திமுக தலைவர் பதவி: ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்

  • 26 ஆகஸ்ட் 2018

திமுக தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார் மு.க.ஸ்டாலின்.

முன்னதாக, கருணாநிதி சமாதியில் வேட்புமனுவை வைத்து ஆசி பெற்றார்.

அதுபோல, பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இருவரும் அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

இது தொடர்பாக, மதுரையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மு.க அழகிரி, இது தொடர்பாக கருத்து கூற விரும்பவில்லை என்றார்.

மேலும் அவர், இடைத்தேர்தல் வந்தால் நாங்கள் நிச்சயம் வேட்பு மனு தாக்கல் செய்வோம் என்று தெரிவித்தார்.

நாளை அறிவிக்கப்படும்

நாளை மறுநாள் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன்.

கருணாநிதி மறைவால் காலியாக உள்ள தலைவர் பதவிக்கும், ஸ்டாலின் தற்போது வகித்து வரும் பொருளாளர் பதவிக்கும் தேர்தல் நடைபெறும் என்றும் அப்போது தெரிவித்து இருந்தார்.

நாளை மாலை அறிவிப்பு

வேட்புமனுக்களை திரும்பப்பெறுவோர் நாளை பிற்பகல் ஒன்றரை மணிக்குள் பெற்றுக்கொள்ளலாம். நாளை மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

இதுவரை ஸ்டாலினை தவிர வேறு யாரும் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

ஸ்டாலின் போட்டியின்றி தேர்வாகும் பட்சத்தில், நாளை மாலையே தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்படுவார் என தெரிகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்