கேரளா வெள்ளம்: இடைக்கால நிவாரண நிதியாக 500 கோடி அறிவித்தார் மோதி

கேரள வெள்ள நிவாரணத்திற்கு இடைக்கால நிதியாக 500 கோடி ரூபாய் அறிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோதி.

ஏற்கெனவே 100 கோடி ரூபாய் வெள்ள நிவாரணமாக அறிவிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக இந்த நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள முதல்வர், ஆளுநர் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்த நிதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கேரள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50, 000 ரூபாயும் அளிக்கப்படும் என்று மோதி அறிவித்துள்ளார்.

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளை உடனடியாக பழுதுபார்க்க தேசிய நெடுஞ்சாலைகள் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளார். மத்திய பொதுத்துறை நிறுவனங்களான என் டி பி சி மற்றும் பி ஜி சி ஐ எல் ஆகியவை மின் வழித்தடங்களில் உள்ள பழுதுகளை நீக்க மாநில அரசுக்கு சாத்தியப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளத்தில் குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு ப்ரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா- கிராமின் வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தருவதற்கு அவர்கள் பதிவு செய்திருந்த காத்திருப்பு பட்டியலுக்கு அப்பால், உடனடியாக முன்னுரிமை கொடுக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக காப்பீட்டு பணம் வழங்கவும், ஃபாசல் பீமா யோஜ்னா திட்டத்தின் கீழ் முதல்கட்ட பயிர்காப்பீட்டு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

ஏமாற்றம்

முதற்கட்ட நிதியாக 2000 கோடி ரூபாய் கேட்ட நிலையில் ஐநூறு கோடி மட்டும் அறிவிக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறியுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

பட மூலாதாரம், -

நேற்று இரவு பிரதமர் மோதி டெல்லியில் இருந்து கேரள தலைநகர் திருவனந்தபுரத்துக்கு விரைந்தார்.

இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவில் கடந்த நூறு வருடங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் இதுவே மிகவும் மோசமானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் பருவமழை துவங்கியது. ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் உயிரிழப்புகள் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது.

நேற்று மாநில பேரழிவு மேலாண்மை கட்டுப்பாட்டு அறை வெளியிட்ட தகவலின் படி, கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதியில் இருந்து நேற்று மாலை 6.30 மணி நிலவரப்படி (ஆகஸ்ட் 17) 194 பேர் உயிரிழந்ததாகவும், 36 பேர் காணாமல் போனதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலச்சரிவின் காரணமாகவே நிறைய பேர் உயிரிழந்ததாக கேரள அரசு கூறுகிறது. கேரளாவின் முக்கிய விமானநிலையமான கொச்சி விமான நிலையம் ஆகஸ்ட் 26-ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளா வெள்ள பாதிப்புகளுக்காக தெலங்கானா அரசு சார்பில் உடனடியாக 25 கோடி நிதி உதவி வழங்குவதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தங்களது அரசு சார்பில் 10 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான எர்ணாகுளத்தின் சட்டசபை உறுப்பினர் ஹிபி ஈடன் பிபிசியிடம் பேசினார்.

எங்களிடம் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை குறித்த துல்லியமான விவரங்கள் இல்லை ஆனால், எங்கள் தொகுதியில் இருக்கும் அனைவருமே பாதிக்கப்பட்டவர்கள்தான். ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் இருக்கிறார்கள். என்னுடைய தொகுதி இவ்வளவு மோசமான நிலையைச் சந்திப்பது இதுவே முதல்முறை . மக்கள் காணாமல் போன தங்களது குடும்பங்களையும் உறவினர்களையும் பற்றி என்னிடம் கேட்கும்போது நான் மிகவும் நிலைகுலைந்துவிடுகிறேன்.

நிவாரண முகாம்கள் அனைத்தும் தற்போது நிரம்பிவிட்டன. நாங்கள் எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் உணவையும் மருந்து பொருட்களையும் வழங்கிவருகிறோம். மீட்பு பணிக்கு படகுகளை பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

ராணுவ விமானங்களும் மக்களை காப்பாற்றி வருகின்றன. தற்போதைக்கு எர்ணாகுளத்தின் பெரும்பகுதி தீவு போல காட்சியளிக்கிறது. போக்குவரத்து மிகவும் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது'' என குறிப்பிட்டார்.

வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5.15 அளவில் முதல்வர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கடந்த நூறு ஆண்டுகளில் மோசமான வெள்ளத்தை தற்போது கேரளம் சந்தித்து வருவதாகவும், 80 அணைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Chief Minister's Office, Kerala

படக்குறிப்பு,

பினராயி விஜயன்

பத்தனம்திட்டா, எர்ணாகுளம், ஆலப்புழா மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும், அவற்றில் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவிப்பவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருவதாக முதல்வர் முன்னதாக செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மத்திய அரசு வழங்கிய ஹெலிகாப்டர்கள் மட்டுமல்லாது மாநில அரசின் அதிகாரிகளும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பினராயி விஜயன் கூறினார்.

பட மூலாதாரம், AFP/Getty Images

எர்ணாகுளத்தில் ஐந்து ஹெலிகாப்டர்கள், சாலக்குடியில் மூன்று ஹெலிகாப்டர்கள், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய இடங்களில் தலா ஒரு ஹெலிகாப்டர் ஆகியன மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் 39 குழுக்கள் மாநிலம் முழுதும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்தார்.

இந்திய விமானப் படையிடம் இருக்கும் 11 விமானங்கள் பிரச்சனை உள்ள இடங்களில் தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

முதலமைச்சர் அலுவலகத்துக்கு தங்களை மீட்க வேண்டும் என்று பல கோரிக்கைகள் வருகின்றன. அந்த கோரிக்கைகளில் நேரம், தேதி, இருப்பிடத்தின் அடையாளம், அருகே உள்ள குறிப்பிடத்தகுந்த கட்டடம் அல்லது இடத்தின் அடையாளம், மாவட்டம், மீட்கப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றையும் தொடர்பு எண்ணையும் தெரிவிக்குமாறு கேரள முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :