ஸ்டெர்லைட்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு - பசுமைத் தீர்ப்பாயம் ஆணை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தொடர்புடைய வழக்கில் தொடர்புடைய பிரச்சினைகளை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கவேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இக்குழுவில் மூன்று உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் கடந்த மேமாதம் நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பின்னர் இந்த ஆலையை மூடி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்குத் தடைவிதிக்கக்கோரியும், ஆலையை நடத்த அனுமதி கேட்டும், அந்த ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

தீர்ப்பாயத் தலைவர் ஏ.கே. கோயல் தலைமையிலான அமர்வு இதனை விசாரித்தது.

ஆலை தரப்பு வழக்குரைஞர் அரிமா சுந்தரம், ஆலையால் ஏற்படுவதாக கூறப்படும் மாசு குறித்து ஆய்வு செய்ய ஆலையை 25 நாள் இயக்க அனுமதி அளிக்கக் கோரினார்.

தமிழக அரசு வழக்குரைஞர் மோகனா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட நிலத்தடி நீர் மாசு குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய 10 நாள் அவகாசம் தேவை என்றார்.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஏ.கே.கோயல் அமர்வு உத்தரவிட்டது. மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அதிகாரி ஒருவர் இக்குழுவில் தொழில்நுட்ப உறுப்பினராக இருப்பார். மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவரும் இக்குழுவில் இடம் பெறுவார். இரண்டு வாரங்களுக்குள் குழு அமைக்கப்பட்டு, நான்கு வாரங்களுக்குள் இது விசாரணையை முடிக்கும். இக்குழு செயல்படுவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆஜராகியிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்