பிக்பாஸில் கிராம சபை குறித்து கமல் அழுத்தம் கொடுத்தது ஏன்?

கமல் பிக்பாஸ் நிகழ்வில் கிராம சபை கூட்டம் குறித்தும், அந்த நிகழ்வில் பங்கேற்பதன் அவசியம் குறித்தும் மிகவும் விரிவாக விளக்கி இருந்தார். கோடிகளில் வணிகம் நடைபெறும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கிராம சபை குறித்து உரையாட வேண்டிய அவசியம் என்ன? உண்மையில் அவ்வளவு முக்கியத்துவம் வாயந்ததா கிராம சபை கூட்டம்?

படத்தின் காப்புரிமை Getty Images

சுதந்திர தினம் அன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடக்க இருக்கும் சூழலில் இதன் முக்கியத்துவம் குறித்து செயற்பாட்டாளர் நந்தகுமாரிடம் பேசினோம்.

பொருளாதார பாதுகாப்பு தரும் பன்னாட்டு நிறுவன பணியை துறந்து நந்தகுமார் கிராம பஞ்சாயத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் கடந்த பல்லாண்டுகாலமாக செயல்பட்டு வருகிறார்.

நந்தக்குமார் அண்மையில் தமிழகம் முழுவதும் ஏறத்தாழ பத்தாயிரம் கிலோமீட்டர்கள் பயணம் செய்து கிராம சபைக் கூட்டங்கள் குறித்து உரையாடி, அதில் மக்களைப் பங்குபெறச் செய்துள்ளார்.

கிராம சபை கூட்டங்கள்

அரசு நிர்வாகத்தில் நேரடியாக பங்கேற்பதன் வாய்ப்பை வழங்குகிறது கிராம சபை கூட்டங்கள் என்கிறார் நந்தகுமார்.

நமது கிராமத்திற்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவது முதல் நமக்கு தேவையில்லாத சூழலியலை கெடுக்கும் திட்டங்களை தடுப்பது வரை பல விஷயங்களை கிராம சபை கூட்டங்களில் விவாதிக்க முடியும். அது குறித்த காத்திரமான முடிவுகளை எடுக்க முடியும் என்கிறார் அவர்.

படத்தின் காப்புரிமை Getty Images

"கிராம சபை குறித்து புரிந்து கொள்ள வேண்டுமானால், முதலில் நாம் கிராம பஞ்சாயத்து குறித்தும் அதன் அதிகாரங்கள் குறித்தும் புரிந்து கொள்ள வேண்டும். கேரள மாநில பிளாச்சிமடையில் ஒரு பெரும் கோலா நிறுவனத்தை மூட வைத்தது கிராம பஞ்சாயத்து என்றால் நம்ப முடிகிறதா? சென்னை அருகே குத்தம்பாக்கத்தை குப்பைகள் கொட்டும் ஒரு தளமாக மாற்ற முயன்ற போது அதனை தடுத்து நிறுத்தியதும் கிராம பஞ்சாயத்துதான் என்றால் நம்ப முடிகிறதா? உண்மையில் நாம் அசாத்தியமாக நினைக்கும் பல விஷயங்களை சாத்தியப்படுத்தி இருக்கிறது கிராம பஞ்சாயத்து. கிராம பஞ்சாயத்து என்பது ஓர் அரசாங்கம்" என்று விவரிக்கிறார் நந்தகுமார்.

கிராம சபையின் அதிகாரங்கள்

வளர்ச்சி என்பது உச்சியிலிருந்து வருவதில்லை அது வேரிலிருந்து வருவது. வளர்ச்சி வேண்டுமானால், நாம் வேரில் வேலை செய்ய வேண்டும் என்கிறார் நந்த்குமார்.

"நமக்கு அரசு மீது சில கோபங்கள் இருக்கிறதுதானே? அரசு அதனை செய்யவில்லை, இதனை செய்யவில்லை, நம்மீது ஏதோ ஒன்றை திணிக்கிறது என்று பல வருத்தங்கள் இருக்கிறது தானே. உண்மையில் இந்த வருத்தங்களை நாம் கிராம சபையின் மூலம் களைய முடியும்."

படத்தின் காப்புரிமை Getty Images

"தமிழகத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் (ஜனவரி 26), தொழிலாளர் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) ஆகிய 4 நாட்கள் கிராமசபைக் கூட்டத்தை கூட்டுவது கட்டாயம்."

படத்தின் காப்புரிமை உள்ளாட்சி உங்களாட்சி

இந்த கிராம சபையில் விவாதிக்க மாநில அரசே சில தீர்மானங்களை முன்மொழியும். இதனை கடந்து நமக்கு தேவையான, நம் பகுதிக்கு தேவையான தீர்மானங்களை முன்மொழிந்து விவாதித்து, அதனை அரசுக்கு அனுப்பி வைக்க முடியும்" என்கிறார் நந்தகுமார்.

1993 ஆம் ஆண்டிலிருந்து கட்டாயமாக்கப்பட்டு இந்த கிராம சபை கூட்டங்கள் நடந்தாலும், இது குறித்த போதுமான விழிப்புணர்வு நம் மக்களிடம் இல்லை என்கிறார் அவர். பெரும்பாலும் கிராம சபை கூட்டங்கள் உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் விருப்பப்படியே இயங்குவதாக கூறுகிறார் அவர்.

மாற்ற வேண்டுமா?

கிராமப் பஞ்சாயத்துக்கு மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கி உள்ள நிதி எவ்வளவு? அந்த நிதியினை எவ்வாறு நாம் செயல்படுத்தி இருக்கிறோம் என்பது குறித்தெல்லாம் இந்த கூட்டத்தில் விவாதிக்க முடியும் என்கிறார்.

படத்தின் காப்புரிமை Facebook

உண்மையில் நாம் மாற்றத்தை விரும்புவோமாயின் நாம் நிச்சயம் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்று சொல்லும் நந்தகுமார், ஜனநாயகத்தை கண்காணிப்பதன் மூலமாகதான் நாம் உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள முடியும். அந்த கண்காணித்தல் இந்த கிராம சபை கூட்டங்கள் மூலம் நிகழ்வதாக கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்