உண்மையில் நின்று துடித்ததா கருணாநிதி இதயம்? - விடை சொல்லும் மருத்துவர்

  • 14 ஆகஸ்ட் 2018

நீட் தேர்வுக்கு எதிராக போராடுவது, சமையலர் பாப்பாளுக்கு குரல் கொடுப்பது, சமூக நீதிக்காக தொடர்ந்து இயங்குவது என மருத்துவத்தை தாண்டி சமூக தளத்தில் தொடர்ந்து இயங்குபவர் மருத்துவர் எழிலன். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தனி மருத்துவராக கடந்த அரை தசாப்தத்திற்கு மேலாக இருந்து வந்தார்.

அவரிடம் காவேரி மருத்துவமனை தினங்கள், கருணாநிதிக்கும் அவருக்குமான உறவு என பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம். அவற்றை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.

'கரகரப்பான குரல்'

"பாரம்பரியமான திமுக குடும்பத்தை சேர்ந்தவன் நான். என் அப்பா நாகநாதன் சிந்தாதரிபேட்டையில் அண்ணா படிப்பகம் நடத்திக் கொண்டிருந்த போது, திமுக வின் அனைத்து முன்னோடிகளும் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார்களாம்... பின் என் அப்பா பொருளாதாரம் படித்து, பணியில் சேர்ந்த பின்னர் என் அப்பாவுக்கும் கலைஞருக்குமான உறவு இன்னும் இறுக்கமாகி இருக்கிறது. திமுகவின் பொருளாதார கொள்கைகளை வடிவமைப்பது, மாறி வரும் உலகப் பொருளாதாரம் குறித்து விவரிப்பது என்று என் அப்பா எப்போதும் கலைஞருடன் இணைந்தே பயணித்து இருக்கிறார். என் அப்பாவும், கலைஞரும் தினமும் ஒன்றாக அறிவாலய வளாகத்தில் நடைபயிற்சி செல்வார்கள். அந்த சமயத்தில் எல்லாம் கலைஞரே வீட்டிற்கு தொலைபேசியில் அழைப்பார். பல முறை நானே அழைப்பை எடுத்திருக்கிறேன். தொலைப்பேசியில் ஒலிக்கும் அவரது கரகரப்பான குரல் இன்றும் என் நினைவில் இருக்கிறது.

பின் நான் மருத்துவம் பயின்றபோதுதான், அன்புமணி ராமதாஸ் மருத்துவ பயிற்சியை ஒன்றரை ஆண்டுகள் அதிகரிக்க திட்டமிட்டிருந்தார். இதற்கு எதிராக மாணவர்கள் கிளர்ந்தெழுந்தோம். போராட்டங்கள் தமிழகம் தழுவிய அளவில் நடைபெற்றது. இது தொடர்பாக அப்போது தமிழக முதல்வராக இருந்த கலைஞரை சந்தித்தோம். அவர் இதனை தாம் பார்த்து கொள்வதாக உறுதி அளித்தார். உறுதி அளித்தது போலவே இந்த பிரச்சனையையும் ஒரு முடிவுக்கு கொண்டுவந்தார். அந்த சந்திப்பின்போது 'நாகநாதன் பையன்தானே நீ?' என்று கேட்டவர், உடன் இருந்தவர்களிடம் எல்லாம் பெருமையாக சொல்லி இருக்கிறார்.

எங்கள் இருவருக்கும் நெருக்கமான உறவு ஏற்பட்டது 2013 ஆம் ஆண்டில்தான் . நான் மருத்துவம் முடித்து 2013 ஆம் ஆண்டுக்குப் பின் மருத்துவர் கோபால் உடன் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில், கோபால் வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால், கலைஞரை கவனித்துக் கொள்ள முடியுமா என்று கேட்டார். நானும் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டேன். தினமும் அவர் வீட்டிற்கு பின் மாலை பொழுது சென்று அவர் உடலை பரிசோதிப்பேன். முதல் மூன்று நாட்களுக்கு நான் யார் என்று அவருக்கு தெரியவில்லை. நான்காவது நாள், 'நீ நாகநாதன் மகன் தானே?' என்று கேட்டார். 'ஆமாம்' என்றேன்.'ஏன் இத்தனை நாட்களாக சொல்லவில்லை' என்று கேட்டார். இப்படியாகதான் எங்கள் இருவருக்குமான உறவு நெருக்கமானது."

'ஒழுக்கமான மாணவர்'

"மருத்துவர் சொல்லை கேட்பதில் கலைஞர் மிக ஒழுக்கமான மாணவர். தன் உடல் ரீதியான பிரச்னைகளை புரியும் வண்ணம் மிகத் துல்லியமாக விவரிப்பார். அதுபோல, மருத்துவரின் சொல்லுக்கு மிகவும் மதிப்பளித்து அப்படியே கீழ்படிவார். தனது உடலை பேணிகாக்க வேண்டும் என்பதில் மிக அக்கறையுடன் செயல்பட்டார். அந்த ஒழுக்கம்தான் அவரை இத்தனை ஆண்டுகள் பெரிய தடைகள் ஏதுமின்றி இயங்க வைத்திருக்கிறது."

"எம்.ஜி.ஆரும்... அந்த பதினேழு தோசையும்"

"சமூக அரசியல், கம்யூனிசம் என தினம் தினம் ஒவ்வொரு தலைப்பில் எனக்கும் கலைஞருக்கும் விவாதம் நிகழும். அனைத்தையும் கூர்மையாக கவனிப்பார். அவரது விவாதங்களில் நகைச்சுவை ததும்பும். எம்.ஜி. ஆருக்கும் தனக்குமான நட்பு குறித்து பேசி இருக்கிறார். அதில் ஒரு சம்பவம் மிகவும் சுவாரஸ்யமனது. பராசக்தி வெளிவராத நேரம், சிவாஜிக்கு திருமண ஏற்பாடு நடைபெறுகிறது. கலைஞர், எம்.ஜி.ஆர் என திரையுலகத்தினரும், திராவிட அரசியல் பிரமுகர்களும் திருமணத்திற்கு செல்கிறார்கள்.

திருமண மேடையில் எல்லா தலைவர்களும் ஒவ்வொருவராக பேச... எம்.ஜி.ஆருக்கு பசி எடுக்க தொடங்கி இருக்கிறது. ஒவ்வொருவரையாக பிடித்து இழுத்திருக்கிறார். பின் எல்லாம் முடிந்து பந்திக்கு போக, அங்கு உணவு தீர்ந்து போயிருக்கிறது. எம்.ஜி.ஆர் கடும்கோபம் அடைந்திருக்கிறார். பின் கலைஞரும், எம்.ஜி.ஆரும் உணவகத்திற்கு சென்று 17 தோசைகள் சாப்பிட்டிருக்கிறார்கள்.

இதுபோல பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்திருக்கிறார். அவர் என்றுமே எம்.ஜி.ஆர் குறித்து கோபமாகவோ, தவறாகவோ பேசியதில்லை."

'இலங்கை பிரச்சனை'

"இலங்கை போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் நான் கல்லூரி மாணவன். அந்த சமயத்தில் கலைஞருக்கு எதிராக நிறைய பேசி இருக்கிறேன். அவர் மீது நிறைய கோபம் கொண்டிருக்கிறேன். 2013-ல் அவருக்கு மருத்துவரான பின், என்னிடம் ஒருநாள், 'நீ எனக்கு எதிராக பேசி இருக்கிறாய்தானே' என்று சிரித்துக் கொண்டே கேட்டார். இலங்கை பிரச்சனையை பொறுத்தவரை பல நாடுகள் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றன. நிறைய தலையீடுகள் இருக்கின்றன என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். தன் அளவில் என்ன செய்ய முடியுமோ, அதனை அந்த சமயத்தில் அவர் செய்திருக்கிறார்.

இதையெல்லாம் கடந்து அவர் நல்ல 'ஜனநாயகவாதி'. இப்போது ஒரே போராட்டத்தில் அரச பயங்கரவாதத்தை ஏவி பலரை சுட்டுக் கொன்றதுபோல அவர் எதுவும் செய்யவில்லை. இப்போது ஒரு கூட்டத்திற்கே அனுமதி வாங்குவது அவ்வளவு சிரமமான ஒன்றாக இருக்கிறதுதானே? ஆனால், அப்போது அந்த சமயத்தில் தமக்கு எதிரான அனைத்து கூட்டங்களுக்கும் அவர் எந்த மனத்தடையும் இல்லாமல் அனுமதி கொடுத்தார். அந்த ஜனநாயக பண்பு அவரிடம் எப்போதும் இருந்தது"

'சுயநலம் கலந்த பொதுநலவாதி'

"கருணாநிதியை ஒரு வரியில் விவரிக்க வேண்டுமென்றால், அவர் 'சுயநலம் கலந்த பொதுநலவாதி' என்கிறார் மருத்துவர் எழிலன். மேலும் "வெளி கண்ணோட்டத்துக்கு பரபரப்பான அரசியல்வாதியாக தெரிந்தாலும், உண்மையில் அவர் உள்ளுக்குள் எதற்கும் பதற்றப்படாத ஞானதன்மையுடன் இருந்தார். உறவுகள் உட்பட அனைத்தின் மீதும் பற்றின்மையுடன்தான் அவர் வாழ்ந்தார். கலைஞரை இவ்வளவு தரக்குறைவாக பேசுகிறார்களே.... அவர் கடுமையான கோபத்தில் இருப்பார் என நாம் நினைத்துக் கொண்டிருக்கும்போது, அவர் வீட்டில் ஏதேனும் தொலைக்காட்சி தொடர் பார்த்துக் கொண்டிருப்பார். இறுதிவரை இப்படியான மனநிலையில்தான் அவர் வாழ்ந்தார்"

'கருணாநிதியின் கடைசி தினங்கள்'

"ஜூலை 30 இரவு அவர் உடல் நலம் குறித்து ஒரு வதந்தி பரவியதுதானே? என்ற நம் கேள்விக்கு, "ஆம்... எனக்கே அன்றிரவு அவர் இறந்துவிட்டார் என்று குறுஞ்செய்தி வந்தது. அன்றிரவு அவர் உடல் சற்று மோசமடைந்தது உண்மைதான். ஆனால், இவர்கள்சொல்வது போல அவர் இதயம் நின்றெல்லாம் துடிக்கவில்லை. என்னதான் அவர் கட்டுகோப்பாக இருந்தாலும், வயது மூப்பின் காரணமாக அவரது உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்க தொடங்கின.

படத்தின் காப்புரிமை Facebook

எல்லோரும் நாம் பிடித்து வைத்திருந்த கலைஞர் இறந்தது குறித்துதான் பேசுகிறீர்கள். உண்மையில் கலைஞர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். ஆம், மேடையில் கரகரப்பான குரலில் பேசுபவர்தானே நாம் அறிந்த கலைஞர், கவியரங்கத்திற்கு தலைமை வகிப்பவர்தானே நாம் விரும்பிய கலைஞர், உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதியவர்தானே தொண்டர்களின் கலைஞர். இதனையெல்லாம் அவர் நிறுத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. பின், இந்த இரண்டு ஆண்டுகள் நமது தேவைக்காக அவரை இழுத்து பிடித்து வைத்திருந்தோம்."

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்