நாளிதழ்களில் இன்று: ஆளுநரின் விருந்தை புறக்கணித்த நீதிபதிகள்

  • 16 ஆகஸ்ட் 2018

இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - ஆளுநரின் விருந்தை புறக்கணித்த நீதிபதிகள்

படத்தின் காப்புரிமை http://www.tnrajbhavan.gov.in/
Image caption ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் மாளிகையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து நிகழ்ச்சியை சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதிகள் பலரும் புறக்கணித்தனர்.

உயர் நீதிமன்றத்தின் 63 நீதிபதிகளில் 10 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய தலைமை நீதிபதி பதவியேற்கும் நிகழ்ச்சியில், விதிமுறைகளுக்கு மாறாக நீதிபதிங்களுக்கு அரசியல்வாதிகள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு பின் உள்ள இருக்கைகள் ஒதுக்கப்பட்டது குறித்து பல நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.


தி டைம்ஸ் ஆஃப் இந்தியா: காலமானார் அஜித் வடேகர்

படத்தின் காப்புரிமை Getty Images

நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் மும்பையில் நேற்றிரவு (புதன்கிழமை) காலமானது குறித்து தி டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

மும்பை ஜஸ்லோக் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக விவரித்த அந்நாளிதழ், இடதுகை மட்டை வீச்சாளரான வடேகரின் தலைமையில் கடந்த 1971-இல் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக பெற்ற வரலாற்று வெற்றியை நினைவு கூர்ந்துள்ளது.

1966இல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான வடேகர் 1974 வரை 37 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி, 2113 ரன்கள் குவித்ததை அந்த நாளிதழ் மேலும் விவரித்துள்ளது.


தி இந்து ஆங்கிலம் - மருத்துவக் காப்பீடும் பொருளாதார வளர்ச்சியும்

படத்தின் காப்புரிமை BBC/GETTY

செப்டம்பர் 25 முதல் பல கோடிபேருக்கு மருத்துவக் காப்பீடு தரும் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் அமலாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோதி அறிவித்துள்ளது குறித்து தி இந்து ஆங்கில நாளிதழ் தலையங்கம் எழுதியுள்ளது.

பொருளாதார வளர்ச்சி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றுக்கு உள்ள தொடர்பை அரசு புரிந்துகொண்டுள்ளது போல தெரிகிறது என்றும் 130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியா போன்ற நாடு மருத்துவச் செலவுகளுக்கு, வீட்டிலுள்ள சேமிப்பை நம்பி இருப்பது நிலையற்ற ஒரு சூழ்நிலையாகும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.


தினமணி - ஒரே நேரத்தில் தேர்தல்?

படத்தின் காப்புரிமை Getty Images

டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோராம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநில சட்டமன்றத் தேர்தலுடன் மக்களவைக்கும் தேர்தல் நடந்த முடியுமா என்ற கேள்விக்கு அவ்வாறு ஒன்றாகத் தேர்தல் நடத்துவதில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறியுள்ளார்.

அவ்வாறு ஒன்றாகத் தேர்தல் நடத்தப்பட்டால் அதற்குத் தேவைப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் செப்டம்பர் இறுதிக்குள்ளும், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் நவம்பர் இறுதிக்குள்ளும் தயாராகிவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.


பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :