கேரள வெள்ளம் : 26 நொடிகளில் குழந்தையை மீட்ட கண்ணையா குமார் யார்?

  • 15 ஆகஸ்ட் 2018

கண்ணையா குமார், கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றவந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவில் முக்கியமாக பேசப்படுகிறார்.

Image caption கண்ணையா குமார்

பெரியாறு நதியில் வெள்ளம் கரைபுரண்டு வந்த நேரத்தில், இடுக்கி மாவட்டம் செருதொனி பகுதியில் ஒரு தந்தையின் கைகளில் இருந்த சிறு குழந்தையை எடுத்துக்கொண்டு, ஒரு பாலத்தை ஓடிக்கடந்தார் கண்ணையா. அவர் பாலத்தைத் தாண்டியதும் அந்த இடம் தகர்ந்து பாலம் உள்வாங்கி கடல்போல காட்சியளித்தது.

சென்னையில் இருந்து கேரளா வந்துள்ள 10 படைப்பிரிவுகளில், பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த கண்ணையா ஒரு மீட்புப் பணி காவலர். குழந்தையை மீட்கும் பணியை முடிக்க கண்ணையா எடுத்துக்கொண்டது வெறும் 26நொடிகள் என்கிறார்கள் மீட்புக் குழுவில் உள்ள மற்ற அதிகாரிகள்.

கரையேறியதும், கண்ணையாவுக்கு எவ்வாறு நன்றி சொல்வதென்றே தெரியாமல் குழந்தையின் தந்தை நெகிழ்ந்துபோனார்.

''பாதிக்கப்பட்ட எல்லோரும் என் குடும்பம்''

சமூக வலைத் தளங்களில் பிரபலமாகிவிட்ட பீகாரைச் சேர்ந்த கண்ணையாகுமார், தனது மூன்று சகோதரர்கள், பெற்றோர் என குடும்ப உறுப்பினர்களுக்கு உதவவும், தனது குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்கவும் பள்ளிப்படிப்பு முடித்ததும், அரசுப்பணித் தேர்வுகளை எழுதினார். பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவில் கடந்த ஆறு ஆண்டுகளாக பணிபுரிகிறார்.

படத்தின் காப்புரிமை Facebook
Image caption சமூக வலைதளங்களில் வைரலான கண்ணையா குமாரின் புகைப்படம்

''என் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக நான் அரசு வேலைக்குச் சேர்ந்தேன். தற்போது பலரையும் காப்பாற்றுகிறேன் என்பதில் மகிழ்ச்சி. எனது மூன்று சகோதரர்களில் இருவர் தற்போது இந்திய ராணுவத்தில் இருக்கிறார்கள். ஒரு சகோதரர் காஷ்மீரில் வேலைசெய்கிறார்.

நாங்கள் சந்தித்துக் கொள்வது அரிது. ஆனால் தற்போது வேலை எங்களுக்குப் பிடித்துவிட்டது. எங்கள் பெற்றோரும் பெருமையாக இருக்கிறார்கள். இப்போது பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் என் குடும்பம் ஆகிப்போனார்கள்'' என்கிறார் கண்ணையா.

கேரளாவில் நடக்கும் மீட்பு பணிகள் குறித்துப் பேசிய அவர், ''வெள்ள மீட்புப் பணிகளுக்காக கேரளா செல்கிறோம் என்பது மட்டும் தெரியும். இங்குவந்தபோது நாங்கள் நிறைய வேலைசெய்யவேண்டும் என்பது புரிந்தது. நாங்கள் வந்துள்ள இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவு அதிகம்.

செருதொனி பகுதியில் 26 ஆண்டுகளுக்கு பிறகு, முன்பு நதி இருந்த இடத்தில் வெள்ளம் பாய்கிறது. செருதொனி பேருந்துநிலையம் இருந்த இடம் தெரியவில்லை. தென்னந் தோப்புகள் மூழ்கியுள்ளன. உதவி கேட்கும் குரலுக்காக காத்திருக்கிறோம்'' என்கிறார் கண்ணையா.

''இயற்கையை கணிக்க முடியாது''

மீட்புக்குழுவைச் சேர்ந்த மற்றொரு பணியாளர் கிரிபால் சிங் பேசும்போது வெள்ள மீட்புப் பணி அனுபவத்தை விளக்கினார்.

''இயற்கை சீற்றம் என்றால் பெரும்பாலும் நம்முடைய கணிப்பு எதுவும் சரியாக இருக்காது. எதற்கும் தயாராக இருக்கவேண்டும் என்பது மட்டுமே எங்களுக்கு சொல்லப்படும் மந்திரம்.

மீட்கப்படவேண்டியவர்கள் எவ்வளவு ஆழத்தில் சிக்கியுள்ளார்கள்? என்பதைப் பொருத்து அவர்களை கரைக்கு கொண்டுவர எடுக்கும் நேரம் முக்கியம். கரைக்கு கொண்டு வந்ததும் முதலுதவி உடனடியாக செய்யவேண்டும்.

அச்சத்தில் இருக்கும் மக்களுக்கு எங்கள் வேலை நம்பிக்கை கொடுக்கும். உயிரை காப்பற்றுவதற்கு நாங்கள் எடுக்கும் முயற்சியில் பாதிக்கப்பட்டவர்களும் சேர்ந்தே செயல்படுவார்கள்'' என்றார்.

கேரளாவில் அடுத்த இரண்டு நாட்களும் கடுமையான மழை இருக்கும் என்ற அறிவிப்பு உள்ளதால், மீட்புப்படகு, ஜாக்கெட், மருந்துகள் உள்ளிட்டவற்றை தயாராக வைத்துக்கொண்டு மழையைக் கண்காணித்தபடி பணியில் ஈடுபட்டுள்ளனர் மீட்புப்பணியாளர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்