டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்திப்பது ஏன்?

நேற்று (திங்கள் கிழமை) டாலருக்கு எதிரான இந்திய மதிப்பு கடுமையாக சரிந்தது. இந்த வீழ்ச்சிக்கு துருக்கியின் லிரா மதிப்பு வீழ்ச்சியடைந்திருப்பதும் பகுதியளவு காரணமாக அமைந்துள்ளது.

படத்தின் காப்புரிமை PUNIT PARANJPE

துருக்கியில் கடன்களை திருப்பிச் செலுத்துவதில் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட கவலைகளும், அமெரிக்காவுடனான அதன் உறவு மோசமடைந்திருப்பதும், துருக்கியின் எஃகு மற்றும் அலுமினியத்தின் மீது அமெரிக்கா வரிகளை உயர்த்தியிருப்பதும் துருக்கி நாணயமான லிராவின் மதிப்பு மிகக்கடுமையாக வீழ்ந்ததற்கு காரணங்களாகும்.

இதன் விளைவாக முதலீட்டாளர்கள் வளர்ந்துவரும் நாணயமான ரூபாயை விட அமெரிக்க டாலர்கள் முதலான பாதுகாப்பான நாணயங்களை நாடத் துவங்கியுள்ளார்கள். ஆகவே இந்தியா போன்ற நாடுகளில் உள்ள தங்களது பங்குகளை விற்கத் துவங்கியுள்ளனர்.

எனினும், எஸ் வங்கியுடன் செயல்படும் மூத்த பொருளாதார வல்லுநர் விவேக் குமார் ''இது குறித்து கவலைப்படத் தேவையில்லை'' என்கிறார்.

''இந்நிலை நீடிக்காது என நினைக்கிறோம். ஆனால் ஒருவேளை நீடிக்கும்பட்சத்தில் ரூபாயின் இயக்கத்தை மென்மையாக்குவதற்கு ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை உயர்த்துவது போன்ற தேவையான நடவடிக்கையை எடுக்கக்கூடும்''

தற்போது துருக்கியின் லிரா மதிப்பு சரிவானது இந்தியாவின் நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது. இதனால் இந்திய ரூபாய் மதிப்பானது கடும் சரிவை சந்தித்துள்ளது. இது வர்த்தக இடைவெளிக்கு வித்திட்டுள்ளது. இந்தியாவின் வணிக பற்றாக்குறையானது கடந்த ஐந்து வருடத்தில் இவ்வருடம் ஜூன் மாதம் 16.6 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் டாலர் மதிப்பு வலுவாகிக் கொண்டே செல்கிறது. அதாவது அமெரிக்காவின் பொருளாதார நிலை உயர்ந்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை INDRANIL MUKHERJEE

ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கான இன்னொரு முக்கிய காரணம் இந்தியாவில் எண்ணெய் இறக்குமதி அளவு. இந்தியா தனது தேவைக்கான எண்ணெய் அளவில் சுமார் 80 சதவீதம் இறக்குமதி செய்கிறது. உலகில் அதிகளவு எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

இந்தியா எண்ணெய்க்கு கொடுக்கும் விலையானது அதிகரித்துள்ளது. இரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தபிறகு, இத்தடையால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுமா என்ற கவலையால் சர்வதேச எண்ணெய் விலை அதிகரித்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி நமது வாழ்க்கையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

''வழக்கமாக ரூபாய் வீழ்ச்சியடைந்தால் பணவீக்கத்தில் ஒரு சிறிய தாக்கம் இருக்கும். இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகமாக இருக்கும். எனினும், ஒரு நேர்மறையான சங்கதி என்னவெனில் நாம் ஏற்றுமதி செய்யும் பொருட்கள் சந்தையில் நன்றாக போட்டிபோடும்.'' என்கிறார் குமார்.

இருப்பினும், அயல்நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களுக்கு ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி என்பது கெட்ட செய்தியே. குறிப்பாக அமெரிக்காவுக்கு பயணிப்பவர்களுக்கு!

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: