மாணவியை மிரட்டும் பேராசிரியைகள் - பரபரப்பு ஆடியோ

இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.

தினத்தந்தி: 'மாணவியை மிரட்டும் பேராசிரியைகளின் பரபரப்பு ஆடியோ'

பட மூலாதாரம், Getty Images

திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரி விடுதி காப்பாளர்களான 2 பேராசிரியைகள் கல்லூரி மாணவியை மிரட்டிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

"நீயா தான் உன் பிரச்சினையை கொண்டுபோன... உங்க அப்பாவை வரவழைத்து ஒரு கடிதத்தை எழுதி கொடுத்துவிட்டு போகச்சொல். அப்படி கொடுத்தால் நீ இன்னும் 2 ஆண்டுகளில் படிப்பை முடித்துவிட்டு செல்லலாம். இல்லையென்றால் நீயே எனக்கு படிப்பு வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றுவிடு. இது உனக்கும், உன் அப்பாவுக்கும், டீனுக்குமான பிரச்சினை. உங்க அப்பாவை கல்லூரிக்கு வரச்சொல்.

நீ சரியில்லை என்று நாங்கள் சொன்னால் என்ன நடக்கும் தெரியுமா? அமைதியாக எங்கள் சொல்படி கேட்டு படித்துவிட்டு சென்றுவிடு. டீனை பார்த்து, உங்க அப்பாவை விட்டு கெஞ்ச சொல். எத்தனை தகவலை நாங்கள் வெளியே கொண்டுபோகாமல் இருந்திருக்கிறோம் தெரியாதா உனக்கு?

நீ எப்ப காலேஜ் முடிக்கப்போற. ஒழுங்கா டீன் கூறுவதை கேள். மைண்ட ஒரு இடத்துக்கு செட் பண்ணு... இது ஒரு சின்ன விஷயம்... ஒன்றுமே இல்லை. மறந்துவிடு. பல பெண்கள் திருமணம் முடிந்து கடந்த காலத்தை மறந்துவிட்டு கணவனோடு சந்தோஷமாக வாழ ஆரம்பித்துவிடுவார்கள். இது ஒரு சின்ன விஷயம் தான். புரிஞ்சிதா..." என்று மிரட்டுவதாக உள்ளது அந்த ஆடியோ என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், இந்து தமிழ்

தினமணி: 'முக்கொம்பு மதகுகள் உடைப்பு'

பட மூலாதாரம், தினத்தந்தி

முக்கொம்பு மேலணையில் 8 மதகுகள் உடைந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு அணையின் மேலே உள்ள பாலத்தின் வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள், மாணவர்களின் போக்குவரத்து நிலை கேள்விக்குறியாகி உள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

"திருச்சியை அடுத்த முக்கொம்பு மேலணையில் உள்ள பாலம் கட்டி 180 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளதால் வாய்த்தலை, குணசீலம், ஆமூர், சிறுகாம்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருள்களை கொண்டு செல்லவும், சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி நிறுவனங்களுக்கு செல்லவும் மட்டுமே இந்தப் பாலத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், புதன்கிழமை இரவு பாலத்தின் 8 மதகுகள் அடித்துச் செல்லப்பட்டதால் விவசாயிகள், மாணவர்களின் போக்குவரத்து கேள்விக்குறியாகியுள்ளது.

மதகுகள் உடைந்ததையடுத்து உடனடியாக இருவழியிலான போக்குவரத்து தடை செய்யப்பட்டது." என்றி விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

இந்து தமிழ்: 'சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு'

தமிழகத்தில் மொத்தம் 20 சுங்கச் சாவடிகளில் வரும் 1-ம் தேதி முதல் 10 முதல் 12 சதவீதம் வரை யில் கட்டணம் உயர்வு செய்து வசூலிக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் முடிவு செய்துள்ளது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

"தமிழகத்தில் மொத்தம் 45 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் சுழற்சி அடிப்படையில் செப்டம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் என தனித்தனியாக பிரித்து சுங்கச்சாவடி களில் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த கட்டண உயர்வு களால் போக்குவரத்து நெரிசலை கணக்கு காட்டி அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்த்தப்படுகிறது. இதேபோல், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே வழக்கம்போல், வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் மொத்தம் 20 சுங்கச்சாவடிகளில் 10 முதல் 12 சதவீதம் வரையில் கட்டணம் உயர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைத்துறை விரைவில் வெளியிடவுள்ளது. இதில், சேலம்-உளுந்தூர் பேட்டை- மேட்டுப்பட்டி, திண்டிவனம் -உளுந்தூர்பேட்டை, நல்லூர் - சென்னை, திருச்சி-திண்டுக்கல், நத்தக்கரை-வீரசோழ புரம், விக்கிரவாண்டி - தடா (ஆந்திர மாநிலம்), பொன்னம்பலபட்டி உள் ளிட்டவை இடம் பெறும்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா: 'ஆசிய விளையாட்டு போட்டிகள்-சாதனை படைத்த இந்திய வீராங்கனை ராஹி`

பட மூலாதாரம், Getty Images

கடந்த 18-ஆம் தேதி இந்தோனீசியாவில் தொடங்கிய ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடர்பான செய்தியை 'தி டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழ் வெளியிட்டுள்ளது.

பதக்கப் பட்டியலில் தொடர்ந்து சீனா முன்னிலையில் இருந்துவரும் நிலையில், 4 தங்கம், 3 வெள்ளி மற்றும் 8 வெண்கல பதக்கங்களுடன் இந்தியா ஏழாவது இடத்தில் நீடித்து வருகிறது.

புதன்கிழமையன்று நடந்த மகளிருக்கான 25 கி.மீ துப்பாக்கி சுடுதல் போட்டி பிரிவில், இந்திய வீராங்கனை ராஹி சர்னோபத் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த செய்தியை அந்த நாளிதழ் விவரித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் துப்பாக்கி சுடுதல் போட்டி பிரிவில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை ராஹி பெற்றுள்ளார்.

ஆண்கள் ஹாக்கி பிரிவில் ஹாங்காங் அணியை 26-0 என்ற தோற்கடித்து இந்திய அணி இமாலய வெற்றியை பெற்றுள்ளதையும் இந்த நாளிதழ் செய்தி விவரித்துள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'லஞ்ச குற்றச்சாடு: நான்கு போலீஸார் இடைநீக்கம்'

வாகன ஓட்டிகளிடமிருந்து லஞ்சம் வாங்கும் காணொளி சமூக ஊடகத்தில் வைரலாக பரவியதை அடுத்து நான்கு போக்குவரத்து காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

இவர்கள் மீது துறை விசாரணை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், விசாரணை முடிவுகளுக்குப் பின்பே அடுத்தக்கட்டம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் கூறுவதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: