ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய குழு அமைப்பு

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய குழு அமைப்பு

பட மூலாதாரம், Reuters

ஸ்டெர்லைட் தாமிரஆலையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்றஉயர் நீதிமன்ற நீதிபதியான எஸ்.ஜே. வசீ்ப்தர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு குறித்தும், ஆலை தொடர்ந்து மூடப்படுமா அல்லது இயக்கப்படுமா என்பது குறித்தும் இந்த குழு முடிவெடுக்கும்.

கடந்த 20-ஆம் தேதியன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தொடர்புடைய வழக்கில் தொடர்புடைய பிரச்சினைகளை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கவேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்குப் பின்னர் இந்த ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்குத் தடைவிதிக்கக்கோரியும், ஆலையை நடத்த அனுமதி கேட்டும், அந்த ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது.

தீர்ப்பாயத் தலைவர் ஏ.கே. கோயல் தலைமையிலான அமர்வு இதனை விசாரித்தது.

ஆலை தரப்பு வழக்குரைஞர் அரிமா சுந்தரம், ஆலையால் ஏற்படுவதாக கூறப்படும் மாசு குறித்து ஆய்வு செய்ய ஆலையை 25 நாள் இயக்க அனுமதி அளிக்கக் கோரினார்.

தமிழக அரசு வழக்குரைஞர் மோகனா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட நிலத்தடி நீர் மாசு குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய 10 நாள் அவகாசம் தேவை என்றார்.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஏ.கே.கோயல் அமர்வு கடந்த 20-ஆம் தேதியன்று உத்தரவிட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: