கேரள மழை, வெள்ளம்: 324 பேர் பலி, முகாம்களில் 2.23 லட்சம் பேர், பிரதமர் விரைந்தார்

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பில், தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது என்றும், 2.23 லட்சம் பேர் 1,500-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாநிலம் முழுதும் 1,568 நிவாரண முகாம்கள் உள்ளதாகவும் அவற்றில் 52,856 குடும்பங்களை சேர்ந்த சுமார் 2,23,000 பேர் தங்கியிருப்பதாகவும் முதல்வர் கூறினார்.

இறப்பு எண்ணிக்கை விளக்கம்

இறப்பு எண்ணிக்கை குறித்து கேரள மாநில கூடுதல் டிஜிபி (சிறப்புப் பிரிவு) வீரக்குமாரிடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது. ஆகஸ்ட் 8-ம் தேதி (வெள்ளச்சூழ்நிலை தொடங்கிய தேதி) முதல் இறந்தவர்கள் எண்ணிக்கை 171 என்றும், 324 என்பது ஜூன் 1ம் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து அது தொடர்பான சம்பவங்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5.15 அளவில் முதல்வர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கடந்த நூறு ஆண்டுகளில் மோசமான வெள்ளத்தை தற்போது கேரளம் சந்தித்து வருவதாகவும், 80 அணைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பத்தனம்திட்டா, எர்ணாகுளம், ஆலப்புழா மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும், அவற்றில் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவிப்பவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருவதாக முதல்வர் முன்னதாக செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மத்திய அரசு வழங்கிய ஹெலிகாப்டர்கள் மட்டுமல்லாது மாநில அரசின் அதிகாரிகளும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பினராயி விஜயன் கூறினார்.

எர்ணாகுளத்தில் ஐந்து ஹெலிகாப்டர்கள், சாலக்குடியில் மூன்று ஹெலிகாப்டர்கள், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய இடங்களில் தலா ஒரு ஹெலிகாப்டர் ஆகியன மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Chief Minister's Office, Kerala
Image caption பினராயி விஜயன்

தேசிய பேரிடர் மீட்புப் படையின் 39 குழுக்கள் மாநிலம் முழுதும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்தார்.

இந்திய விமானப் படையிடம் இருக்கும் 11 விமானங்கள் பிரச்சனை உள்ள இடங்களில் தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

முதலமைச்சர் அலுவலகத்துக்கு தங்களை மீட்க வேண்டும் என்று பல கோரிக்கைகள் வருகின்றன. அந்த கோரிக்கைகளில் நேரம், தேதி, இருப்பிடத்தின் அடையாளம், அருகே உள்ள குறிப்பிடத்தகுந்த கட்டடம் அல்லது இடத்தின் அடையாளம், மாவட்டம், மீட்கப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றையும் தொடர்பு எண்ணையும் தெரிவிக்குமாறு கேரள முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images

பிரதமர் மோதியுடன் முதல்வர் பினராயி விஜயன் தொலைபேசி வாயிலாக பேசியதாகவும், வெள்ள நிலவரம் குறித்து பிரதமர் கேட்டறிந்ததாகவும் முதலமைச்சர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

வெள்ள நிலவரம் குறித்து ஆய்வு செய்ய இன்று (வெள்ளிக்கிழமை) மாலை கேரளா செல்ல உள்ளதாக பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

காசர்கோடு மாவட்டத்தை தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த 13 மாவட்டங்களிலும் கனமழை பாதிப்பு இருக்கும் என்றும் வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.

இதனிடையே 2015இல் தமிழ்நாட்டில் இருந்த அதே கோபமும் கைவிடப்பட்ட நிலையும் தற்போது கேரளாவில் நிலவுவதாக நடிகர் சித்தார்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Twitter

தேசிய ஊடகங்கள் கேரள வெள்ளத்திற்கு கவனத்தை செலுத்துமாறு வலியுறுத்தியும் வேண்டியும் கேட்டுக்கொள்வதாக ட்விட்டரில் கூறியுள்ளார்.

கேரளம் சென்றார் மோதி

டெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பேயி இறுதிச் சடங்கில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோதி உடனடியாக விமானம் மூலம் கேரளா புறப்பட்டு கேரளா போய் சேர்ந்தார். நாளை சனிக்கிழமை காலை அவர் மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகளை சந்திப்பதோடு, வெள்ளம் பாதிப்புகளையும் பார்வையிடுவார் என்று தெரிகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :