அடல் பிஹாரி வாஜ்பேயி- 'நான் திருமணமாகாதவன், பிரம்மச்சாரி அல்ல'

பேச்சாற்றல், சொல்லாடல் மற்றும் நகைச்சுவை ததும்ப பேசும் தலைவர்களில் தேசிய அளவில் அறியப்பட்டவர் முன்னாள் பிரதமர் வாஜ்பேயி. சிறாந்த கவிஞராகவும் திகழ்ந்த வாஜ்பேயி, இந்த தனித்திறன்களின் மூலமாக அரசியல் வாழ்வில் பல பிரச்சனைகளை சுலபமாக எதிர்கொண்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

தன்னுடைய வாக்கு சாதுர்யத்தால் சங்கடம் ஏற்படுத்தும் கேள்விகளையும் சுலபமாக சமாளிக்கும் வாஜ்பேயி, எதிராளியின் கேள்வியின் வீரியத்தை நீர்த்துப்போக செய்து, கேள்வி கேட்பவரையும் சிரிக்க வைக்கும் திறன் படைத்தவர்.

அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை, திருமணம் செய்துக் கொள்ளாதது, அவரது சிநேகிதி என சங்கடம் தரும் பல கேள்விகளுக்கும் அவர் அளித்த பதில்கள் சுவராசியமானவை.

'சிறந்த மனைவியை தேடிக்கொண்டிருக்கிறேன்'

வாஜ்பேயி திருமணம் செய்துக் கொள்ளவில்லை. ஆனால் அவரது தோழி கெளல் என்பவர் வாஜ்பேயி-இன் வீட்டிலேயே வசித்துவந்தார். ஆனால் அவருக்கு வாஜ்பேயி-இன் மனைவி என்ற அந்தஸ்து கொடுக்கப்படவில்லை. பிரதமராக இருந்தபோது அதிகாரபூர்வ மரியாதை எதுவும் கெளலுக்கு வழங்கப்படவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

வாஜ்பேயி-யை விமர்சித்தவர்கள் இந்த உறவை அரசியல் விவாதப் பொருளாக்கவில்லை. இருவருக்கும் இடையில் பெயரிடப்படாத ஒரு உறவும், அன்பு பிணைப்பும் இருந்தது.

திருமணம் செய்துக் கொள்ளாதது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, "நான் திருமணம் செய்து கொள்ளவில்லை…" என்று சொல்லிவிட்டு சற்று இடைவெளி விட்டு, "ஆனால் நான் பிரம்மச்சாரி இல்லை" என்று வாஜ்பேயி அளித்த பதில் மிகவும் பிரபலமானது.

ஒரு விருந்தில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் வாஜ்பேயி திருமணம் செய்துக் கொள்ளாததற்கான காரணம் என்ன என்று கேட்டார். முதலில் சுற்றி வளைத்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கழுவுகிற நீரில் நழுவுகிற மீனாக வாஜ்பேயி பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் அவர் "வாஜ்பேயி ஜி, நீங்கள் ஏன் பிரம்மச்சாரியாகவே இருக்கிறீர்கள்?" என்று நேரடியாகவே கேள்வி கேட்டுவிட்டார்.

"சிறந்த மனைவி தேடி" என்று பதிலளித்தார் வாஜ்பேயி. அத்துடன் விடாமல், "இன்னுமா கிடைக்கவில்லை?" என்று கிடுக்கிபிடிப் போட்டார் பத்திரிகையாளர். அதற்கு வாஜ்பேயி என்ன பதில் சொன்னார் தெரியுமா? "கிடைத்தார், ஆனால் அவருடைய தேடலும் சிறந்த கணவரைத் நோக்கியிருந்தது."

'திருமதி கெளல் விஷயம் என்ன வாஜ்பேயி ஜி?'

1978ஆம் ஆண்டு சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு அரசுமுறைப் பயணம் சென்று திரும்பி வந்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார் வெளியுறவு அமைச்சர் வாஜ்பேயி. அவரிடம் வியட்நாம், பாகிஸ்தானின் காஷ்மீர் மீதான விருப்பம் என கேள்வி மேல் கேள்வி எழுப்பப்பட்டது. வாஜ்பேயி சிரித்த முகத்துடன் பதிலளித்துக் கொண்டிருந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

முக்கியமான கேள்வி-பதில் நேரத்தில், "வாஜ்பேயி ஜி, பாகிஸ்தான், காஷ்மீர், சீனா விவகாரங்களை விடுங்கள். திருமதி கெளல் விவகாரம் என்ன என்பதை சொல்லுங்கள்" என்ற கேள்வியை எழுப்பினார் துடிப்பான இளம் பத்திரிகையாளர் உதயன் ஷர்மா.

பரபரப்பாக சென்று கொண்டிருந்த செய்தியாளர் கூட்டம் திடீரென நிசப்தமானது. வாஜ்பேயின் பதில் என்னவாக இருக்கும் என்று அனைவரும் ஆவலுடன் நோக்கினார்கள். அரங்கத்தை ஒருமுறை புன்சிரிப்புடன் பார்த்த வாஜ்பேயி அமைதியுடன் சொன்ன பதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

"கெளல் விஷயமும் காஷ்மீர் விவகாரத்தைப் போன்றதே". மிகவும் தர்மசங்கடமான கேள்வியை சூழ்நிலையுடன் தொடர்புபடுத்தி வாய்பேயி கையாண்டவிதமும், நேரடியாக பதில் சொல்லாவிட்டாலும், அவரது பதிலின் உட்பொருளை அனைவராலும் உள்வாங்கமுடிந்ததும், சூழ்நிலையை கலகலப்பாகியது.

'உங்கள் மகள் குறும்புக்காரி'

வாஜ்பேயி கூட்டணி அரசுக்கு தலைமையேற்றிருந்தபோது, கூட்டணிக் கட்சிகளிடம் இருந்து அவருக்கு கடும் நெருக்கடி இருந்தது. குறிப்பாக ஜெயலலிதா, மம்தா பானர்ஜியின் தொடர் கோரிக்கைகள் அவருக்கு தலைவலியாக மாறின. அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கீடு செய்வது முதல் அரசின் செயல்பாடுகள் வரை மம்தா பானர்ஜி அவ்வப்போது சீற்றத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ரயில்வே அமைச்சராக மம்தா பானர்ஜி பதவி வகித்தபோது, வாஜ்பேயிடம் தினசரி எதாவது ஒரு பிரச்சனையை முன்வைப்பார் என்று கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் உமேஷ் உபாத்யாய்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்பாக ஒருமுறை அரசை கடுமையாக சாடினார் மம்தா பானர்ஜி. அவரை சமாதனப்படுத்துவதற்காக கூட்டணித் தலைவர்களில் ஒருவரான ஜார்ஜ் பெர்னான்டஸ் கொல்கத்தா சென்றார்.

மாலையில் சென்ற ஜார்ஜ் நெடுநேரம் காத்திருந்தும் மம்தா பானர்ஜி அவரை சந்திக்க வரவில்லை. அதன்பிறகு ஒருநாள் திடீரென பிரதமர் வாஜ்பேயி மம்தா பானர்ஜியின் வீட்டிற்கு நேரடியாகவே சென்றுவிட்டார்.

அன்று மம்தா பானர்ஜி கொல்கொத்தாவில் இல்லை. மம்தா பானர்ஜியின் தாயின் காலில் விழுந்து வணங்கிய பிரதமர் வாஜ்பேயி அவரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பேச்சுவாக்கில், "உங்கள் மகள் குறும்புக்காரி, மிகவும் தொந்தரவு செய்கிறார்" என்று விளையாட்டாக சொல்லிவிட்டார். தாயிடம் இருந்து இதை கேள்விப்பட்ட மம்தா பானர்ஜியின் கோபம் தணிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

இந்தச் செய்தி குறித்து மேலும்