கேரள வெள்ளம்: மழை குறைந்தது, மீட்பு பணிகள் தீவிரம்

பருவமழை பெய்வது குறைந்துள்ளதால், இந்தியாவில் வெள்ளப்பெருக்கால் பெரும் பாதிப்புக்குள்ளான கேரளாவில் மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை NDRF OFFICIALS

இன்னும் சில பகுதிகளில் வெள்ளம் காணப்பட்டாலும், இந்திய வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கையை விலக்கியுள்ளது,

வீடுகளின் கூரைகளில் தங்கியிருக்கும் மக்களை இந்திய விமானப்படை ஹெலிகாப்படர் மூலம் தூக்கி மீட்டு வருகின்றன. சென்றடைய முடியாத இடங்களில் உணவுப் பொருட்களை வானில் இருந்து போட்டு வருகின்றனர்.

350க்கு மேலானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோரை இன்னும் சென்றடைய முடியாத நிலை காணப்படுகிறது.

செங்கனூரில் 5 ஆயிரம் பேர் சிக்கியுள்ளதால் அதிக மீட்புதவி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்குள்ள நிலைமையை தொலைக்காட்சியில் விவரித்த உள்ளூர் அரசியல்வாதி சாஜி செரியன் மனம் உடைந்து அழுதார்.

இந்த மீட்புதவி பணிகளுக்கு தங்களின் படகுகளை வழங்கி மீனவர்கள் உதவி வருவதாக தற்போது கேரளாவிலுள்ள பிபிசியின் யோகிதா லிமாயே தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, கேரளாவில் பெரு வெள்ளம் காரணமாக நேற்று ஒரே நாளில் மட்டும் 33 பேர் உயிரிழந்ததாக கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கொச்சியில் வெள்ளம் நிறைந்த பகுதி ஒன்றில் விமானம் மூலம் மீட்கப்படும் சிறுவர் .

கடந்த 10 நாட்களுக்கும் மேல் கொச்சியில் மிகக்கடுமையாக இருந்த மழைப்பொழிவு இன்று குறைந்துள்ளது.

இடுக்கி, திருச்சூர், கண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் காலையில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த ஒரு வாரத்தை ஒப்பிடும்போது தற்போது போக்குவரத்து நிலைமை சற்றே மேம்பட்ட நிலையில் இருப்பதாக களத்தில் இருந்து பிபிசி செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை CHIEF MINISTER'S OFFICE, KERALA
Image caption பினராயி விஜயன்

கேரளா அரசு கடும் வெள்ள பாதிப்பு அடைந்ததை அடுத்து அம்மாநிலம் முழுவதும் வைஃபை இணைப்பை இலவசமாக வழங்கிவருகிறது. மீட்புபணி மற்றும் உறவினர்களுக்கு தங்களது இருப்பை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட பல காரணங்களுக்காக தற்காலிகமாக இந்த வசதி செய்துதரப்பட்டுள்ளது.

கேரளா முழுவதும் சுங்க கட்டண சாவடியில் இரண்டு நாட்களுக்கு மக்களிடம் எவ்வித கட்டணமும் வாங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து வெள்ள நிவாரண நிதி குவிந்துவருகிறது. தெலங்கானா மாநில முதல்வர் 25 கோடி நிதியை உடனடியாக கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார். தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரண பொருட்கள் கேரளாவுக்கு வந்தவண்ணம் உள்ளது.

எர்ணாகுளம் பகுதி இதுவரை கடும் வெள்ளத்தை சந்தித்ததில்லை என்பதால் வெள்ளம் வந்தால் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதியில் கிட்டத்தட்ட அனைவருமே வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை NDRF Officials
Image caption படகு வழியாக ஒரு குடும்பத்தை பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்லும் மீட்பு படை வீரர்கள்

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சாலக்குடி மற்றும் கொச்சிக்கு இடையில் உள்ள அங்கமாலி நகராட்சியில் கிட்டத்தட்ட முழு இயல்பு நிலை திரும்பியுள்ளது. மின்சாரம், குடிதண்ணீர் உள்ளிட்டவை கிடைக்கின்றன.

கேரளாவின் மற்ற பகுதிகளில் இன்னமும் குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

கேரளாவுக்கு வெள்ள நிவாரண பொருட்களை பல்வேறு மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் எடுத்துச்செல்ல இலவச போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

புனே மற்றும் ரட்லம் பகுதியில் இருந்து 15 லட்சம் லிட்டர் தண்ணீர் ரயில் மூலம் கேரளாவுக்கு வழங்கப்பட்டிருப்பதாக பியூஷ் கோயல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தானும் தனது மனைவியும் கேரள வெள்ள நிவாரண நிதி வழங்க முடிவு செய்துள்ளதகவும், எதாவதொரு வகையில் உங்களால் முடியுமென்றால் கேரளாவுக்கு உதவ செய்யுங்கள் என்றும் ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளார்.

'' கேரளாவில் வெள்ளத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு கனடா தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறது'' என ட்வீட் செய்துள்ளார் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

''கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது பிரார்த்தனையை உரித்தாக்குகிறேன். நூறு பேருக்கும் மேல் பலியாகியுள்ளதும், இரண்டு லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிப்பதும் கோரமான நிலை'' என தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

''நேற்று மட்டும் இரண்டு லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீனவர்களுக்கு நன்றி. அவர்கள் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேரை மீட்டதாக செய்திகள் வந்துள்ளன. போற்றப்படாத நாயகர்கள் - மீனவர்கள்'' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :