கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்துக்கு அமித் ஷா அழைப்பு: பா.ஜ.கவை நெருங்குகிறதா தி.மு.க.?

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கான நினைவேந்தல் கூட்டம் ஒன்றில் பா.ஜ.கவின் தலைவர் அமித் ஷாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது அக்கட்சி தொண்டர்களிடத்திலும் தமிழக அரசியல் களத்திலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவையடுத்து எழுத்தாளர்கள், திரைக் கலைஞர்கள், தமிழக அரசியல் தலைவர்கள், தேசிய அளவிலான அரசியல் தலைவர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளை அக்கட்சி ஏற்பாடு செய்துள்ளது.

இதில் ஏற்கனவே இரண்டு நிகழ்வுகள் முடிந்துவிட்ட நிலையில், திரைக் கலைஞர்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சனிக்கிழமையன்று நடைபெற்றதுது. இதற்கு அடுத்தபடியாக தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் வரும் 26ஆம் தேதியன்று நடக்கவிருக்கிறது.

இறுதியாக, ஆகஸ்ட் 30ஆம் தேதியன்று பிரம்மாண்டமான முறையில் சென்னையில் தேசிய அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்திற்கு தி.மு.க. தற்போது ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. இந்தக் கூட்டத்திற்கான அழைப்பிதழ் எனக் குறிப்பிடப்பட்ட ஒரு படம், வெள்ளிக்கிழமையிலிருந்து இணையத்தில் பரவ ஆரம்பித்தது. இந்த நினைவேந்தல் கூட்டத்தில் பா.ஜ.கவின் சார்பில் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா கலந்துகொள்வதாக அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.

படத்தின் காப்புரிமை Facebook/M.K.Stalin

இதையடுத்து இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது. தி.மு.கவைச் சேர்ந்த பலரும் இந்த அஞ்சலிக் கூட்டத்திற்கு அமித் ஷாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கும் அதில் அவர் பங்கேற்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்தபோது, அவரை அடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் தமிழக அரசு இடம் கொடுக்க மறுத்ததன் பின்னணியில் பா.ஜ.கவே இருந்தது எனக் குற்றம்சாட்டிய பல தொண்டர்கள், அவர் எப்படி கருணாநிதிக்கான அஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்க முடியும் என்று கேள்வியெழுப்பினர்.

கருணாநிதி மறைவு : அழகிரியின் அடுத்த திட்டம் என்ன?

கருணாநிதி மறைவுக்கு பின் ஸ்டாலின் முன்பு உள்ள சவால்கள் என்ன?

தமிழகத்தில் கருணாநிதி கொண்டுவந்த வளர்ச்சி திட்டங்கள் என்னென்ன?

தி.மு.க. தொடர்ந்து மதவாதத்தை எதிர்த்துவருவதாதக் கூறும் நிலையில், குறிப்பாக தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு எதிரான அலை வீசுவதாகச் சொல்லப்படும் நிலையில், அமித் ஷாவை அஞ்சலிக் கூட்டத்திற்கு அழைப்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துமென்றும் சுட்டிக்காட்டினர்.

ஆனால், தி.மு.க. அதிகாரபூர்வமாக இதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த நிலையில்தான் வெள்ளிக்கிழமை இரவில் பா.ஜ.கவின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில், கருணாநிதிக்கான அஞ்சலி கூட்டத்தில் அமித் ஷா கலந்துகொள்ளப்போவதில்லை எனத் தெரிவித்தார்.

"தி.மு.க. கூட்டத்தில் கட்சித் தலைவர் அமித் ஷா கலந்துகொள்ளப்போவதில்லை என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி" என சுப்பிரமணியன் சுவாமி அந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

உண்மையிலேயே கருணாநிதிக்கான நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்க அமித் ஷாவுக்கு தி.மு.க. அழைப்பு விடுத்ததா? "ஆம். அழைப்பு விடுக்கப்பட்டது. தேசிய அளவில் எல்லாத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதைப்போல அமித் ஷாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது" என தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆனால், அமித் ஷா இந்தக் கூட்டத்தில் பங்கேற்பாரா என்பது குறித்து இன்னும் முடிவுசெய்யப்படவில்லை. திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், "அவர் வருகை குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அவர் வருவதாக இருந்தால் அவரது பயணத் திட்டம் குறித்து முன்கூட்டியே மாநிலத் தலைமைக்கு தெரிவிக்கப்படும். அப்படி ஏதும் தகவல் இதுவரை வரவில்லை" என்று கூறினார்.

டி.கே.எஸ். இளங்கோவனும் இதையே கூறுகிறார். "அமித் ஷாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். அவர் கலந்துகொள்வார் அல்லது அவர் சார்பில் வேறு யாராவது தேசியத் தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள்" என்கிறார்.

கருணாநிதியின் அஞ்சலிக் கூட்டத்தில் அமித் ஷாவின் பங்கேற்பு உறுதிசெய்யப்படாத நிலையிலேயே, அரசியல் கூட்டணி தொடர்பான சலசலப்புகளை இந்தச் செய்தி ஏற்படுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்திற்கு அமித் ஷா அழைக்கப்பட்டிருப்பதன் மூலம் இரு கட்சிகளும் நெருங்குகிறதோ என்ற தோற்றத்தையும் ஏற்படுத்தியது.

படத்தின் காப்புரிமை FACEBOOK/MK STALIN

ஆனால் இதை மறுக்கிறார் டி.கே.எஸ். இளங்கோவன். "இதில் அரசியல் எதுவுமே கிடையாது. அ.இ.அ.தி.மு.கவைத் தவிர பிற கட்சிகள் அனைத்தையுமே அழைத்திருக்கிறோம். மாநிலத் தலைவர்கள் நினைவஞ்சலி செலுத்தும் கூட்டத்திற்கு பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அழைக்கப்பட்டிருக்கிறார். அப்போது எழாத சர்ச்சை இப்போது ஏன் எழுகிறதெனத் தெரியவில்லை" என்கிறார் அவர்.

தற்போது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் தி.மு.கவும் நெருக்கமாக உள்ள நிலையில், இந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் குலாம் நபி ஆசாத் பங்கேற்பதாகத் தெரியவந்திருக்கிறது. முன்னதாக தி.மு.கவின் சார்பில் முரசொலி இதழுக்கு பவள விழாவை நடத்தியபோது அதில் ராகுல் காந்தி பங்கேற்றார். அந்தப் பின்னணியில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ராகுல் காந்தி வராததும் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆனால், இந்தச் செய்திகளைப் புறம்தள்ளுகிறார் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான திருநாவுக்கரசர். "இந்த விழாவிற்கு அமித் ஷா அழைக்கப்படுவது குறித்து காங்கிரசிற்கு ஒன்றுமில்லை. அவர் கலைஞரைப் புகழந்துபேச அழைக்கப்பட்டிருக்கிறார். வந்து பேசிவிட்டுப் போகட்டும். இதனால், தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையில் கூட்டணி ஏற்பட்டுவிடுமென்றெல்லாம் சொல்ல முடியாது" என்று ஊடகங்களிடம் தெரிவித்தார் திருநாவுக்கரசர்.

படத்தின் காப்புரிமை Facebook/Aazhi senthil nathan

அரசியல் நாகரீகம் கருதியே அமித் ஷா அழைக்கப்பட்டார் என்ற கருத்தை தன்னாட்சித் தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆழி. செந்தில்நாதன் ஏற்கவில்லை. "கலைஞரின் மறைவுக்கு பா.ஜ.க. தலைவர்கள் வந்தார்கள். அதேபோல வாஜ்பாயி மறைவுக்கு ஸ்டாலின் சென்றார். இதை நாகரீகம் என்று சொல்லலாம். ஆனால், நினைவேந்தல் கூட்டத்திற்கு அமித் ஷா அழைப்படுவதை அரசியல் நாகரீகம் என்று சொல்வதை ஏற்க முடியாது. தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கான சமிக்ஞையைப் போலத்தான் இதைப் பார்க்க முடியும். இப்படி ஒரு சமிக்ஞையை விடுப்பது தி.மு.கவுக்கும் நல்லதல்ல. தேர்தலுக்குப் பிறகு அப்படி முடிவுசெய்தால் அது தமிழகத்திற்கும் நல்லதல்ல" என்கிறார் செந்தில்நாதன்.

தி.மு.க. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது அக்கட்சிக்கு தேர்தலிலும் எதிராகவே முடியும்; மேலும் இம்மாதிரி நிகழ்வுகள் கூட்டணிக் கட்சிகளிடமும் மன வருத்தத்தை ஏற்படுத்தும். தற்போது ஆளும் கட்சிகளின் மீது மனவருத்தமடைந்திருப்பவர்கள் தி.மு.கவுக்கு வாக்களிக்க நினைப்பார்கள். அந்த வாக்குகள் கிடைக்காமல் போகும் என்கிறார் செந்தில்நாதன்.

கருணாநிதி: 95 சுவாரஸ்ய தகவல்கள்

கருணாநிதி விட்டுச்சென்றுள்ள பாரம்பரியம் என்ன?

உண்மையில் நின்று துடித்ததா கருணாநிதி இதயம்? - விடை சொல்லும் மருத்துவர்

கடந்த ஜூலை மாதம் ஊடகங்களிடம் பேசிய தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மாநில சுயாட்சி மாநாடு ஒன்றை தி.மு.க. ஆகஸ்ட் மாதம் நடத்தும் எனத் தெரிவித்திருந்தார். இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் தேர்தலுக்கு முந்தைய அணிகள் குறித்து இந்த மாநாடு சுட்டிக்காட்டுமென்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆகஸ்ட் மாதத் துவக்கத்தில் கருணாநிதி மறைந்து, அவருக்கான நினைவேந்தல் கூட்டம் திட்டமிடப்பட்டுவிட்ட நிலையில், கூட்டாட்சி மாநாடு எப்போது நடத்தப்படும் என்பது தெரியவில்லை.

இதற்கு முன்பாக 1999ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க., பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு தமிழகத்தில் மொத்தமுள்ள 39 இடங்களில் 26 இடங்கள் கிடைத்தன. பாரதீய ஜனதாக் கட்சி நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியது. தி.மு.கவின் முரசொலி மாறன், டி.ஆர். பாலு, ஆ. ராசா ஆகியோர் வாஜ்பேயி தலைமையிலான மத்திய அமைச்சரவையிலும் இடம்பெற்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்