‘ஹாங்காங்கில் ஆவின்’ - கடல் கடந்து செல்லும் தமிழக பால்

  • 20 ஆகஸ்ட் 2018

இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.

இந்து தமிழ்: 'ஹாங்காங்கில் ஆவின்'

படத்தின் காப்புரிமை AFP

ஹாங்காங்கில் ஆவின் பால் பொருட்கள் விற்பனையை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நேற்று தொடங்கி வைத்தார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

ஹாங்காங்கில் முதல்கட்டமாக 15 நாட்களுக்கு ஒருமுறை 18 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு கன்டெய்னர்களில் டெட்ரா பேக்கிங் செய்யப்பட்ட ஆவின் பால் விற்பனை செய்யப்படும். ஹாங்காங் முழுவதும் சப்-டீலர்கள் நியமிக்கப்பட்ட பிறகு ஏற்றுமதி அதிகரிக்கும்.

ஹாங்காங்கைத் தொடர்ந்து கத்தார், செளதி அரேபியா, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் ஆவின் பால் பொருட்கள் விற்பனையைத் தொடங்கவுள்ளோம் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'தனது சேமிப்பை வழங்கிய இரண்டாம் வகுப்பு மாணவி'

படத்தின் காப்புரிமை facebook.com/arun.rathinam.5

மிதிவண்டி வாங்க வேண்டும் என்ற தனது கனவை தியாகம் செய்து கேரள வெள்ள நிவாரணத்திற்காக தனது சேமிப்பை வழங்கி இருக்கிறார் விழுப்புரத்தை சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் எட்டு வயது மாணவி. இந்த செய்தி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பிரதானமாக இடம்பிடித்துள்ளது. அந்த மாணவியின் பெயர் அனுப்ரியா, மிதிவண்டி வாங்குவதற்காக தனது உண்டியலில் 8,846 ரூபாய் சேமித்து வைத்திருக்கிறார். அதனுடன் 154 ரூபாய் சேர்த்து ஒன்பதாயிரம் ரூபாயாக வெள்ள நிவாரணத்திற்கு அனிப்பி இருக்கிறார் என்று விவரிக்கிறது அந்த நாளிதழ் செய்தி.

தினமணி: 'கொள்ளிடம் ஆற்றின் தடுப்புச் சுவரில் உடைப்பு'

நாகை மாவட்டம், சீர்காழி அருகே அளக்குடியில் கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் தடுப்புச் சுவரில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட உடைப்பு உடனடியாக சரி செய்யப்பட்டதால், 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ள அபாயத்திலிருந்து தப்பின என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

"கர்நாடகத்தில் பெய்துவரும் கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி, திறந்துவிடப்படும் உபரி நீர், மேட்டூர் அணைக்கு வந்து, அங்கிருந்து காவிரியில் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர், திருச்சி முக்கொம்பிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 2. 5 லட்சம் கன அடியாக திறந்து விடப்படுகிறது. இதனால், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் இருகரைகளையும் தொட்டப்படி பெருக்கெடுத்து ஓடுகிறது" என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

"இந்நிலையில், சீர்காழி அருகே உள்ள அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் தண்ணீர் திரும்பும் இடத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கான்கிரீட் தடுப்புச் சுவரின் ஒரு பகுதி ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்தது. இதுகுறித்து, தகவலறிந்த பொதுப் பணித் துறை அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் நிகழ்விடத்துக்கு விரைந்துவந்து உடைப்பை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். 5 லாரிகள் மூலம் மணல் மற்றும் மண் எடுத்து வரப்பட்டு பொக்லைன் இயந்திரம் மூலம் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் கொட்டப்பட்டது. மேலும், மணல் மூட்டைகளை கொண்டும் அடைக்கப்பட்டது. அப்போது, திடீரென கான்கிரீட் சுவரில் மேலும் 10 மீட்டர் நீளத்துக்கு உடைப்பு ஏற்பட்டது.கருங்கல் பாறைகள் கொண்டுவரப்பட்டு, பொக்லைன் இயந்திரம் மூலம் உடைப்பை அடைக்கும் பணி நடைபெற்றது." என்று மேலும் விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

படத்தின் காப்புரிமை இந்து தமிழ்

தினத்தந்தி: '1 லட்சத்து 6 ஆயிரம் இடங்கள் காலி'

அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் படிப்பில் சேர கலந்தாய்வு நேற்று முடிவடைந்தது. 1 லட்சத்து 6 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

"அரசு ஒதுக்கீட்டுக்கு 1 லட்சத்து 78 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. ஆனால் நிரம்பிய இடங்கள் 71 ஆயிரத்து 900. அதன் காரணமாக இந்த ஆண்டு 1 லட்சத்து 6 ஆயிரத்து 100 இடங்கள் காலியாக உள்ளன.கடந்த ஆண்டு 89 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன. இந்த வருடம் காலியாக உள்ள இடங்களின் இதை விட எண்ணிக்கை மிக அதிகரித்து உள்ளது. மேலும் இந்த ஆண்டு 60-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் தலா 10 மாணவர்கள் தான் கலந்தாய்வு மூலம் சேர்ந்து இருக்கிறார்கள்.அதன் காரணமாக பல என்ஜினீயரிங் கல்லூரிகளை மூடும் நிலை ஏற்பட்டு உள்ளது." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தி இந்து: 'காவல்துறையில் விசாகா கமிட்டி'

பெண்களுக்கு எதிரான குற்றத்தை விசாரிக்க காவல்துறையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டிருப்பதாக கூறுகிறது தி இந்து.

"உச்சநீதிம்னறம் வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த கமிட்டியானது செயல்படும். அண்மையில் ஒரு பெண் காவல் கண்காணிப்பாளர் தனது துறை உயர் அதிகாரி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துக்கிறார் என்று புகார் செய்ததாக வதந்து உலாவியது. அதனை தொடர்ந்து இந்த கமிட்டி அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அவ்வாறு எந்த பெண் காவல்கண்காணிப்பாளரும் புகார் தெரிவிக்கவில்லை என்கிறனர் காவல் அதிகாரிகள்" - இவ்வாறாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்