கேரள வெள்ளம்: ''மக்கள் இந்த சூழலை எதிர்கொண்ட விதம் வியக்க வைக்கிறது''

  • மு.நியாஸ் அகமது
  • பிபிசி தமிழ்

கேரளா மெல்ல மெல்ல தனது இயல்புநிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. நிவாரண முகாம்களில் இருந்த மக்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images

இப்போதுள்ள சூழ்நிலையில் கேரளாவில் நோய் தொற்றை எதிர்ப்பதுதான் பெரிய சவாலாக இருக்கிறது என்கிறார் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர்.

இதற்கு மத்தியில் வெளிநாடுகள் அளிக்கும் நிதியை பெற்றுக் கொள்ளலாமா, வேண்டாமா என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவின் வெள்ள நிவாரணத் துக்காக ஐக்கிய அரபு அமீரக அரசு அறிவித்த ரூ.700 கோடி நிதியுதவியை ஏற்க மத்திய அரசு மறுத்துள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அது போல, கேரள வெள்ள நிவாரணத்துக்காக நிதியுதவி அளிக்க முன் வரும் நாடுகளுக்கு நன்றி கூறுங்கள். அதேநேரம் அந்த நாட்டின் நிதியுதவியை ஏற்க வேண்டாம்" என்று தூதரகங்களுக்கு இந்திய அரசு அறிவுறுத்தி உள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.

'வெளிநாட்டு நிதி'

இது தொடர்பாக இந்திய அரசு ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

"வெளிநாட்டு நிதிபெறும் விஷயத்தில் முந்தைய கொள்கைகளை அரசு பின்பற்றும், மீட்பு மற்றும் புனர்வாழ்வு தேவைகளில் வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர், சர்வதேச நிறுவனங்கள் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கோ அல்லது இந்திய பிரதமர் நிவாரண நிதிக்கோ அனுப்பலாம்" என்று விளக்கம் கூறி உள்ளது.

சமூக ஊடகங்களில் இது காத்திரமான விவாதத்தை எழுப்பி உள்ளது. வெளிநாட்டிலிருந்து கட்சிகள் நிதி பெறலாம். ஆனால், பேரிடரில் சிக்கி தவிக்கும் ஒரு மாநிலம் நிதியினை பெறகூடாதா? என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று செய்தியாளர்களிடம், "ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ச்சிக்கு கேரள மக்கள் அதிகமாக பங்களித்துள்ளனர். அதன் காரணமாகவே அந்த நாடு கேரளாவுக்கு அதிக நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது. அந்த நாட்டை வேறு நாடாக கருத முடியாது. இந்த விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்" என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

முன்னதாக, பிபிசிக்கு அளித்த நேர்காணலில் கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், இந்த வெள்ள பாதிப்பினால் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏழு சதவீதத்துக்கும் கீழே குறையக்கூடும் என்றும் அவர் கவலை தெரிவித்திருந்தார்.

கடந்த முப்பது ஆண்டுகளாக இந்திய சராசரியான ஏழு சதவீத ஜிடிபி என்பதைக் காட்டிலும் அதிகமான வளர்ச்சியை கேரளா கொண்டிருந்தது. எட்டு சதவீதமாக இருந்த ஜிடிபி இந்த ஆண்டு சரிவை சந்திக்கும் என்று சந்தேகிக்கிறேன். அதிலும் ஏழு சதவீதிற்கும் குறைவாக இருக்கும். இந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட இழப்புகளின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.20,000 கோடியை எட்டும்,'' என்று பிபிசியிடம் அவர் குறிப்பிட்டார்.

'கேரள மக்களின் நிலை'

பொருளாதாரம் மற்றும் அரசியலை எல்லாம் கடந்து, அந்த மக்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதை அறிய களத்தில் மீட்புப் பணியில் இருக்கும் தன்னார்வலர்களிடம் பேசினோம். கேரள மக்களின் மன உறுதி உண்மையில் வியக்க வைப்பதாக கூறுகிறார்கள் அவர்கள்.

பட மூலாதாரம், Hindustan Times

நிழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், இந்த கடினமான சூழலிலும் பதற்றப்படாமல் அவர்கள் சூழலை எதிர்கொண்ட விதம் ஆச்சர்யத்தை தருகிறது. ஆனால், எதிர்காலம் குறித்து அச்சம் அவர்களிடம் நிலவுவதையும் மறுக்க முடியாது என்கிறார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் நீர் வடிந்துவிட்டாலும், பத்தனம்திட்டா மாவட்டத்தின் நிலை இன்னும் மோசமாக இருப்பதாக கூறுகிறார் சுரேஷ்.

நம்பிக்கை ஒளிக் கீற்று

இப்போது வெயில் மட்டுமே அனைவருக்கும் இருக்கு ஒரே நம்பிக்கை. அந்த நம்பிக்கை ஒளிக்கீற்று மெல்ல தெரிய தொடங்கி இருப்பதாக கூறுகிறார் வயநாடு பகுதியில் நிவாரண பணியில் இருக்கும் ஆன்மன்.

பட மூலாதாரம், Facebook

வயநாட்டின் கல்பட்டா, பத்தேரி பகுதியில் லேசான வெயில் வரத் தொடங்கி இருந்தாலும், மோசமாக பாதிக்கப்பட்ட மானந்தவாடியில் நேற்றும் மழை பெய்ததாக கூறுகிறார் ஆன்மன்.

ஆன்மன், "இன்னும் அந்த பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் இருக்கிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள் தினக்கூலிகள். முற்றும் முழுவதுமாக வாழ்வாதரத்தை இழந்து நிற்கிறார்கள். மீள் குடியேற்றம் என்பதுதான் பெரும்சவாலாக இருக்கப் போகிறது" என்கிறார் ஆன்மன்.

சமூக ஊடகத்தில் உதவிகளை ஒருங்கிணைத்து கொண்டிருக்கும் இனியன் ராமமூர்த்தி சக மனிதன் மீதான மக்களின் நேயம் நெகிழ வைப்பதாக கூறுகிறார்.

"இந்த பகுதி மக்களுக்கு இந்த தேவை என்று ஒரு செய்தி அனுப்பினால் போதும்; மக்கள் தங்களால் இயன்றதை எடுத்து கொண்டு வந்துவிடுகிறார்கள்" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: