கர்நாடகாவில் பெண்களே சேர்ந்து நடத்தும் தேசியக் கொடி உற்பத்தி நிலையம்

  • 14 ஆகஸ்ட் 2018

இந்தியா தனது சுதந்திர தின கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை துவங்கும் முன்பே இந்தியத் தலைநகரமான புது டெல்லியில் இருந்து சுமார் 2,000 கிமீ தூரத்தில் உள்ள பெங்கேரி என்ற சிறு கிராமத்தை சேர்த்த சில பெண்கள் விறு விறுப்பாக வேலை செய்ய தொடங்கி விடுவார்கள்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
எப்படி தயாராகிறது இந்திய தேசியக்கொடி?

இந்திய தேசியக் கொடி உற்பத்தி நிலையத்தில் பணிபுரியும் இந்த 30 பெண்கள்தான் பல முக்கிய இடங்களில் சுதந்திர தினத்தன்று ஏற்றப்படும் இந்திய தேசியக் கொடியை உருவாக்குபவர்கள். தேசியக் கொடி உற்பத்தி நிலையம், கர்நாடகாவின் ஹுப்ளியில் உள்ள காதி கிராமோத்யோக் சங்கத்தை சேர்ந்தது.

BIS (இந்திய பொருட்களுக்கு தர சான்றிதழ் வழங்கும் அரசு நிறுவனம்) அங்கீகாரம் பெற்று தேசியக் கொடி தயாரிக்கும் நிறுவனம் இந்தியாவிலேயே இது மட்டும்தான்.

தேசிய கொடிக்குப் பயன்படுத்தப்படும் காதி துணி ஹூப்ளிக்கு அருகே உள்ள சிறு கிராமங்களில் நெய்யப்படுகிறது. இந்த சிறு கிராமங்களில் இருந்து காதி துணிகள் பெங்கேரிக்கு கொண்டு வரப்பட்ட பின் இத் துணிகளில் மூவர்ணச் சாயம் ஏற்றப்படுகிறது.

சாயமேற்றப்பட்ட துணிகளை வெட்டி, அசோக சக்கரம் அச்சிட்டபின் இந்திய தேசியக் கொடியாக இந்த துணிகளைத் தைக்கும் பொறுப்பு இந்த பெண்களைச் சேர்ந்தது.

"எங்களது யூனிட்டுக்கு வண்ணம் தோய்க்கப்பட்ட துணிகள் வந்து சேர்தவுடன் நங்கள் BIS பரிந்துரைத்த அளவுகளில் துணிகளை வெட்டிவிடுவோம். பிறகு வெள்ளை துணியில் மட்டும் அசோக சக்கரத்தை திரை ஆச்சு மூலம் அச்சிடுவோம். இறுதியில் மூன்று வண்ணத் துணிகளை இணைத்து கொடியாகத் தைப்போம். தைக்கப்பட்ட தேசியக் கொடியை இஸ்திரி போட்டு பேக் செய்வோம்" என்கிறார் தேசியக் கொடி உற்பத்தி நிலைய மேலாளர் அன்னபூர்ணா.

படத்தின் காப்புரிமை Mitchell Gunn

ஓர் ஆண்டில் சுமார் 30,000 கொடிகள் இங்கு தயாரிக்கப்படும். ஒன்பது விதமான அளவுகளில் இங்கு கொடிகள் தயாரிக்கப்படுகின்றன. மிகவும் சிறியவை 6 அங்குலம் x 4 அங்குலம், மிகவும் பெரியவை 21 அடி x 14 அடி.

ஏன் இங்கே பெண்கள் மட்டுமே பணிபுரிகிறார்கள் ?

"இந்த வேலைக்கு பெரிய அளவில் பொறுமை தேவைப்படும். நீண்ட நேரத்திற்கு ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரிய வேண்டும். ஆண்களுக்கு அது பெரிய சிரமமாகத் தெரியும். சிலர் முயற்சித்தனர். அனால் அவர்களால் முடியவில்லை. வேலையை விட்டவர்கள் மறுபடியும் வரவில்லை" என்கிறார் அன்னபூர்ணா.

இங்கு வேலை செய்யும் பெண்கள் கடுமையாக உழைக்கின்றனர். இந்தியாவின் கொடிக் குறியீடு மற்றும் BIS வழிகாட்டுதலை பின்பற்றுவது சற்று கடினமானதுதான். ஆனால் இந்தப் பணியால் அவர்களுக்கு கிடைக்கும் பெருமை அவர்களுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கிறது.

அவர்களது பொருளாதார நிலைமை மட்டும் வளரவில்லை அவர்களது இல்லங்களிலும் சமூக வட்டங்களிலும் மரியாதை கிடைத்திருப்பதாக அவர்கள் நினைக்கின்றனர்.

"இங்கே பணிக்கு சேருவதற்கு முன் நான் வீட்டைவிட்டு எங்கேயும் சென்றது கிடையாது. குடியரசுத் தலைவர் மாளிகையில், செங்கோட்டையில், விதான் சௌதாவில் மற்றும் பல புகழ் பெற்ற இடங்களில் தேசியக் கொடியை ஏற்றும் போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கும். ஏனென்றால் இந்த கொடிகளை நான் கையில் பிடித்திருக்கிறேன்.

இந்த பணி மூலம் எனது வீட்டிலும் என்னக்கு மரியாதை கிடைத்திருக்கிறது. நான் அதிக நேரம் பணிபுரிந்து விட்டு வீட்டுக்கு சற்று தாமதமாக சென்றாலும் எனது வீட்டார் ஒன்றும் கூறுவது இல்லை. அவர்களை பொறுத்தவரை நான் நாட்டுக்காக சேவை புரிகிறேன்" என்று கூறினார் திரை அச்சு துறையின் மேலாளர் நிர்மலா.

இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த கொடி தயாரிக்கும் நிலையம் விளங்குகிறது. "ஜாதி, மத ,பேதம் பார்க்காமல் இங்கு பணிபுரிந்து வருகிறோம். இங்கு எந்த வேறுபாடும் கிடையாது. பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதால் எங்களிடையே ஒரு பந்தம் உருவாகி உள்ளது" என்கிறார் 14 ஆண்டுகளாக தையல் செய்து வரும் ரெஹானா பெல்லாரி

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வெங்கடேஷ் தமது நண்பர்களோடு சேர்ந்து இந்த காதி கிராமோதயக் சங்கத்தை 1957-ல் துவக்கினார். இந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக கதரை பிரபலப்படுத்தி வருகிறார்கள். அவர்கள் தொடர்ந்து செய்த நற்பணிகள்தான் 2005 ஆம் ஆண்டில் தேசிய கொடி தயாரிப்புப் பிரிவை அமைப்பதற்கான அங்கீகாரம் கிடைக்க காரணமாக இருந்தது.

"கொடி உருவாக்கும் பணி ஆண்டு முழுவதும் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. கொடியின் விற்பனை இந்தியாவின் கசுதந்திர தினத்துக்கு முன்பாகவும் குடியரசு தினத்துக்கு முன்பாகவும் சூடு பிடிக்கும். அனால் எங்கள் பணியோ ஆண்டு முழுவதும் நடை பெற்றுக்கொண்டே இருக்கும்.

இந்த ஆண்டு மூன்று கோடி ரூபாய் அளவுக்கு தேசியக் கொடியை உருவாக்கவும் விற்கவும் இலக்கு தீட்டி இருக்கிறோம்". என்கிறார் கர்நாடக கிராமோத்யோக் சங்கத்தின் செயலாளர் சிவானது மடபதி.

காதி கொடிகள் மலிவானவை அல்ல. இங்கு தயாராகும் கொடிகளில் மிக சிறிய வகை (6 அங்குலம் x 4 அங்குலம் ) யின் விலை ரூ.220. ஒரு சாமானிய இந்தியனுக்கு இவ்வளவு விலை கொடுத்து சுதந்திர தினத்தன்று தேசப்பற்றை வெளிப்படுத்துவது கடினமே. இதுவே மலிவான பிளாஸ்டிக் கொடிகள் பிரபலமானதற்குக் கரணம்.

இதை கருத்தில் கொண்டு கிராமோத்யோக் சங்கத்தினர் 2 ரூபாய் விலையில் பாக்கெட் கொடியை உருவாக்கியுள்ளனர். இந்த சுதந்திர தினத்தன்று பிளாஸ்டிக் கொடிகளை தவிர்த்து காதி கொடிகளை பயன்படுத்துங்கள் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார் மடபதி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :