின் காப்புரிமை https://www.facebook.com/umar.khalid.984
Image caption உமர் காலித் பங்கேற்க வந்த கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்

நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அருகில் அமைந்திருக்கும் இந்தப் பகுதி டெல்லியில் உயர் பாதுகாப்பு பகுதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

யார் இந்த உமர் காலித்

இந்திய நாடாளுமன்றக் கட்டடத்தின் மீது 2001ல் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து 2016ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒன்றியத்தின் சார்பில் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்தப் போராட்டத்தில் தேச விரோத முழக்கங்களை எழுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டு 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கன்னையா குமார், அனிர்பான் பட்டாச்சார்யா ஆகிய மாணவர் தலைவர்களுடன் சேர்த்து கைது செய்யப்பட்டவர்தான் உமர் காலித். 'பகத் சிங் அம்பேத்கர் மாணவர் அமைப்பு' (BASO) என்ற அமைப்பைச் சேர்ந்தவர் இவர்.

தான் தேச விரோத முழக்கங்களை ஒருபோதும் எழுப்பியதில்லை என்று உமர் காலித் கூறுகிறார்.

"கௌரி லங்கேஷை நினைத்துக் கொண்டேன்"

இந்த சம்பவத்துக்குப் பிறகு பேசிய உமர் காலித், சுடப்பட்டபோது தாம் கௌரி லங்கேஷுக்கு நேர்ந்ததை நினைத்துக்கொண்டதாகத் தெரிவித்தார்.

இந்த வழக்கு காரணமாக கண்ணையா குமார், உமர் காலித் ஆகியோர் தங்களது பி.எச்.டி. ஆய்வேட்டை சமர்ப்பிக்க பல்கலைக்கழகம் அனுமதி மறுத்தது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகே அவர்கள் தங்கள் ஆய்வேட்டை சமர்ப்பிக்க முடிந்தது.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழகத்தில் செயல்படும் 'பிர்ஸா, அம்பேத்கர், பூலே மாணவர் சங்க' (பாப்சா) தலைவர் பிரவீன், "இச்செயலை யார் செய்தது என்று தெரியவில்லை. ஆனால், வலதுசாரிகள்தான் செய்திருக்கிறார்கள் என்பதுதான் எங்களுக்கு கிடைத்துள்ள தகவல். உறுதியான தகவல்களுக்காக காத்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை கண்டித்து இன்று மாலை பல்கலைக் கழக வளாகத்தில் போராட்டம் நடத்தப்படும் என்று பிபிசி தமிழிடம் கூறினார் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பொதுச் செயலாளர் துக்கிராலா ஸ்ரீகிருஷ்ணா.

"மாணவர்களின் அச்சமற்ற குரல் தொடரும்..."

இந்த சம்பவம் பற்றி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் கீதா குமாரி ஃபேஸ்புக்கில் வெளியிட்ட அறிக்கையில், மிகுந்த கவலையுடன் உமர் காலித்துக்கு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Facebook/Geeta Kumari
Image caption கீதா குமாரி

"உமர் மீதும், ஜே.என்.யு. மாணவர்கள் மீதும், இந்த ஆட்சியை கேள்வி கேட்கும் அனைத்து குரல்கள் மீதும் இந்த மோதி அரசு மேற்கொண்ட வெறுப்பு பிரசாரத்தின் உச்சகட்டமாகவே இந்த கோழைத்தனமான தாக்குதலைப் பார்ப்பதாக"வும் கீதா குமாரி தெரிவித்துள்ளார்.

"எந்த குரலையும் ஒடுக்க முடியாது; மாணவர் இயக்கம் அச்சமற்ற குரலை தொடர்ந்து வெளிப்படுத்தும் என்பதை ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் சார்பில் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இந்த சம்பவத்தின் பின்னால் இருக்கும் சதிகாரர்கள் மீது டெல்லி போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று தெரிவித்த கீதா குமாரி, இன்றிரவு 9 மணிக்கு பல்கலைக்கழகத்தின் சபர்மதி தாபா அருகே கொடும்பாவி கொளுத்தும் நிகழ்வு நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: