சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைக்கான நிலங்களிலிருந்து உரிமையாளர்களை வெளியேற்றத் தடை

  • 21 ஆகஸ்ட் 2018
படத்தின் காப்புரிமை Getty Images

சென்னை - சேலம் எட்டு வழி சாலைத் திட்டத்திற்கென குறிக்கப்பட்ட நிலங்களிலிருந்து உரிமையாளர்களை வெளியேற்றி அவற்றைக் கையகப்படுத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு செப்டம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை - சேலம் இடையிலான எட்டு வழி சாலைத் திட்டத்தை எதிர்த்து நில உரிமையாளர்கள், பூவுலகின் நண்பர்கள், பாட்டாளி மக்கள் கட்சி உள்பட பல்வேறு தரப்பினரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் அனைத்தும் சிறப்பு அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம் மற்றும் பவானி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நில உரிமையாளர்கள் மற்றும் பா.ம.க. சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நில உரிமையாளர்களின் விருப்பத்தை மீறி நிலம் அளவிடும் பணிகள் நடக்காது என நீதிமன்றத்தில் அரசு வாக்குறுதி அளித்திருந்த நிலையில், அதனை மீறி நிலம் அளவிடும் பணிகள் நடப்பதாக வாதிட்டனர்.

மேலும், இப்படி நிலங்களை அளவீடு செய்யும்போது குறுக்காக வரும் மரங்களை வெட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினர்.

எனவே, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நிலம் அளவெடுக்கும் பணிகள் தொடர்வதோடு அவர்கள் துன்புறுத்தப்பட்டும் வருவதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர். இதனால், இந்தப் பணிகளுக்குத் தடைவிதிக்க வேண்டுமெனக் கோரினர்.

இந்த வழக்கில் மாநில அரசுத் தரப்பில் ஆஜராகியிருந்த தலைமை வழக்கறிஞர், மத்திய அரசின் சார்பில் ஆஜராகியிருந்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோர் மக்களிடம் நிலம் அளப்பது தொடர்பாக துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் மக்களின் அனுமதியின்றி நிலம் அளவெடுக்கும் பணிகள் நடப்பதில்லையென்றும் தெரிவித்தனர்.

Image caption உயர்நீதிமன்றம்

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், வெட்டப்படும் மரங்களுக்குப் பதிலாக கூடுதல் மரங்கள் நடப்படுவது உறுதி செய்யப்படுவதில்லை. அவ்வாறு நடப்படும் மரங்கள் பாதுகாக்கப்படுகிறதா என்பதும் தெரியவில்லை. தவிர, மக்கள் துன்புறுத்தப்படுவதாகவும் மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தால் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில், நிலத்திலிருந்து நில உரிமையாளர்கள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட மாட்டார்கள் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லையென்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

ஆகவே, மறு உத்தரவு வரும்வரை இந்தத் திட்டத்திற்கென குறிக்கப்பட்ட நிலங்களிலிருந்து உரிமையாளர்களை அகற்ற இடைக்காலத் தடைவிதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வழக்கின் விசாரணை செப்டம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: