பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நாணா பாட்டீல் நடத்திய 'இணை அரசு' பற்றித் தெரியுமா?

  • 15 ஆகஸ்ட் 2018

1942ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கம் மும்முரமாக நடைபெற்றபோது, 'பட்ரி சர்கார்' என்று அழைக்கப்படும் 'இணை அரசு'க்கான விதைகளை மகாராஷ்டிரா சதாரா மாவட்டத்தில் விதைத்தவர் புரட்சிக்காரர் நாணா பாட்டீல்.

படத்தின் காப்புரிமை PRAJAKTA DHEKALE
Image caption புரட்சியாளர் பாட்டீலின் மகள் ஹெளஸாபாய் பாட்டீல்

மகாத்மா காந்தியின் சிந்தனைகளின் தாக்கத்தினால் அரசுப் பணியை துறந்து தேச விடுதலை இயக்கத்தில் சேர்ந்தார் அவர்.

மகாத்மா காந்தியால் வழி நடத்தப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றபின், சதாராவில் நாணா பாட்டீல் இணை அரசை உருவாக்கினார். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சுதேசி பொருட்களை வாங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி கிராமங்கள் தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

ஆங்கிலேய அரசை வெளியேற்ற வேண்டும் என்று மக்களுக்கு சுதந்திர தாகத்தை ஊட்டினார். இணை அரசின் ஒரு பகுதியாக கிராமங்கள் அனைத்திலும் கிராம கமிட்டிகளை ஏற்படுத்தினார். அந்த குழுக்கள், இணை அரசின் வழிகாட்டுதல்களின்படி தங்கள் செயல்பாடுகளை சுயநலமின்றி நிர்வகித்தன. வெளிநாட்டு துணிகள் கிராமங்களில் எரிக்கப்பட்டன.

பாட்டீலின் புரட்சி இயக்கத்தால் பிரிட்டிஷ் ஆட்சியர்கள் திகைத்தார்கள். பாட்டீலை கைது செய்ய உதவுபவர்களுக்கு சன்மானம் வழங்குவதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது.

தலைமறைவாகவே இருந்து பணியாற்றிய பாட்டீல், பொதுக்கூட்டங்களில் பேசும்போது ஆங்கிலேய அரசுக்கு எதிராக ஆவேசமாக உரையாற்றுவார். அவரது உறுதியான ஆளுமை மற்றும் வெண்கலக் குரலால் மக்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டார்கள். பெரும்பாலான இளைஞர்கள் இணை அரசாங்கத்திற்கு ஆதரவாக வெளிப்படையாக பணிபுரியத் தொடங்கினர்.

புரட்சியாளர் பாட்டீலின் மகள் ஹெளஸாபாய் பாட்டீல் 93 வயதினராக தற்போது சங்லி மாவட்டம் ஹன்மன்வாடியே கிராமத்தில் வசித்து வருகிறார். பிபிசியிடம் பேசிய அவர், தனது தந்தையின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

வயது மூப்பு அவரது குரலை மாற்றியிருந்தாலும், இந்த வயதிலும் அவரது குரல் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. நாணா பாட்டீலின் தலைமையில் இந்திய விடுதலை போராட்டத்தின்போது ஆங்கிலேயே அரசுக்கு நிகராக இணை அரசு உருவாக்கப்பட்டது என்பதை அவர் நினைவுகூர்கிறார்.

படத்தின் காப்புரிமை SUBHASH PATIL
Image caption புரட்சியாளர் பாட்டீலின் மகள் ஹெளஸாபாய் பாட்டீல் 93 வயதினராக தற்போது சங்லி மாவட்டம் ஹன்மன்வாடியே கிராமத்தில் வசித்து வருகிறார்.

விடுதலை போராட்ட வீரர்கள் ஜி.டி பாப்பு லாத், ஷாஹிர் ஷங்கர்ராவ் நிகம், போன்றவர்கள் இணை அரசுக்கு உறுதியான ஆதரவளித்தனர். அவர்களுடன் இணைந்து ஹெளஸாபாய் பாட்டீலும் பணியாற்றினார்.

'நாங்கள் வெற்றிகரமாக ஆயுதங்களை கைப்பற்றினோம்' என்று இணை அரசுக்கு தேவையான ஆயுதங்களை பெற்றது தொடர்பான நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார் ஹெளஸாபாய்.

"சங்லி மாவட்டம் பவானி நகர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை கைப்பற்றும் பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டிருந்தது. பகல் நேரத்தில் ஆயுதங்களை சூறையாடுவது என்பது புலியின் வாயில் கைவிடுவதற்கு சமமானது என்றாலும், எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை முடித்தாக வேண்டும்".

"எனது சகாக்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையின் பொறுப்பை உணர்ந்திருக்கிறார்களா என்பதை முதலில் உறுதி செய்துக் கொண்டேன். சிலரை அழைத்துக் கொண்டு, காவல்நிலைய வளாகத்திற்குள் சென்றேன்".

படத்தின் காப்புரிமை SUBHASH PATIL

"சகாக்களில் ஒருவர் என் சகோதரர் போல நடித்து, கணவர் வீட்டிற்கு போகாத என்னை அடிக்கத் தொடங்கினார். சகோதரரின் பேச்சை கேட்காததால் தலையில் அவர் கல்லால் அடிக்க, இரண்டு போலீசார் ஓடி வந்து அவரை கட்டுப்படுத்த முயன்றனர். நாங்கள் இப்படி சண்டையிட்டு கவனத்தை சிதறடித்த நேரத்தில் குழுவின் பிற சகாக்கள் திட்டமிட்டபடி துப்பாக்கிகள், தோட்டாக்கள் என ஆயுதங்களை கொள்ளையடித்துச் சென்றனர். எல்லாமே நாங்கள் திட்டமிட்டபடி நடந்தேறியது.

"திரும்பி வந்த என்னை அப்பா அணைத்துக் கொண்டார், அவரது கண்களில் ஆனந்த கண்ணீர். விடுதலை போராட்டக் காலத்தில் பட்ரி சர்கார் எனப்படும் இணை அரசு, ஆங்கிலேய ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் புதுமையான திட்டங்களை தீட்டி செயல்படுத்தியது".

ஒரு சமயம் தபால் நிலையத்தை எரித்தால், மற்றொரு சமயம் ரயில் இருப்புப்பாதைகள் சிதைக்கப்படும். தொலைபேசி கம்பிகள் அறுக்கப்படும், ஆங்கிலேயர்களின் கஜானாவை கொள்ளையடிப்போம் என்று சொல்லும் ஹெளஸாபாய் தானே இதுபோன்ற போராட்டங்களை முன் நின்று நடத்துவாராம்.

'உண்மையிலே மக்களுக்கு விடுதலை கிடைத்தா?'

"புரட்சியாளர் பாட்டீல் காடுகளில் அலைந்து திரிந்தும், தலைமறைவாக வேலைகள் செய்தும் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டார். இணை அரசாங்கத்தை நடத்தி ஆங்கிலேய அரசுக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தினார்.

ஆனால், உண்மையிலுமே மக்கள் விடுதலை அடைந்துவிட்டார்களா? இந்த கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. இன்றும் மக்களின் அடிப்படை தேவைகளான உணவும் உடையும் அனைவருக்கும் கிடைத்துவிட்டதா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது" என்று வருந்துகிறார் ஹெளஸாபாய்.

"இன்று என் தந்தை புரட்சியாளர் நாணா பாட்டீல் உயிருடன் இருந்தால், இந்த அரசு மூன்று நாட்கள் கூட ஆட்சியில் இருந்திருக்க முடியாது அவர்களை ஆட்சியில் இருந்து அகற்றியிருப்பார்" என்று கூறுகிறார் ஹெளஸாபாய்.

படத்தின் காப்புரிமை SUBHASH PATIL

மூன்று வயதில் தாயை இழந்த ஹெளஸாபாய், தேச விடுதலைக்காக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தந்தையுடனும் அதிக காலத்தை செலவிட்டதில்லை. தந்தை எப்போதும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்ததால், தனது வாழ்க்கையில் பல போராட்டங்களை எதிர்கொண்டிருக்கிறார் ஹெளஸாபாய். ஆனால் தேசபக்தி என்ற விதை சிறுவயதிலேயே அவரது இதயத்தில் தந்தையால் ஊன்றப்பட்டுவிட்டது.

வளர்ந்த பிறகு, இணை அரசை செயல்படுத்துவதற்காக தன்னை முற்றிலுமாக அர்பணித்துக் கொண்டார் ஹெளஸாபாய். தலைமறைவாக இருக்கும் தலைவர்களுக்கு ரகசியமாக தகவல்களை கொண்டு செல்வது, அவர்களுக்கு உணவு, போக்குவரத்து, ஆயுதங்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்வது என துணிச்சலான காரியங்களில் ஈடுபட்டார் அவர்.

விடுதலை இயக்கத்தில் தனது பங்கை மேலும் விவரிக்கும் ஹெளஸாபாய், "சிறிய சீட்டுகளில் எழுதப்பட்ட ரகசிய செய்திகள் யார் கையிலும் கிடைத்துவிடாமல் தவிர்ப்பதற்காக தலை முடிக்குள் அவற்றை ஒளித்து வைத்து கொண்டு செல்வோம். சில நேரங்களில் எங்கள் பாதங்களின் கீழ்ப்பகுதியில் சீட்டுகளை ஒட்டி வைப்போம்.

"ஒருமுறை நானும் என் சகாவும் சென்றுக் கொண்டிருந்தபோது அதிகாரிகள் எங்களை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது தலைமறைவாக இருந்த எங்கள் தலைவர்களுக்கு ரகசிய செய்திகளை கொண்டு சென்றுக் கொண்டிருந்தோம். அதிகாரிகள் எங்களிடம் விசாரிக்கத் தொடங்கினார்கள். அதிகாரிகளை தொலைவில் பார்த்தவுடனே, என்னிடம் இருந்த சீட்டை வாயில் போட்டு மென்று விழுங்கிவிட்டேன். எங்களிடம் சோதனை செய்தபோது, துப்பு எதுவும் கிடைக்காததால் நாங்கள் பாதுகாப்பாக வெளியேறிவிட்டோம்.

காந்தி - எனது நண்பர்

"என் வாழ்க்கையை என்னுடைய தந்தை காட்டிய தேச நலனுக்கான வழியில் செலுத்தினேன். பிற பெண்களையும் விடுதலை இயக்கத்தில் சேர்க்கும் பணிகளை ஒருங்கிணைத்தேன். எதாவது ஒரு விதத்தில் பெண்களும் நாட்டு விடுதலைக்காக பாடுபடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். பெண்கள் வீட்டில் மாவு அரைத்துக் கொண்டே, தேச பக்திப் பாடல்களை பாட பயிற்றுவித்தேன்.

"பல விவசாயிகள் இணை அரசாங்கள் பற்றிய பாடல்களை பாடியவாறே வயல்களில் விவசாயப் பணிகளில் ஈடுபடுவார்கள்.

படத்தின் காப்புரிமை SUBHASH PATIL

"நாணா பாட்டீல் சுதந்திரம் குறித்த தனது கண்ணோட்டத்தை எந்தவித மூட நம்பிக்கைகளுக்கும் இரையாக்க அனுமதிக்கவில்லை. தனது மகள் ஹெளஸாபாய்க்கும், சுதந்திரப் போராட்ட வீரர் பகவான்ராவ் மோரே பாட்டீலுக்கு திருமணம் செய்து வைத்தார் நாணா பாட்டீல். திருமணத்தில் வரதட்சணை என்ற பேச்சுக்கே இடமில்லை. மேள தாளங்களும் இல்லை, விருந்தும் கொடுக்கப்படவில்லை. காந்திய வழியில் எளிமையாக நடந்தேறிய அந்த திருமணத்தில் தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொண்டனர். பிறகு இந்த பழக்கத்தை பல ஆர்வலர்கள் பின்பற்றினார்கள்."

'சத்யஷோதக்' (சத்தியத்தை தேடும்) என்ற கொள்கையின் அடிப்படையில் வளர்க்கப்பட்ட ஹெளஸபாய், பிரிட்டிஷ் அடக்குமுறை மற்றும் காலனித்துவ ஆட்சியில் கட்டாயப்படுத்தப்பட்ட உண்மைகளின் தாக்கங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

தற்போது நிலவும் சூழ்நிலையைப் பற்றி கூறும் ஹெளசாபாய், "அவர்கள் வெள்ளைக்காரர்களைத் துரத்திவிட்டு, வெள்ளையர் அல்லாதோரை (ஆட்சியாளர்கள்) கொண்டு வந்துவிட்டனர்... எதோ ஓரிடத்தில் தவறு செய்திருக்கிறோம்! நாம் அந்த நாற்காலிகளை எரித்திருக்க வேண்டும், அப்போதுதான் உண்மையான சுதந்திரம் நமக்கு கிடைத்திருக்கும்… என் குடும்பத்தினர் உட்பட விடுதலை போராட்ட வீரர்களும் போராடி பெற்ற சுதந்திரம் இன்று நொறுங்கிய நிலையில் இருக்கிறது. இதை பார்க்கும்போது என் இதயம் அனலில் வெம்புகிறது. இதற்குத் தானா நாங்கள் ஆசைப்பட்டோம்!!!"

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :