பாகிஸ்தான் ராணுவ தலைவரை நவ்ஜோத் சிங் சித்து அணைத்துக்கொண்டது ஏன்?

  • குருப்ரீத் சிங் சாவ்லா
  • பிபிசி

சீக்கியர்களின் புனித தலமான கர்த்தர்புர் சாஹிப், பாகிஸ்தானுக்குள் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் இருந்து கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.

பட மூலாதாரம், NARINDER NANU/Getty Images

படக்குறிப்பு,

நவ்ஜோத் சிங் சித்து

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் குர்டாஸ்புர் மாவட்டத்திலுள்ள டேரா பாபா நானக் நகரம் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே அமைந்துள்ளது. இப்பகுதியில் இருந்து கர்த்தர்புர் சாஹிப்புக்கு செல்ல வழித்தடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போது புதிதாக எழுவதல்ல.

ஆனால் சமீபத்தில் பஞ்சாப் மாநில அமைச்சரான நவ்ஜோத் சிங் சித்து பாகிஸ்தானுக்குச் சென்று திரும்பியவுடன் மீண்டும் அக்கோரிக்கை பெருங்கவனம் பெற்றுள்ளது.

தனது நண்பரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் பாகிஸ்தானில் பிரதமராக பொறுப்பேற்கும் விழாவில் கலந்துகொள்ள சித்து பாகிஸ்தான் சென்றார். அவ்விழாவில், அவர் பாகிஸ்தான் ராணுவ தலைவரான, ஜெனெரல் காமர் ஜாவேத் பாஜ்வாவை கட்டி அணைத்துக்கொண்ட விவகாரம் இந்திய ஊடகங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளானது.

பாகிஸ்தான் ராணுவமும், பாகிஸ்தான் அரசில் செல்வாக்கு செலுத்துபவர்களும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் உள்ளன. அதேவேளையில் நரேந்திர மோதியின் ஆட்சி பயங்கரவாத செயல்களுக்கு எதிராக ஆக்ரோஷமான நிலைப்பாடு எடுத்து வருவதாக, இந்திய ஊடகங்கள் ஆதரவளித்துவரும் நிலையில் இவ்விமர்சனம் பூதாகாரமாகியுள்ளது. மற்றொரு பக்கம் பஞ்சாப் மக்கள் இது நல்ல பண்பாடு என வரவேற்றுள்ளனர்.

ஆகஸ்ட் 19 அன்று, இந்தியா திரும்பியவுடன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், முதல் சீக்கிய குருவான குருநானக் தேவ் கடைசியாக வாழ்ந்த இடமான கர்த்தர்புர் சாஹிப்புக்கு செல்லும் வழியை திறப்பது குறித்து பாகிஸ்தானின் ஜெனெரல் பேசியதால், தான் உணர்ச்சிவயப்பட்டு சென்று கட்டி அணைத்ததாக சித்து விளக்கம் அளித்தார்.

குரு நானக்குடன் தொடர்புடைய கர்த்தர்புர் மற்றும் குருத்வாரா ஆகியவை சீக்கியர்களுக்கு முக்கியமான தலமாகும். கர்த்தர்பூரில் உள்ள சீக்கிய கொடியான நிஷான் சாஹிப்பை கொண்டிருக்கும் கொடிக்கம்பத்தை இந்திய பகுதியில் இருந்து பைனாகுலர் மூலமாக பார்க்க எல்லை பாதுகாப்பு படை வசதி செய்து தந்துள்ளது. இதன்வழியாக மிகப்பெரிய எண்ணிக்கையில் தினமும் மக்கள் வழிபடுகிறார்கள்.

இதன் தனிச்சிறப்பு என்ன?

ரவி நதிக்கு அடுத்தபடியாக கர்த்தர்புர் அமைந்துள்ளது. குருநானக் தேவ் இப்பகுதியில்தான் தனது மதபோதனைகளை செய்தார்.

மேலும் தனக்கு பின் அவரது பீடத்தில் அமரக்கூடியவராக பாய் லென்னா என்பவரை நியமித்தார். பாய் லென்னாவுக்கு குரு அங்கத் தேவ் என புதுப்பெயர் சூட்டப்பட்டது.

டேரா பாபா நானக்கில் உள்ள குருத்வாரா சோலா சஹிபில்லில் சேவை செய்த, நானாவின் 16-வது தலைமுறை வழித்தோன்றலான சுக்தேவ் சிங் மற்றும் அவ்தார் சிங் கூறுகையில், ''கர்த்தர்புர் சாஹிப் எனும் இடத்தில்தான் குரு நானக் தேவ் (1469-1539) 17 வருடங்கள் ஐந்து மாதங்கள் 9 நாள்கள் செலவிட்டார். அவரது குடும்பம் அங்கே வசித்தது, அவரது பெற்றோர்களும் அங்கே தான் இறந்தனர்'' என்றனர்.

பட மூலாதாரம், Hindustan Times

சிரோமணி அகாலிதள தலைவர் குல்தீப் சிங் வடாலா இச்சாலை திறப்பு கோரிக்கைக்காக ஓர் அமைப்பை தோற்றுவித்தபிறகு, 2001-ல் இருந்து பாகிஸ்தானில் உள்ள இவ்விடத்திற்கு வழியை திறப்பதற்காக மாதாந்திர பிரார்த்தனை நடந்தது.

இப்பிரார்த்தனைகளில் தொடர்ச்சியாக கலந்து கொண்டுவந்த குரிந்தர் சிங் பஜ்வா கூறுகையில்,''கர்த்தர்புர் சாஹிப் சீக்கியர்களின் மெக்கா'' என்கிறார்.

''உறவுகளை மேம்படுத்த உதவும்''

''புனித தலத்திற்குச் செல்லும் வழி அமைப்பது, இரு நாடுகளுக்கு இடையே உறவுகளை மேம்படுத்தும்'' என கூறுகிறார்.

2008-ம் ஆண்டு மே 6-ம் தேதி, எல்லை பாதுகாப்பு படையானது எல்லைக்கு சில மீட்டர்கள் உள்ளே கம்பி முள் வேலி அமைந்த இடத்திற்கு அருகே அப்புனித தலத்தின் தோற்றத்தை பார்க்கும் ஒரு வசதியை செய்து தந்திருந்தது.

80 வயதான ஜோகிந்தர் சிங் மற்றும் பவிதர்ஜீட் கவுர் லூதியானாவில் இருந்து தரிசனத்திற்கு வந்திருந்தனர். ''சாலை வழி திறக்கப்படும் என நாங்கள் பல வருடங்களாக காத்திருக்கிறோம். அது அமையும்பட்சத்தில் நாங்கள் பைனாகுலரை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. புனித தலத்திற்கு நடந்தே செல்லலாம். அது விரைவில் நடக்கும் என நம்புகிறோம்'' என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :