ஊரெல்லாம் 300 பேனர் வைத்து காதலியிடம் மன்னிப்பு கேட்ட காதலன்: இதுதான் வழியா?

  • திவ்யா ஆர்யா
  • பிபிசி

காதலியிடம் மன்னிப்பு கேட்பது எப்படி? என்று கூகுள் தேடுபொறியில் தேடினால் மூன்றரை கோடிக்கும் அதிகமான பதில்கள் கிடைக்கிறது!

பட மூலாதாரம், PRADIP LOKHANDE/BBC

உதாரணமாக, முதலாவதாக, மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற உள்ளார்ந்த விருப்பம் தேவை, பிறகு உங்களுடைய செயலால் வருத்தப்படும் காதலிக்கு, உங்கள் நிலையை எடுத்து தெளிவாக விளக்குங்கள்.

அதுமட்டுமல்ல, காதலியின் தரப்பு நியாயத்தையும் கேட்கும் பொறுமை வேண்டும். பிரச்சனை தீர்வதற்காக அதற்கான கால அவகாசத்தையும் கொடுங்கள். பிறகு பரிசு கொடுக்கலாம், கடிதம் எழுதலாம்.

சரி, எவ்வளவுதான் யோசனைகள் கொடுத்தாலும், அனைவருக்கும் தனிப்பட்ட பாணி என ஒன்று இருக்குமல்லவா? பிறருக்கு யோசனை சொல்லி சிக்கலை தீர்க்க உதவும் ஐடியா மணிகளுக்கே இந்த விஷயத்தில் எதுவுமே தோன்றாமல் போகலாம்.

மகாராஷ்டிர மாநிலம் புனே நகருக்கு அருகில் உள்ள பிம்பரி-சிஞ்ச்வாட் என்ற ஊரைச் சேர்ந்த 25 வயது இளைஞர் தனது காதலியை சமாதானப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைதான் தற்போது அனைவராலும் பரவலாக பேசப்படுகிறது.

பட மூலாதாரம், PRADIP LOKHANDE/BBC

அவர் அப்படி என்ன செய்தார்? நகரம் முழுக்க 300 பதாகைகளை வைத்து அதன் மூலம் தோழியிடம் மன்னிப்பு கோரினார்.

'ஷிவ்டே, ஐ ஆம் சாரி' என்று அவர் வைத்திருந்த பதாகைகளை அவரது காதலி பார்த்தாரா? மன்னித்தாரா? இருவரும் சமாதானம் ஆகிவிட்டார்களா? என்ற கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை.

பொது இடங்களில் பதாகைகளை வைப்பது, அதில் காதலியின் குடும்பப் பெயரான ஷிவ்டே என்பதை குறிப்பிட்டிருப்பது காதலிக்கு சங்கடங்களை ஏற்படுத்தும் என்பது அந்த இளைஞருக்கு தெரியவில்லையா? அதாவது அந்த பெண்ணின் அடையாளம் வெளிப்படும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பது, மன்னிக்கும் உணர்வுக்குப் பதிலாக வெறுப்பை தூண்டாதா? இப்படி பல கேள்விகள் எனக்குள் எழுகின்றன.

பொது இடங்களில் வைக்கப்பட்ட மன்னிப்புக் கோரும் அவருடைய பதாகைகளை அந்த ஊரை சேர்ந்த மக்கள் மட்டும் பார்க்கவில்லை. இந்த வித்தியாசமான விளம்பர பதாகைகள் அனைவரையும் கவந்ததன; பத்திரிகைகளில் வெளியாகி, நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் விவகாரமாகிவிட்டது.

பட மூலாதாரம், Getty Images

பொது இடங்களில் மன்னிப்புக் கோரும் இதுபோன்ற சம்பவங்கள் முதலுமல்ல, முடிவுமல்ல. பல பிரபலங்களும் இப்படி வித்தியாசமான முறையில் மன்னிப்பு கோரியிருக்கின்றனர்.

பிரபல பாடகி ரிஹானாவின் நண்பர் கிரிஸ் பிரவுன், பொதுவெளியில் மன்னிப்பு கேட்கும் உபாயத்தை மேற்கொண்டவரே.

2009ஆம் ஆண்டு, கிரிஸ் பிரவுன், தனது காதலி ரிஹானாவை மிக மோசமாக தாக்கினார். அதை அடுத்து அவர் மீது குடும்ப வன்முறை சட்டம் பாய்ந்தது.

அதற்கு சில மாதங்களுக்கு பிறகு மன்னிப்பு கோரும் காணொளி ஒன்றை கிரிஸ் வெளியிட்டார். தனது செய்கைக்காக மன்னிப்பு கோருவதாகவும், தான் ஆரம்பத்திலேயே மன்னிப்பு கோர விரும்பியதாகவும், ஆனால் வழக்கு நடைபெறுவதை சுட்டிக்காட்டி, அமைதியாக இருக்கும்படி வழக்கறிஞர் கூறிவிட்டதாக அந்த வீடியோ செய்தியில் கிரிஸ் கூறியிருந்தார்.

ரிஹானாவிடம் தான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோரியதாகவும், ஆனால் அவர் மன்னிக்க மறுத்துவிட்டதால், தற்போது பொதுவெளியில் அனைவரின் முன்பு மன்னிப்பு கோருவதாக பகிரங்கமான அந்த வீடியோப் பதிவில் கிரிஸ் குறிப்பிட்டிருந்தார்.

தன் மீதான வழக்குக்காக மன்னிப்பு கோரினாரா? பிறருக்கு முன்மாதிரியாக இருக்கலாம் என்று மன்னிப்பு கோரினாரா? மன்னிப்பு கோரியதில் அவரின் நோக்கம் என்ன?

கிரிஸ் பிரவுனுக்கு, ரிஹானாவிடம் இருந்தோ, நீதிமன்றத்திடம் இருந்தோ மன்னிப்பு கிடைக்கவில்லை. குடும்ப வன்முறை செய்த குற்றத்திற்காக கிரிஸுக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது.

நடனமாடி மன்னிப்பு கேட்டவர்

இன்ஸ்டாகிராம், யூ டியூப் போன்ற சமூக ஊடகங்களில் 'ஷிக்கி நடனம்' மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்திருக்கும் ஷிக்கி தன்னுடைய காதலியிடம் பொது வெளியில் மன்னிப்புக் கோரினார்.

ஷிக்கி வெளியிட்ட வீடியோ பதிவில், பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தற்காக தன் காதலியிடம் அவர் மன்னிப்புக் கோரினார். தனது பிரபலத்தை சுட்டிக்காட்டவும், காதலியை சிறுமைபடுத்தி காண்பிப்பதற்காகவும் தான் இவ்வாறு செய்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images

தற்போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ விரும்புவதால் மன்னிப்புக் கோருவதாகவும் தனது செயலுக்கு வெட்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஷிக்கி மன்னிப்பு கோரியது அவரது காதலியின் மனதை மாற்றியதா என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும், சமூக ஊடகங்களில் அவரது ரசிகர்களே ஷிக்கியை விமர்சனம் செய்யத் தொடங்கிவிட்டனர்.

ஆண்கள் என்றால் எப்படி நடந்து கொள்ளவேண்டும், அவர் பெண்களை பார்க்கும் கண்ணோட்டம் என்ன என்பதை, ஷிக்கியின் மன்னிப்பு கேட்கும் காணொளிப் பதிவு வெளிப்படுத்துவதாக பலர் டிவிட்டர் பதிவுகள் மூலம் ஷிக்கியை விமர்சித்திருந்தனர்.

பிரபலமான ஒருவர் பொதுவெளியில் மன்னிப்பு கோருவதன் பொருள், சம்பந்தப்பட்டவர்களுக்கான தனிப்பட்ட செய்தி மட்டுமல்ல, பொதுவெளியில் தனது நேர்மறையான பிம்பத்தை உருவாக்குவதாக இருக்கலாம். ஆனால் நோக்கம் சரியில்லை என்றால் அது மன்னிப்புக் கோரியவரையே பதம் பார்த்துவிடலாம் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

ஐ.நா-வோ, உலக சுகாதார அமைப்போ அல்லது எந்த உலகளாவிய ஆராய்ச்சியோ, மன்னிப்புக் கோருவதற்கு தர நிர்ணயம் செய்யவில்லை.

ஆனால் காதலி உங்களிடம் பேச விரும்பாவிட்டாலும் கூட நீங்கள் வலியச் சென்று பேச முயற்சிப்பது, முடியாது என்று உறுதியாக சொல்பவரை வலுக்கட்டாயப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் அவரை பின்தொடரும் நடவடிக்கைகளாக கருதப்படலாம்.

மன்னிப்பு கோரியும், மன்னிக்காவிட்டால், கொடூரமானவராக உலகத்தின் முன் சித்தரிக்கப்படும் அபாயமும் இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

பொதுவெளியில் இப்படி பகிரங்கமாக கோரப்படும் மன்னிப்பு கோரிக்கை பரிசீலிக்கப்பட்டாலும், ஏற்றுக்கொள்ளபட்டாலும், அது உளப்பூர்வமானதாக இருக்குமா? இதயங்களை சேர்க்கும் பாலமாக மாறுமா என்பதை உறுதியாக கணிக்கமுடியாது.

அன்பும் மன்னிப்பும் பகிரங்கமாக கோரப்படுவதால் மட்டுமே கிடைத்துவிடுவதில்லை. கொடுப்பவருக்கும் பெறுபவருக்கும் இடையிலான தனிப்பட்ட உணர்வுகளை அடிப்படையாக கொண்டவை. இருவருக்கும் பொதுவான நோக்கம் சரியானதாக மட்டுமல்ல, பொருந்திப் போவதாகவும் இருக்கவேண்டும்.

அதற்கு தவறை ஒத்துக் கொள்ளும் மனம் மற்றும் திறந்த மனதுடன் மற்றவர்களின் தரப்பை கேட்கும் பொறுமை ஆகியவை அவசியம்.

இவை மட்டும் போதுமா? பதிலை கேட்பதற்கும் பொறுமை தேவை. அன்பையோ மன்னிப்பையோ எதிர்த் தரப்பினர் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அதை சரியான நோக்கத்துடன் புரிந்துக் கொள்ளும் மனப்பக்குவமும் அவசியம்.

மன்னிப்பை ஏற்றுக்கொண்டால், தன்னுடைய தவறை முழுமையாக சரி செய்வதற்கும், மன்னிப்பு கோரும்போது சொன்னவற்றை சரிவர நிறைவேற்றும் உறுதியும் வேண்டும். மன்னிப்பு கிடைத்ததும் மீண்டும் அதே தவறை திரும்பச் செய்யக்கூடாது.

ஏனெனில் 'ஐ அம் சாரி' என்று சொல்வது தவறை திருத்திக் கொள்வதற்கான இறுதி நடவடிக்கை அல்ல, அதுதான் முதலடி. பிறகு தவறை சரி செய்யவும், மீண்டும் நடைபெறாமல் இருக்கவும் மனப்பூர்வமான முயற்சிகள் தொடரவேண்டும்.

மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தையின் பின்னணி, வார்த்தைகளால் சொல்லித் தீர்த்துவிட முடியாத அடர்ந்த அர்த்தங்களை கொண்டது.

"மன்னிக்கத் தெரிந்தவன் மனிதன், மன்னிப்பு கேட்கத் தெரிந்தவன் பெரிய மனிதன்" என்ற 'விருமாண்டி' திரைப்பட வசனம் நினைவுக்கு வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :