கேரளா வெள்ளம்: மூலதாரா அணையின் தடுப்புச்சுவர் உடைப்பு

பொள்ளாச்சி ஆழியாறு அணையில் நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், கேரள எல்லையிலுள்ள மூலதாராஅணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது,

கேரள எல்லையிலுள்ள பொள்ளாச்சி ஆழியார் அணையில் உடைப்பு

மலைகள் சூழ்ந்த தமிழக கேரள எல்லை பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக ஆழியாறு அணைக்கு வரும் நீர் அதிக அளவில் உள்ளது.

இந்நிலையில் ஆழியாறு அணையில் இருந்து நேற்று இரவு 15 ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கேரள மாநிலம் பாலக்காடு அருகே மூலதாரா அணையின் வலது பகுதியில் உடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அணையிலிருந்து வெளியேறிய நீரால் சித்தூர்புழா, பரதப்புழா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதில் அணைக்கு அருகில் உள்ள வீடுகள், சில சிறு பாலங்கள், விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. அணையில் பகல் நேரத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

மூலதாரா அணையின் வலது பக்கக் கரையில் உடைப்பு ஏற்படுவது இது மூன்றாவது முறையாகும்.

தமிழக கேரள மாநிலங்களுக்கு இடையிலான பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தின் கீழ் இந்த மூலதாரா அணைக்கட்டு வருகிறது. இதற்கு முன்பு 1960 மற்றும் 1992 ஆகிய ஆண்டுகளில் இந்த அணையில் உடைப்பு ஏற்பட்டது.

மூலதாரா அணையின் தடுப்புச்சுவர் உடைப்பு

மூலதாரா அணை பழுதடைந்த காரணத்தினால் 40 கோடி ரூபாய் செலவில் கேரள அரசால் தற்போது புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது அணையின் தடுப்பு சுவர் இடிந்ததால் மக்கள் கவலைக்கு உள்ளாகியுள்ளனர் . மேலும் அணையின் ஷட்டர்கள் முழுவதும் பழுதடைந்து காணப்படுகிறது.

உபரி நீர் அதிக அளவில் தொடர்ந்து திறந்து விடப்படும் நிலையில், அழுத்தம் தாங்காமல் ஷட்டர்கள் உடைய வாய்ப்புள்ளதால் முறையான உடனடி நடவடிக்கை அவசியம் என்றும் அவசரமாக செயல்பட வேண்டுமெனவும் இப்பகுதியில் உள்ள கோபாலபுரத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் தெரிவித்தனர்.

மேலும், மூலதாரா அணை அதிகப்படியான நீர்வரத்தை தாங்கிகொள்ளும் நிலையில் இல்லை என்றும், இவ்வணையை முறையாக பாரமரிக்க வேண்டியது அவசியம். இவ்வாறு முறையாக பராமரிக்கப்பட்டு வந்தால், பெருவெள்ளம் ஏற்படும் காலங்களில் வரும் தண்ணீர் சேமிக்கப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்த இயலும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், கட்டாற்று வெள்ளத்தால் வடது கரை இடது கரை வாய்க்காலை ஒட்டியுள்ள தமிழக மற்றும் கேரளா விவசாய நிலங்கள் கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், பாலக்காடு மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், வெள்ளபெருக்கு நீரினால் சித்தூர் தாவளம் உள்ளிட்ட பகுதிகள் பாதிப்படைய வாய்ப்புள்ளதால் உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இத்தொடர் மழையின் பாதிப்பின் மற்றொரு பகுதியாக பொள்ளாச்சியின் ஆழியாறு - வால்பாறை சாலையில் விரிசல் ஏற்பட்டு உள்ளதால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் தமிழக - கேரள எல்லை பகுதியிலுள்ள மற்றுமொரு பகுதியான வால்பாறையில் பெய்து வரும் கனமழையால் ஆழியாறு - வால்பாறை மலைப் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும், வால்பாறை எஸ்டேட் பகுதிகளிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர் மண் சரிவு காரணமாக நேற்று மதியத்திற்கு மேல் போக்குவரத்துக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில், இன்று காலை வால்பாறையை சேர்ந்த மக்கள் தங்கள் ஊருக்கு செல்ல வந்தபோது பாதுகாப்பு கருதி, வாகனங்கள் மேலே செல்ல வனத்துறை அனுமதிக்கவில்லை.

9வது கொண்டை ஊசி வளைவில் மிக பெரிய அளவில். சாலையில் விரிசல் உள்ளதால் மக்கள் பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்தப்பட்டனர். மேலும் அங்கு பாதுகாப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :