கேரளா: ‘அணையும் ஆபத்தும்’ - மனித தவறால்தான் பெருவெள்ளம் ஏற்பட்டதா?

கேரளாவில் பேரழிவு வெள்ளம் ஏற்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, அந்த மாநிலம் தெனிந்திய மாநிலங்களிலேயே நீர் மேலாண்மையில் மோசமாக செயல்படுவதாக இந்திய அரசாங்க அறிக்கை ஒன்று எச்சரித்திருந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

இமயமலையை ஒட்டி இல்லாத மாநிலங்களில், கேரள மாநிலம், நீர் மேலாண்மையில் 12 வது இடத்தில் இருந்தது. அந்த மாநிலம் பெற்ற மதிப்பெண் 42.

நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திரம் முறையே 79, 69, 68 பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்து இருந்தது.

அரசு அறிக்கை வந்த ஒரு மாதத்தில், அந்த அறிக்கை உண்மைதான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.மோசமான பெருவெள்ளத்தில் சிக்கி தவிக்கிறது அந்த மாநிலம்.

அணைகளில் நீர்

கேரள மாநிலத்தில் உள்ள 30 அணைகளில் உள்ள நீரை, அதிகாரிகள் முன்பே சீராக திறந்துவிட்டிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள்.

மழை வெள்ளம் உச்சத்தை தொட்டவுடன் , அந்த மாநிலத்தில் உள்ள 80 அணைகளில் நீரானது திறந்துவிடப்பட்டிருக்கிறது. அந்த நீர் கேரளாவில் உள்ள 41 ஆறுகளில் சென்று இருக்கிறது.

தென் கிழக்கு ஆசியா அணைகள், ஆறுகள் மற்றும் மக்கள் குழுமத்தை சேர்ந்த நீர் மேலாண்மை நிபுணர் ஹிமான்ஷு தாகூர், "மழை வெள்ளம் அதிகரித்ததுமே கேரளாவில் உள்ள இடுக்கி, இடமலயார் அணைகளிலிருந்து நீரை திறந்துவிட்டவுடன் நிலைமை மோசமாகி இருப்பது தெரிகிறது" என்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அணைகளில் நீர் அதிகரிக்கும் வரை காத்திருக்காமல், முன்பே நீரை திறந்துவிட்டிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டு இருக்காது. நிலைமை மோசமானவுடன் அவர்களுக்கு நீரை திறந்துவிடுவதை தவிர வேறு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இந்த மோசமான நிலைமைதான் பேரழிவுக்கு இட்டுச்சென்றுள்ளது " என்கிறார் அவர்.

"அவர்களுக்கு முன்பே நீரை திறந்துவிடுவதற்கு போதுமான நேரம் இருந்தது. அவர்கள் அப்போதே நீரை திறந்துவிட்டிருக்கலாம்" என்கிறார் ஹிமான்ஷு.

வெள்ள பாதிப்புள்ள மாநிலம்

இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய ஒன்றிய உள்துறை அமைச்சகம் மெற்கொண்ட மதிப்பீடு ஒன்றில், வெள்ள பாதிப்புள்ள பத்து மாநிலங்களில் கேரளமும் ஒன்று.

தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கைக்கு ஏற்றவாறு தென்னிந்திய மாநிலங்கள் பேரிடர் தடுப்பு கொள்கைகளை எடுக்கவில்லை என்று கூறப்படுப்படுகிறது.

மாநில அரசு அணைகளை திறம்பட மேலாண்மை செய்யவில்லை, பேரிடர் எதிர்ப்பிலும் சிறப்பாக செயல்படவில்லை என்று மாநில அரசுகளை குற்றஞ்சாட்டினாலும், இந்த விஷயத்தில் மத்திய அரசிடமிருந்தும் நல்ல செய்தி ஏதும் வரவில்லை என்பதுதான் நிஜம்.

மத்திய நீர் வாரியம் கேரளாவிற்கு வெள்ள எச்சரிக்கையை முன்பே விடுவிக்கவில்லை என்கிறார்கள் நிபுணர்கள். இதனை அந்த முகமைதான் செய்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.

படத்தின் காப்புரிமை NDRF OFFICIALS

வெள்ளத்தை முன்பே கணித்ததிலும், அது தொடர்பான நடவடிக்கை எடுத்ததிலும் மத்திய நீர் ஆணையம் முன்பே எடுத்த நடவடிக்கை என்ன என்ற கேள்வி எழுகிறது என்கிறார் ஹிமான்ஷு.

"வெள்ள கணிப்பு குறித்த எந்த தளமும் கேரளாவில் மத்திய நீர் ஆணையத்திடம் இல்லை என்பதை அறிந்தபோது அதிர்ச்சி அடைந்தோம். வெள்ள கண்காணிப்பு தளம் மட்டுமே ஆணையத்திடம் உள்ளது. இடுக்கி, இடமலையார் அணைகளை மத்திய நீர் ஆணையம் தன் கண்காணிப்பிற்குள் கொண்டுவர வேண்டும்" என்கிறார் அவர்.

இந்த பருவமழை காலகட்டத்தில் வழக்கமாக பெய்யும் மழையை விட குறைந்தகாலத்தில் 37 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது.

குறைந்த கால இடைவெளியில் பெய்த இந்த பெருமழைதான் நிலச்சரிவு ஏற்படுத்தி இருக்கிறது. பலர் உயிரிழக்கவும் காரணமாகியிருக்கிறது. சூழலியலாளர்கள் காடழிப்பும் இந்த பேரழிவுக்கு காரணம் என்கிறார்கள்.

காடுகள் அழிக்கப்பட்ட பிற மாநிலங்களிலும் பெருமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது.

நகரமயமாக்கல்

நகரமயமாக்கல் விளைவுகளை சிந்திக்காமல் நீர்நிலைகள், ஏரிகள் மற்றும் சதுப்பு நிலங்களிலும் ஏற்படுத்தப்படும் உள்கட்டமைப்புகள் இது போன்ற பேரழிவுக்கு காரணமாகிறது. 2015 ஆம் ஆண்டு சென்னையில் இதுதான் ஏற்பட்டது.

கேரளாவில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள இந்த பெருவெள்ளம், பேரழிவு குறித்து மற்றொரு பார்வையை வழங்குகிறது. அணைகளால் ஏற்படும் ஆபத்துதான் அது.

அணைகளை முறையாக மேலாண்மை செய்யவில்லை என்றால், பருவநிலை மாற்றம் குறித்த ஆய்வாளர்கள் கணிப்பது போல பெருமழை அடிக்கடி பெய்தால், இனி இதுபோன்ற பேரழிவானது நூற்றாண்டுக்கு ஒரு முறை ஏற்படும் பேரழிவாக இருக்காது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :