மு.க. ஸ்டாலின்: திமுக தலைவர் கடந்து வந்த பாதை - பள்ளிப் பருவம் முதல் தேர்தல் களம் வரை

  • சிவக்குமார் உலகநாதன்
  • பிபிசி தமிழ்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்து வந்த பாதை

பட மூலாதாரம், Twitter

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினம் இன்று. அவர் கடந்த வந்த அரசியல் பாதை குறித்து விவரிக்கிறது இக்கட்டுரை.

கடந்த 50 ஆண்டுகளாக திமுகவின் தலைவராக இருந்த கருணாநிதி மறைந்த சூழலில், அக்கட்சியின் இரண்டாவது தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார்.

ஸ்டாலினின் அரசியல் பயணம் குறித்த பார்வை

மறைந்த கருணாநிதியின் உடலை சென்னை மெரினாவில் நல்லடக்கம் செய்ய அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு வந்தவுடன், ராஜாஜி அரங்கில் கருணாநிதியின் உடலுக்கு அருகே இருந்த மு. க. ஸ்டாலின் கண்கலங்கி உணர்ச்சிவசப்பட்ட காட்சி, அவரின் இதுவரை பார்க்கப்படாத இன்னொரு பிம்பத்தை தமிழகத்துக்கு வெளிப்படுத்தியது.

கருணாநிதி இறந்தது முதல் அவரது உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது வரை திமுக தொண்டர்கள் மற்றும் மக்களிடையே ஒரு பதற்றமான சூழல் நிலவியது.

இதனை கடந்து திமுக தொண்டர்கள் மற்றும் மக்களிடையே அமைதி பரவ பெரும் பங்காற்றிய ஸ்டாலின், மறைந்த தனது தந்தையும், தலைவருமான கருணாநிதியின் இறுதிச்சடங்கு எவ்வித பிரச்சனையுமின்றி நடைபெற வேண்டும் என்பதில்தான் அதிகம் கவனம் செலுத்தினார்.

''ஒரே ஒரு முறை, அப்பா என்று அழைத்துக் கொள்ளட்டுமா?''

கருணாநிதி மறைந்த நாளில் "தலைவரே என நான் உச்சரித்ததுதான் என் வாழ்நாளில் அதிகம். அதனால் ஒரே ஒரு முறை, இப்போது 'அப்பா' என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே? என்று ஸ்டாலின் எழுதிய உருக்கமான கடிதமும், மெரினாவில் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் நிலவிய நிலையில், தொண்டர்களை அமைதி காத்திடுமாறு ஸ்டாலின் விடுத்த அறிக்கையும், இறுதிச்சடங்கின்போது கட்சியினரை அவர் வழிநடத்திய பாங்கும் ஸ்டாலின் மீதான மக்களின் பார்வையில் பெரும் அளவில் மாற்றம் செய்துள்ளது.

பட மூலாதாரம், FACEBOOK/MK STALIN

தமிழக அரசியலில் நீண்ட காலமாக மறுக்கமுடியாத நபராக திகழ்ந்த கருணாநிதியின் மகன் என்பதுதான் ஸ்டாலினின் முதல் அடையாளம். ஆனால், அது ஆரம்பம்தான்.

மிசா சட்டத்தின் கீழ் 1976-இல் கைது செய்யப்பட்டதும், அப்போது அவர் சிறையில் நடத்தப்பட்டவிதமும்தான் மு.க. ஸ்டாலினுக்கு திமுகவினர் மற்றும் மக்கள் மத்தியில் அறிமுகமும், மதிப்பும் உண்டாக காரணமாக அமைந்தது.

இரு ஆண்டுகளுக்குமுன், மிசா சட்டத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பேசிய ஸ்டாலின், ''சென்னை சிறைச்சாலையில் நாங்கள் அடைக்கப்பட்டிருந்தோம். சிறையில் எங்கள் மீது தடியடி நடத்தினர். அதுவும் யாரை வைத்து என்று கேட்டால், சிறையிலிருக்கக்கூடிய ஆயுள் கைதிகளை வைத்து நடத்தினர். திமுகவிலிருந்து விலகிவிட்டோம், எங்களுக்கும் திமுகவிற்கும் சம்மந்தம் இல்லை என்று எழுதிக் கொடுக்க வேண்டும், கையெழுத்துப் போட வேண்டும் என மிரட்டினார்கள். ஆனால், அந்த மிரட்டல், அச்சுறுத்தலுக்கு எல்லாம் நாங்கள் அஞ்சவில்லை'' என்று நினைவுகூர்ந்தார்.

திமுக தலைவர் மு. கருணாநிதி கடந்த 7ஆம் தேதி காலமான நிலையில், அக்கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் வரும் 14ஆம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதிக்கு இரங்கல் செலுத்துவதே இந்தக் கூட்டத்தின் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி காலமான நிலையில், மு.க. ஸ்டாலின் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவாரா என்ற கேள்வி தமிழக அரசியல் களத்தில் அதிகம் விவாதிக்கப்படக்கூடிய ஒன்றாக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக பணியாற்றிவரும் மு.க.ஸ்டாலின் கடந்து வந்த அரசியல் பயணம் பல சவால்களும் சோதனைகளும் நிறைந்தவை.

திமுகவின் முதல் செயல் தலைவர்

இதற்கு முன்பு, திமுகவில் செயல் தலைவர் பதவி இல்லாத நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அக்கட்சியின் முதல் செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.

1970-களில், மிசா அவசரச் சட்டத்தால் கைது செய்யப்பட்டு சிறை சென்ற ஸ்டாலின், தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றான திமுகவின் செயல் தலைவராக தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு, அவர் திமுகவில் பல பதவிகளை வகித்துள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் சென்னை மாநகராட்சி மேயராகவும், தமிழக அமைச்சராகவும், துணை முதல்வராகவும் மு. க. ஸ்டாலின் பதவி வகித்துள்ளார்.

பட மூலாதாரம், Twitter

பள்ளிப் பருவத்திலேயே அரசியல் பணி

தனது பள்ளிப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடு காட்டிய மு.க. ஸ்டாலின், தனது வீடு அமைந்திருந்த சென்னை கோபாலபுரம் பகுதியில் திமுக பிரதிநிதியாக செயல்பட்டார். அப்பகுதியில் இளைஞர் திமுக என்ற அமைப்பை அவர் ஏற்படுத்தினார்.

1970-களில் திமுக வட்டப் பிரதிநிதியாகவும், மாமன்ற பிரதிநிதியாகவும் இருந்த மு.க. ஸ்டாலின், இளைஞர்களை ஒருங்கிணைத்து கட்சி கூட்டங்களில் பங்கேற்றத்துடன் கட்சி பிரசாரத்திலும் ஈடுபட்டார்.

பட மூலாதாரம், FACEBOOK/MK STALIN

பின்னர், 1980-இல் மதுரையில் நடந்த திமுக கூட்டத்தில் இளைஞரணி அமைப்பை திமுக தலைவர் கருணாநிதி துவக்கினார்.

ஆரம்பத்தில் திமுக இளைஞரணியின் அமைப்பாளராகத் செயல்பட்ட மு.க. ஸ்டாலின் , பின்னர் நீண்ட காலமாக திமுகவின் இளைஞரணி செயலாளராக செயல்பட்டார். கடந்த 1984-இல் மு.க. ஸ்டாலின் திமுகவின் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார்.

சிறிது காலம் திமுகவின் துணை பொதுச் செயலாளராக பதவி வகித்த ஸ்டாலின், 2008-இல் திமுகவின் பொருளாளராக நியமனம் செய்யப்பட்டார்.

மேலும், கட்சியின் இளைஞரணி செயலாளராக, பொருளாளராக, துணை பொது செயலாளராக, செயல் தலைவராக என பல நிலைகளிலும் ஸ்டாலின் சிறப்பாக பங்காற்றி கட்சியினரின் ஆதரவை பல சந்தர்ப்பங்களில் பெற்றுள்ளார்.

மு. க. ஸ்டாலின் கண்ட தேர்தல் களங்கள்

கடந்த 1984-ஆம் ஆண்டில், முதல்முறையாக ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் களமிறங்கிய மு.க. ஸ்டாலின் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

பட மூலாதாரம், MKSTALIN

அதன் பின்னர், 1989, 1996, 2001 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு, மு.க. ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மு.க. ஸ்டாலின் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

2011-ஆம் ஆண்டிலும், கடந்த ஆண்டு (2016) நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு மு. க. ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்

தற்போது தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக மு. க. ஸ்டாலின் செயலாற்றி வருகிறார்.

சென்னை மாநகர மேயர்

பட மூலாதாரம், Twitter

நீண்ட இடைவெளிக்கு பிறகு, 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக உள்ளாட்சி தேர்தலில், சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக திமுகவின் சார்பில் களமிறங்கி வெற்றி பெற்ற மு.க. ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராக பதவி வகித்தார்.

கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரை மாநகராட்சி மேயராக மு.க. ஸ்டாலின் இருந்த போது, சென்னையில் பல மேம்பாலங்கள் கட்டப்பட்டன.

2001-ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் மீண்டும் சென்னை மாநகராட்சி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதைய அதிமுக அரசு கொண்டு வந்த 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற சட்டத்தால் தனது மேயர் பதவியை துறந்து, ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டசபை உறுப்பினராக தொடர்ந்தார்.

பட மூலாதாரம், RAVEENDRAN

ஸ்டாலினின் நிர்வாகத் திறமை

2006-ஆம் ஆண்டில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த போது, உள்ளாட்சித்துறை அமைச்சராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். 2006 முதல் 2011 வரை அவர் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அமைச்சராகவும், மேயராகவும் பணியாற்றிய காலத்தில் ஸ்டாலினின் நிர்வாகத்திறமை அவருக்கு பாராட்டுகளை பெற்றுத்தந்தது. சென்னை நகரின் உள்கட்டமைப்பு மற்றும் சாலை வசதிகள் தொடர்பாக அவர் எடுத்த நடவடிக்கைகள் பலவும் அவரின் நிர்வாக திறமைக்கு எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்டப்பட்டது.

அதே வேளையில், கடந்த 2001-ஆம் ஆண்டில், சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி, சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். ஆனால், இது தொடர்பாக அரசு தரப்பில் எந்த குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை.

முதல் துணை முதல்வர்

கடந்த 2009-ஆம் ஆண்டு, தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக துணை முதல்வர் பதவியை மு.க. ஸ்டாலின் வகித்தார்.

கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2016 தமிழக சட்டமன்ற தேர்தல்களில், திமுகவின் தேர்தல் கூட்டணியை முடிவு செய்ததிலும், பல வேட்பளார்களை முடிவு செய்ததிலும் ஸ்டாலின் பெரும் பங்காற்றியதாக கூறப்படுகிறது.

ஸ்டாலின் எதிர்கொள்ளும் விமர்சனம் என்ன?

கருணாநிதியின் எழுத்து மற்றும் பேச்சாற்றல் ஆகியவை ஸ்டாலினுடன் ஒப்பிடப்படும். இதுவே அவர் அடிக்கடி எதிர்கொள்ளும் விமர்சனமாக அமையும்.

ஒவ்வொரு தலைவருக்கும் பேச்சு, எழுத்து, தலைமை என பல அம்சங்களில் தனி பாணி இருக்கும் என்றாலும், தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே பேச்சு மற்றும் எழுத்து ஆகியவற்றுக்கு உதாரணமாக கூறப்படும் திமுகவின் அடுத்த தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்த விமர்சனம் மேலும் வலுப்பெறலாம்.

2015இல் அவர் மேற்கொண்ட நமக்கு நாமே சுற்றுப்பயணம், ஸ்டாலினுக்கு வரவேற்பையும், விமர்சனங்களையும் சரிசமமாக பெற்றுத்தந்தது எனலாம்.

பட மூலாதாரம், FACEBOOK/MK STALIN

வண்ண வண்ண ஆடைகள் அணிந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தியது, கட்சியினரின் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்தது, சாலையோர கடைகளில் தேநீர் அருந்தியது என அவர் நமக்கு நாமே சுற்றுப்பயணத்தில் இயல்பாக நடந்து கொண்டது கட்சியினரிடம் வரவேற்பை பெற்றபோதிலும், அதுவே எதிர்ப்பாளர்கள் மற்றும் விமர்சகர்களின் பரிகாசத்தை அதிகரித்தது.

ஆரம்ப காலம் முதல் கட்சி முன்னணியினர்களில் கருணாநிதிக்கு ஆலோசனை தரும் அளவு நெருக்கமானவர்களாக அன்பில் தர்மலிங்கம், மன்னை நாராயணசாமி, அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் என பலர் உண்டு. இவர்கள் அனைவரும் அவருக்கு நீண்ட காலமாக ஆதரவாக விளங்கியவர்கள்.

ஆனால், ஸ்டாலினுக்கு அத்தகைய ஆலோசனை வழங்கும் அளவுக்கு தற்போது அனுபவம் மற்றும் திறன் படைத்த தலைவர்கள் யார், அவர்கள் ஸ்டாலினின் உள்வட்டத்தில் இருப்பவர்களா, அவர்களது கருத்துக்களை ஸ்டாலின் எந்த அளவு ஏற்றுக்கொண்டு செயல்படுவார், அதையும் தாண்டி எந்த ஒரு விடயத்திலும் தனக்குள் பகுப்பாய்வு செய்து எப்படி செயல்படுவார் என்பதையெல்லாம் இனித்தான் கவனிக்க வேண்டும்.

மு. க. அழகிரியுடன் கருத்து வேறுபாடு

ஸ்டாலினுக்கும், அவருடைய சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் தென் மண்டல செயலாளருமான மு. க. அழகிரிக்கும் பலத்த கருத்து வேற்றுமை ஏற்பட்டதால், கடந்த காலங்களில் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தற்போது மு. க. அழகிரி திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN

இனி ஸ்டாலின்?

கருணாநிதியின் மறைவுக்குப்பின், ஸ்டாலின் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அவர் மீதான எதிர்பார்ப்பு திமுகவில் மட்டுமல்ல அரசியல் களத்திலும் இனி வரும் காலங்களில் கூடுதலாகவே இருக்கும்.

ஜெயலலிதா காலமான சூழலில், அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்பு , பிளவு ஆகியவற்றை உன்னிப்பாக கவனித்துள்ள பிற கட்சிகள், கருணாநிதிக்கு பிறகு திமுகவில் என்ன நடக்கும் என்பதை மிக கூர்ந்து கவனிக்கும்.

முன்பு மு.க. அழகிரியுடன் ஸ்டாலின் கொண்டிருந்த கருத்து வேறுபாடுகள் இனிவரும் நாட்களில் கட்சியில் மேலும் விரிசலை அதிகரிக்குமா என்பதும், கருணாநிதியை போல கட்சியினரையும், கூட்டணி கட்சியினரையும் ஸ்டாலின் இயல்பாக அரவணைத்து செல்வாரா என்பதும் அரசியல் பார்வையாளர்களின் தற்போதைய எதிர்பார்ப்பு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: