கேரள வெள்ளம்: களநிலவரம் என்ன? - பிபிசி செய்தியாளரின் நேரடி அனுபவம் #groundreport

  • பிரமிளா கிருஷ்ணன்
  • பிபிசி தமிழ்
மீட்புப் பணிகள்

பட மூலாதாரம், AFP/Getty Images

"மேடம்... எனது கணவருக்கு அண்மையில்தான் கல்லீரல் அறுவை மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. நீங்கள் ஊடகவியலாளர்தானே. நாங்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல உங்களுக்கு உதவ முடியுமா?" என்று உடைந்த குரலில் ஒரு பெண் கேட்டார்.

இக்கட்டான தருணங்களில் ஊடகவியலாளர்கள் மீட்பாளர்களாக கருதப்படுகிறார்கள்.

பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தங்கி செய்தி சேகரித்து கொண்டிருக்கிறேன். நான் என் பயணத்தை தொடங்கியபோது, இந்த அளவுக்கு சேதம் எல்லாம் இல்லை. ஒருவர் வெள்ளத்தில் சிக்கி இருக்கிறார் என்ற ஒற்றை தகவலுடன்தான் நான் கேரளா நோக்கிய என் பயணத்தை தொடங்கினேன்.

ஆனால், அதன்பின் நிலைமை முன்பு நான் எப்போதும் சந்திக்காத அளவுக்கு பாதிக்கப்பட தொடங்கியது.

என்னால் என்ன செய்துவிட முடியும்? அறுபது வயது மதிக்கத்தக்க அந்த அம்மா என்னிடம் உதவி கேட்டபோது, என்னால் தரமுடிந்தது எல்லாம் ஆறுதலான ஓர் அணைப்பு மட்டும்தான்.

பட மூலாதாரம், MANJUNATH KIRAN/AFP/Getty Images

படக்குறிப்பு,

நிவாரண உதவிப் பொருட்கள்

அவரது கண்ணீரை துடைத்தப்படி, "நான் மாவட்ட ஆட்சியரிடம் சொல்கிறேன் அம்மா. கவலைப்படாதீர்கள். நாம் அனைவரும் நிச்சயம் பாதுகாப்பாக மீட்கப்படுவோம்" என்றேன்.

ஆனால், உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரான ஹிபி ஈடன் இப்போது யாரையும் மீட்பது சாத்தியமில்லை. அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்த ஏழு மாடி விடுதி, நிவாரண முகாமுக்கு செல்வதைவிட பாதுகாப்பானது என்றார்.

"உங்கள் ஹோட்டல் இப்போது தீவாக மாறிவிட்டது. உங்களை உடனடியாக இப்போது மீட்க முடியாது. ஆனால், உங்களிடம் உணவை சேர்க்க என்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்வேன்" என்கிறார் எர்ணாகுளம் தொகுதியை சேர்ந்த இளம் சட்டமன்ற உறுப்பினர் ஹிபி ஈடன்

கேரளா: மெட்ரோ ரயில் நிலையத்தில் மீட்பு பணி - தத்ரூப காட்சிகள்

காணொளிக் குறிப்பு,

கேரளா: மெட்ரோ ரயில் நிலையத்தில் மீட்பு பணிகளின் தத்ரூப காட்சிகள்

நான் இப்போது தங்கி இருக்கும் ஓட்டலில் குடிநீர் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், இதில் முரண் என்னவென்றால் தரைபகுதி முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இங்கு இருப்பவர்கள் நம்பிக்கை இழக்காமல் இருக்கிறார்கள். "குடிநீர் குறைவாக இருக்கிறது. ஓட்டலுக்கு அருகே உள்ள நிவாரண முகாமும் மோசமான குடிநீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருகிறது. எங்களுக்கு வேறு வாய்ப்புகள் ஏதும் இல்லை" என்கிறார் எங்கள் விடுதியின் மேலாளர்.

காத்திருப்பு

சூரியன் ஒளிர்வதற்காகவும், மழை கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டுமென்றும் அனைவரும் இங்கே காத்திருக்கிறோம்.

பட மூலாதாரம், AFP/Getty Images

கடந்த மூன்று தினங்களாக மக்கள் ஹெலிகாப்டர்கள் மூலமாக மீட்கப்படும் கதைகளை கேட்டு வருகிறேன். லாரிகள் மக்களை சுமந்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு கூட்டி செல்கின்றன. தீயணைப்புத் துறையும், உள்ளூர் மக்களும் வெள்ளத்தில் சிக்கியவர்களை படகுகளில் மீட்கும் விஷயங்களை கேள்விப்படுகிறேன்.

ஆயிரக்கணக்கான மக்கள் மீட்கப்படுவதை நான் தங்கி இருக்கும் விடுதியிலிருந்து பார்க்கமுடிகிறது. மக்களின் அழுகுரல்களையும் கேட்க முடிகிறது. இப்போது என்னால் செய்ய முடிந்தது எல்லாம் இவை மட்டும்தான்.

இது கொச்சி விமான நிலையமா? பெருக்கெடுக்கும் ஆறா? பதறவைக்கும் காட்சி

காணொளிக் குறிப்பு,

கொச்சி விமான நிலையம்

முதல் நாள் நான் கேரளா வந்திருந்தபோது, இடுக்கியில் மலைப்பகுதியில் பெருமழையால் பாதிக்கப்பட்டவர்களிடம் பேசினேன். நிலச்சரிவல் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அங்கு ஒரு தேவாலயத்தில் இயங்கிய ஒரு நிவாரண முகாமை பார்வையிட்டேன்.

அங்கு நான் பார்த்த விஷயங்களும், கேட்ட கதைகளும் இன்னும் என் நினைவில் இருக்கிறது. அவர்களை சாந்தப்படுத்த என்னிடம் எந்த வார்த்தைகளும் இல்லை.

பட மூலாதாரம், AFP/Getty Images

என்னிடம் பேசிய சாலி, "நான் இடுக்கியில் பிறந்து வளர்ந்தவள். ஒவ்வோர் ஆண்டும் மழை வரும், சில நிலச்சரிவுகளும் ஏற்படும். ஆனால், இப்படியான பெருமழையை நான் எப்போதும் கண்டதில்லை. இந்த பெருமழையில் என் பெற்றோர் வீட்டில் சிக்கிக் கொண்டார்கள். காயமடைந்து மரணித்தார்கள். அவர்களது இறுதி சடங்கை செய்ய அவர்களது உடல் கூட கிடைக்கவில்லை" என்று அவர் கூறி முடித்தபோது வெடித்து அழுதார்.

இரண்டு நாட்கள் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்ட பிறகு, கொச்சி சென்றேன். இடுக்கியில் இணைய வசதி இல்லாததும் அதற்கு ஒரு காரணம். என்னுடைய அலுவலகத்திற்கு செய்தியும், புகைப்படமும் அனுப்ப வேண்டும் என்பதே அதற்கு முக்கிய காரணம்.

மூன்றாவது நாள் காலை நான் செய்தித்தாளை பார்த்தபோது எனக்குள் ஒரு பதற்றம் ஏற்பட்டது. அதற்கு காரணம், நான் இடுக்கியில் தங்கி இருந்த இடம் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டிருந்தது. பின், கொச்சி விமானநிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதை அறிந்தேன்.

நான் முன்பே திட்டமிட்டிருந்தபடி, கேரளாவில் உள்ள சக பத்திரிகையாளர்களை, சூழலியாளர்களை சந்திக்க திட்டமிட்டேன். கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகள் குறித்து அறிவதுதான் என் நோக்கம். நான் பயணித்த கார், சிக்கல் இல்லாமல் வெள்ளத்தில் பயணிக்க முடிந்ததால், நான் என் திட்டத்தின்படியே செயல்பட தொடங்கினேன்.

பட மூலாதாரம், AFP/Getty Images

அந்த பயணத்தின்போது, ஏதோ தவறாக நடக்கப் போகிறது என்பதை எங்களால் உணர முடிந்தது. மெட்ரோவில் தண்ணீர் புகுந்துவிட்டது என்பதை அப்போது அறிந்தேன். ஆனால், என்னால் இந்த தகவலை அலுவலகத்துடன் பகிர்ந்துக் கொள்ள முடிந்தது. கடந்த 90 ஆண்டுகளில் கொச்சியில் ஏற்பட்ட மோசமான வெள்ளம் இது.

"பணக்காரர்கள் தங்கள் வீடுகளை விட்டு செல்ல தயாராக இல்லை. அவர்களுக்கு அவர்கள் சொத்து குறித்த கவலை இருந்தது. எங்களால் அவர்களை சமாதானப்படுத்த முடியவில்லை" என்று கம்பெனிபாடியில் மீட்புப் பணியில் இருந்த ஓர் அதிகாரி எங்களிடம் தெரிவித்தார்.

நான் விடுதிக்கு திரும்பியபோது, என்னால் ஹோட்டலைவிட்டு செல்ல முடியாது என்று விடுதி ஊழியர்கள் தெரிவித்தார்கள். அதற்கு அவர்கள் கூறிய காரணம் ஹோட்டலில் வெள்ள நீர் புகுந்துவிட்டது என்பதுதான்.

இங்குதான் நான் மனிதாபிமானமிக்க ஓர் அரசியல்வாதியை சந்தித்தேன். அவர் நெடும்பசேரி ஊராட்சி தலைவர் மினி எல்தோரா. அவர் மிக அக்கறையாக அனைவரையும் சந்தித்து அவர்களது தேவைகளை விசாரித்தார்.

"பல மருத்துவர்கள் இங்கு இருக்கிறார்கள். ஆனால், அவர்களும் தங்களது உடமைகளை இழந்து இருக்கிறார்கள். நான் என் மக்களுக்கு நல்ல உணவு அளிக்க முயற்சிக்கிறேன். இந்த பஞ்சாயத்தின் அனைத்து மக்களும் மீட்கப்பட்டுவிட்டார்களா என்பது எனக்கு தெரியவில்லை. நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்" என்கிறார் மினி கண்ணீருடன்.

''தன்னுடைய பஞ்சாயத்தின் கீழ் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் தன்னால் உதவமுடியவில்லை என அவர் வருத்தப்பட்டார். பாதிக்கப்பட்டவர்களை மீட்கும்போது பல குடும்பங்கள் பிரிந்துள்ளன.

மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னால் உதவமுடியவில்லை'' என்கிறார் அவர்.

வெள்ளத்தால் 300 பேருக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். கேரளாவில் லட்சக்கணக்கான மக்கள் 'காலநிலை' காரணமாக அகதிகளாகியுள்ளனர்.

எங்களுடைய காருக்கு எரிபொருளை நிரப்ப பெட்ரோல் விற்பனை நிலையங்களை கண்டறிவதில் பெரும் சிரமம் இருந்தது. இதற்காக வெள்ளத்தில் இரண்டு மணி நேரமாக காரில் இஞ்ச் கணக்கில் மெதுவாக நகர்ந்து சென்றோம்.

ஆம். அந்த இறுதி நாளும் வந்தது. ஐந்தாவது நாள், எங்களால் ஹோட்டலில் இருந்து எங்கும் நகர முடியவில்லை. வெள்ள நீர் தரைத்தளத்தை எட்டியது. மின்சாரம் நிறுத்தப்பட்டது. தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

என்னால் ஹோட்டலின் மாடிக்குச் சென்று மீட்பு பணிகளை பார்க்க மட்டுமே முடிந்தது. ஜெனெரேட்டர்கள் மூலம் காலை மற்றும் மாலை வேளைகளில் நான் தங்கியிருந்த ஹோட்டலில் அரை மணி நேரம் மின்சாரம் தரப்பட்டது. அதை வைத்து எனது திறன்பேசிக்கு சார்ஜ் ஏற்றிக்கொண்டேன்.

ஹோட்டல் அதிகாரிகள் எங்களுக்கு சிறிது உணவு ஏற்பாடு செய்வதற்காக வெளியே சென்றார்கள் மேலும் அடுத்தநாள் எங்களுக்கு உணவளிப்பதாகவும் உறுதியளித்தார்கள்.

மக்களை ஏற்றிக்கொண்டு நிவாரண முகாம்களுக்குச் சென்ற லாரி ஓட்டுநர்களை, மக்கள் உற்சாகமூட்டியதையும் ஊக்கப்படுத்தியதையும் நான் கேட்டேன். கடும் மழையில் சாலையில் சிக்கியிருந்த மக்கள் கொடுத்த சைகைகளையும் சத்தங்களையும் கேட்டு தங்களது கண்களை மட்டுமே நம்பி ஓட்டுநர்கள் வண்டி ஓட்ட முடியாது.

வெள்ள நீரில் சிக்கிக்கொள்ளாமல் தப்பிக்க சில லாரிகள் பின்னோக்கி சென்றன. கொச்சின் நெடுஞ்சாலையில் மக்களை மீட்பதற்காக பெரிய படகுகள் வந்திருந்தன.

பட மூலாதாரம், AFP/Getty Images

வெள்ளத்தில் சிக்கி இது ஆறாவது நாள். தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு கொண்டிருக்கிறோம். என் அறையின் ஜன்னல் கதவு வரை மூழ்கிவிட்டது. குடி தண்ணீருக்காக நான் காத்திருக்கும்போது நான் இதை எழுதுகிறேன்.

எனக்கு பழைய ஆங்கில சொல்லாடல்தான் நினைவுக்கு வருகிறது. "எங்கும் தண்ணீர் நிறைந்து இருக்கிறது. ஆனால் அருந்துவதற்கு ஒரு சொட்டு நீர்கூட இல்லை."

ஆனால், நான் மகிழ்ச்சியாக உள்ளேன். என் செய்தியின் மூலம் இந்த உலகத்துடன் தொடர்புக் கொள்ள முடிகிறது. கேரள மக்களின் வலிகளை வெளி உலகிற்கு சொல்ல முடிகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :