முல்லைப் பெரியாறு: பிபிசி தமிழ் வாயிலாக கோரிக்கை வைக்கும் கேரளவாசி

நிரம்பி நிற்கும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வெள்ளநீரை திறந்துவிடுமாறும் அண்டை மாநிலமான கேரளாவை காப்பாற்ற உதவிசெய்யவேண்டும் என்றும் தமிழக மக்கள் தங்களின் முதல்வரை கேட்கவேண்டும் என 48வயதான கேரளாவைச் சேர்ந்த கட்டிடத்தொழிலாளி சரசன் தமிழக மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Facebook

கடந்த இரண்டு வாரமாக கேராளா சந்தித்துவரும் வெள்ளப் பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான சரசன், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வேகமாக வரும் வெள்ளநீர் தங்கள் மாநிலத்தை ஒரு தீவு போல மாற்றிவிட்டது என்று வேதனைப்படுகிறார்.

Image caption சரசன்

''தமிழக முதல்வருக்கு சொல்லுங்கள்''

''எங்கள் முதல்வர் பினராயிவிஜயன் தமிழக முதல்வரிடம் உதவி கேட்டுள்ளார். முல்லைப்பெரியாறு அணையில் நீர் முழுகொள்ளளவை எட்டிவிட்டது. இரண்டு நாட்களாக அதிகமான வேகத்தில் தண்ணீர் எங்கள் ஊர்களுக்குள் வந்துள்ளது. வெள்ள நீரை முறைப்படுத்தி திறந்துவிடவேண்டும் என தமிழக முதல்வரிடம் எங்கள் முதல்வர் கேட்டுள்ளார். எங்கள் துன்பத்தைப் பார்க்கும் தமிழக மக்கள், உங்கள் முதல்வரிடம் சொல்லுங்கள்,'' என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் கவலையுடன் பேசினார் சரசன்.

முல்லைப்பெரியாறு அணையின் அனுமதிக்கப்பட்ட நீர் மட்டம் 142 அடி. தற்போது அந்த அணையின் நீர் மட்டம் அந்த அளவை எட்டியுள்ளது. ஆனால் தமிழகம் வெள்ளநீரை மெதுவாக வெளியேற்ற முடியாது என்றும் அணையின் நீர் மட்டத்தை கேராளா சொல்வது போல 139அடியில் வைத்திருக்க முடியாது என்று தெரிவித்துவிட்டது.

உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கின் அடிப்படையில் நீர் மட்டத்தை தமிழகம் 142ஆக வைத்துக்கொள்ளவது சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அபாய காலகட்டத்தில் தங்களுக்கு உதவவேண்டும் என கேராளா கோரிக்கை வைக்கிறது.

தமிழ்மக்கள் உதவ வேண்டிய நேரமிது

''குழந்தைகள், முதியவர்கள், எல்லோருமே நடுத்தெருவில் செல்வதற்கு இடம் இல்லாமல் இருக்கிறோம். எங்கள் ஊரில் உள்ள வெள்ள நிவாரண முகாம்களில் ஜனங்கள் அவதிப்படுகிறார்கள். நிற்பதற்கு கூட இடம் இல்லை,'' என்று வருத்ததோடு பேசுகிறார் சரசன்.

மழை,வெள்ளம் ஒவ்வோர் ஆண்டும் கேரளாவில் இருந்தாலும் இந்த ஆண்டு தனது மாநிலம் சந்தித்துள்ளது பேரிடர் என்கிறார்.

''கொச்சின், வயநாடு ஆகிய இடங்களில் வெள்ளம் சூழ்ந்து கடுமையான பதிப்புகளை இத்தனை ஆண்டுகளில் ஏற்படுத்தவில்லை. 1924ல் சேதம் ஏற்பட்டது என்கிறார்கள். ஆனால் இந்த முறை எங்கள் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு கிராமும், நகரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எல்லா மாவட்டங்களிலும் வெள்ளம். எங்களால் எங்கும் செல்ல முடியவில்லை. அரசியல் தலைவர்கள் தங்களுக்குள் கருத்து வேறுபாடு கொண்டிருக்கலாம். தமிழக மக்கள் எங்களுக்கு உதவவேண்டிய நேரமிது,'' என்று பிபிசிதமிழ் வாயிலாக தமிழக மக்களுக்கு கோரிக்கை வைக்கிறார் இந்த எளிய கட்டிடத்தொழிலாளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: