கனமழை: பாய்ந்தோடும் வெள்ளம்; தத்தளிக்கும் வால்பாறை

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள வால்பாறையில் நேற்று இரவு முழவதும் கன மழை பெய்தது, இதனால் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவரத்தில் உள்ள ஆழியாறு அணைக்கு நள்ளிரவில் வினாடிக்கு 29 ஆயிரம் கன அடி நீர் வந்தது.

அணையின் பாதுகாப்பு கருதி எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டு ஆழியாறு அணையில் இருந்து 11 மதகுகள் வழியாக விநாடிக்கு 29 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

பிறகு நீர்வரத்து குறைந்ததால் வெளியேறும் அளவு 20 ஆயிரம் கன அடியாகக் குறைப்பட்டு, காலை 10 மணி நிலவரப்படி 9 ஆயித்து 248 கன அடியாக தண்ணீர் வெளியேற்றபட்டு வருகிறது, ஆழியாறு அணையில் உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டதால் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. ஆற்றையொட்டி உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

விடிய விடிய பெய்த கனமழை காரணமாக பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் மலைச் சாலைகளில் பாறைகள் உருண்டு சாலையில் கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கபட்டது, பின்னர் வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் இருந்து பாறை மற்றும் மண் சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதே போல் மலைப்பகுதியில் கொட்டிய மழையால் குரங்கு அருவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது, ஆர்ப்பரித்து வரும் வெள்ளத்தில் கற்களும், மரங்களும் அடித்து வருவதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கோவை மற்றும் நீலகிரியில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்டம் மற்றும் வால்பாறையில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. வால்பாறை மானாம்பள்ளி எஸ்டேட் பகுதியில், வேளாங்கண்ணி என்ற பெண் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

மண் சரிவு காரணமாக, வால்பாறையில் அனைத்து எஸ்டேட்களுக்கு செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, வால்பாறை அரசுப் பேருந்து பணிமனையில் வெள்ளம் புகுந்து, டீசல் டேங்குகள் மூழ்கியுள்ளன. இதனால், பேருந்துகளை இயக்க முடியாமல் அனைத்துப் பேருந்துகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

பொள்ளாச்சி - வால்பாறையில் மண் சரிவு தற்காலிகமாக சரி செய்யப்பட்டுள்ளது. கனமழை காரணமாக, மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். குழுவுக்கு 10 பேர் வீதம் 35 குழுக்களும், ஜே.சி.பி மற்றும் பொக்லைன் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவசர உதவிக்கு, 1077 என்ற எண்ணுக்கு தகவல் கொடுக்கவும் என்று நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

வால்பாறையில், தனியார் காட்டேஜ்கள், மண்டபங்கள், பள்ளிகள் ஆகிய இடங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக, தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள சமூகக் கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் வருவாய்த் துறையினர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: