"காவி வண்ணம் தீட்டும் நரேந்திர மோதி அரசுக்கு பாடம் புகட்டுவோம்": மு.க. ஸ்டாலின்

மு.க. ஸ்டாலின்

பட மூலாதாரம், TWITTER

இந்தியா முழுவதும் காவி வண்ணம் தீட்டும் நரேந்திர மோதி அரசுக்குப் பாடம் புகட்டுவோம் என தி.மு.க. பொதுக் குழுவில் அக்கட்சியின் புதிய தலைவராகப் பதவியேற்றிருக்கும் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார். கருணாநிதிக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி மறைந்துவிட்ட நிலையில், அக்கட்சியின் புதிய தலைவரையும் பொருளாளரையும் தேர்வுசெய்வதற்கு வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தவர்கள் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் நேற்று முடிந்த நிலையில், இன்று அக்கட்சியின் பொதுக் குழு சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கூடியது.

இந்தக் கூட்டத்தில் பொதுக் குழு உறுப்பினர்கள் தவிர, சிறப்பு அழைப்பாளர்களாகவும் பெரும் எண்ணிக்கையில் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

சமீபத்தில் காலமான கட்சித் தலைவர் மு. கருணாநிதி, வாஜ்பேயி, சோம்நாத் சாட்டர்ஜி உள்ளிட்ட தலைவர்களுக்கும், கடந்த ஓராண்டில் மறைந்த கட்சியினர், பிற குறிப்பிடத்தக்கவர்களுக்கும் இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்குப் பிறகு, கருணாநிதியின் மறைவை ஒட்டி, அதிர்ச்சியில் காலமான தி.மு.கவினர் 248 பேருக்கு தலா 2 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்குப் பிறகு, மு. கருணாநிதியின் சாதனைகளை வரிசைப்படுத்தி, அவருக்கு மத்திய அரசு பாரத் ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தி.மு.கவின் தணிக்கைக்குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதன் பிறகு கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் தலைவர் பதவிக்கு மு.க. ஸ்டாலினைத் தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவர் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார். மு.க. ஸ்டாலின் தலைவராக அறிவிக்கப்பட்டதும் கூடியிருந்த தொண்டர்கள் அறிவாலயம் முன்பாக வெடி வெடித்தும் இனிப்புகளைக் கொடுத்தும் கொண்டாடினர்.

இதன் பிறகு துரைமுருகன் பொருளாளராகவும் முறைப்படி தேர்வுசெய்யப்பட்டதாக அன்பழகன் அறிவித்தார். இதன் பிறகு 16 தலைவர்கள் புதிய தலைவருக்கும் பொருளாளருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

துரைமுருகன் பேச்சுக்கு ஆரவாரம்

அப்போது பேசிய மகளிரணியின் செயலாளர் கனிமொழி, தனது பேச்சின் துவக்கத்திலேயே புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட பொருளாளர் துரைமுருகனுக்கு வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார்.

"பழைய பொருளாளர் (மு.க. ஸ்டாலின்) போல அல்லாமல் மகளிரணியையும் நீங்கள் பொருளாதார ரீதியில் காக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார். கருணாநிதி மறைந்த சமயத்தில், அவரை அடக்கம் செய்ய தமிழக அரசு இடம் மறுத்துவிட்ட நிலையில், நிகழ்ந்த சம்பவங்களை கனிமொழி நினைவுகூர்ந்தார். மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நிலை ஏற்ற இறக்கமாக இருந்த நிலையில், அண்ணாவுக்கு அருகில் அவரது உடலை அடக்கம் செய்ய முடியுமா என்ற கவலை மட்டுமே இருந்தது என்பதைக் குறிப்பிட்டார். அந்த நேரத்திலும் நிலைமையை மிகப் பொறுமையாகவும் சட்ட ரீதியாகவும் கையாண்டதாகக் குறிப்பிட்டார்.

இதற்குப் பிறகு கட்சியின் பொருளாளரான துரைமுருகன் பேசும்போது, கருணாநிதி சிவப்புக் கம்பளத்தில் நடந்து வந்து பதவியேற்கவில்லை; ஏராளமான எதிர்ப்பைத் தாண்டி தலைவரானார்; ஆனால், மு.க. ஸ்டாலின் லட்சக்கணக்கானவர்களைக் கொண்ட இந்த இயக்கத்தில் சிறு எதிர்ப்புமின்றி தலைவராகியிருக்கிறார் என்று குறிப்பிட்டார். 100 ஆண்டுப் பாரம்பரியத்தைக் கொண்ட திராவிட இயக்க வரலாற்றில் ஒரு புதிய கட்டம் துவங்கியிருப்பதாகவும் துரைமுருகன் கூறினார்.

கண்கலங்கிய மு. க. ஸ்டாலின்

பொருளாளராக பதவியேற்றுள்ள தன்னைப் பற்றி தயாநிதி மாறன் பேசியதைச் சுட்டிக்காட்டிய துரைமுருகன், இந்தப் பொதுக்குழுவில் இருப்பவர்களிலேயே மிகப் பெரிய பணக்காரரான சன் குழுமத்தைச் சேர்ந்த தயாநிதி மாறன் பெரிய அளவிலான தொகையை கட்சிக்கு அளிப்பார் என்று கூறினார். துரைமுருகனின் இந்தப் பேச்சை பொதுக்குழுக் கூட்டத்தில் இருந்தவர்களும் கேட்டுக்கொண்டிருந்தவர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

இதற்குப் பிறகு பேச வந்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னை முதன் முதலில் அடுத்த தலைவராக வரக்கூடியவர் என்று அடையாளம் காட்டியவர் பொதுச்செயலாளர் அன்பழகன் என்று கூறினார். அடுத்ததாக மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேச ஆரம்பித்தார் ஸ்டாலின்.

சமத்துவத்தையும் சமூக நீதியையும் பகுத்தறிவையும் சிதைக்கக்கூடிய மத்திய அரசைப் பார்க்கும்போது வேதனை ஏற்படுவதாகவும் கல்வி, கலை, இலக்கியம், மதம் ஆகியவற்றின் அடிப்படைகளை மதவெறியால் அழிக்க மத்திய அரசு செயல்படுவதாகவும் நீதித் துறை, கல்வித் துறை, ஆளுநர்களைத் தேர்வுசெய்யும் முறை ஆகியவற்றில் மக்களாட்சியின் மாண்புகள் சிதைக்கப்படுவதாகவும் கூறிய ஸ்டாலின், தற்போதைய மாநில அரசு தமிழக மக்களின் நலன்களை அடகுவைத்துவிட்டதாகவும் திருடர்கள் கையிலிருந்து தமிழகத்தை விடுவிப்பதுதான் முதல் கடமை என்றும் கூறினார்.

பட மூலாதாரம், படத்தின் காப்புரிமைFACEBOOK/MK STALIN

"இன்று நீங்கள் கேட்கும், பார்க்கும் மு.க. ஸ்டாலினாகிய நான் இன்று புதிதாகப் பிறந்திருக்கிறேன்" என்று குறிப்பிட்ட ஸ்டாலின் மதச்சாயம் பூசும் கட்சிகளை எதிர்ப்பதாகவும் ஜாதிப் பாகுபாடு இன்றி அனைவரையும் மதிப்பதாகவும் கடவுள் நம்பிக்கையை எதிர்க்கவில்லையென்றும் அதே நேரம், பிறரது நம்பிக்கையை மதிப்பதாகவும் கூறிய ஸ்டாலின், இந்தியா முழுவதும் காவி வண்ணம் பூசும் மோடி அரசுக்குப் பாடம் புகட்டவும் தமிழக அரசை தூக்கியெறியவும் ஒன்றாகச் செல்வோம் என்று கூறினார்.

பேசும்போது பல இடங்களில் மு.க. ஸ்டாலின் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.

பொதுக் குழுக் கூட்டம் முடிவடைந்த பிறகு மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்கள் அண்ணா, கருணாநிதி, பெரியார் நினைவிடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :