கைது செய்யப்பட்ட 5 செயற்பாட்டாளர்களின் பின்னணி என்ன?

  • 29 ஆகஸ்ட் 2018
Image caption சுதா பரத்வாஜ்

நாடுமுழுவதுமுள்ள பல்வேறு இடங்களில் புனே காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனையை நடத்தினர். இந்த சோதனைகள் நடத்தப்பட்டதற்கான பின்னணி குறித்த தகவல்கள் இன்னும் தெளிவுபடுத்தப்படாத நிலையில், இது கடந்த ஜனவரி மாதம் மகாராஷ்டிராவின் பீமா கோரேகான் கிராமத்தில் நடந்த வன்முறை பற்றிய விசாரணையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படுவதாக புனே காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டின் தொடக்கத்தில் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட வகுப்புவாத வன்முறை தொடர்பாக ஐந்து பிரபல செயற்பாட்டாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, வரவர ராவ், அருண் பெரேரா, வெர்னோன் கோன்சல்வேஸ் ஆகிய நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் ஐந்து செயற்பாட்டாளர்கள் தங்களது வீடுகளில் செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கைதுசெய்யப்பட்ட செயற்பாட்டாளர்களின் பின்னணி குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.

சுதா பரத்வாஜ்

முன்னதாக, (செவ்வாய்க்கிழமை) காலை பிரபல வழக்கறிஞரும், செயற்பாட்டாளருமான சுதா பரத்வாஜ், அவரது வீட்டிலிருந்து ஹாரியனாவிலுள்ள சுரஜ்குண்ட் காவல்நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

புனே போலீசாரால் அழைத்துச்செல்லப்பட்ட தனது தாயார், பீப்பிள்ஸ் யூனியன் பார் சிவில் லிபர்டீஸ் என்ற அமைப்பில் பணிபுரிந்து வந்ததாக அவரது மகள் அனுஷா பிபிசியிடம் கூறினார்.

டெல்லியிலுள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் இவர் வருகை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும், தொழிலாளர் நலன் சார்ந்த வழக்குகளில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்தார்.

பழங்குடியினர் உரிமைகள், நிலம் கையகப்படுத்துதல் மட்டுமல்லாமல் சட்டம் மற்றும் வறுமை போன்றவற்றிலும் இவர் கருத்தரங்குகள் மற்றும் பாடங்களை நடத்தினார்.

மனித உரிமைகள் வழக்கறிஞராக பல்வேறு ஆட்கொணர்வு வழக்குகள், பழங்குடியினரை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட போலி என்கவுண்டர்கள் வழக்குகளில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். மேலும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் நடந்த பல்வேறு விசாரணைகளிலும் ஆஜராகியுள்ளார்.

இவர் சத்தீஸ்கரிலுள்ள ராய்கர் பகுதியில் வசித்து வருகிறார்.

கவுதம் நவ்லகா

மூத்த செயற்பாட்டாளரான கவுதம் நவ்லகா சிவில் உரிமைகள், மனித உரிமை மற்றும் ஜனநாயக உரிமைகள் சார்ந்த விடயங்களில் பணியாற்றியுள்ளார்.

இங்கிலிஷ் லாங்குவேஜ் அண்ட் பொலிடிகல் வீக்லி என்ற இதழில் தலையங்க ஆசிரியராக உள்ளார். பீப்பிள்ஸ் யூனியன் பார் டெமோகிராடிக் ரைட்ஸ் (பியுடிஆர்) என்ற ஜனநாயக உரிமைகள் சார்ந்த குழுவிலும் செயல்பட்டு வருகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கவுதம் நவ்லகா

பியுடிஆர் அமைப்பின் செயலாளராக பலமுறை பணியாற்றியுள்ள நவ்லகா இன்டர்நேஷனல் பீப்பிள்ஸ் அமைப்பின் மனித உரிமைகள் பிரிவின் நடத்தாளராக காஷ்மீரில் பணியாற்றியுள்ளார்.

காஷ்மீர் மற்றும் சத்தீஸ்கரில் பல்வேறு உண்மை கண்டறியும் திட்டங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். காஷ்மீரில் பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஆதரவளித்த கவுதமுக்கு, கடந்த 2011ஆம் ஆண்டு ஸ்ரீநகரில் நுழைவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

கவுதம் கிட்டத்தட்ட நான்கு தசாப்தகாலமாக தங்களது அமைப்புடன் இணைந்து தொழிலாளர், தலித், பழங்குடிகள் தொடர்பான பிரச்சனைகளில் இணைந்து செயல்பட்டு வருவதாக பியுடிஆர் அமைப்பை சேர்ந்த ஹரிஷ் தவான் பிபிசியிடம் கூறினார்.

"காஷ்மீர் பற்றிய அவரது ஆழ்ந்த புரிதலும், ஆய்வும் ஒரு மிகப் பெரிய பங்களிப்பு. எப்போதெல்லாம் காஷ்மீரில் பொதுமக்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்துகிறதோ அப்போதெல்லாம் அவர் அங்கு பார்வையிடுவது வழக்கம். சத்தீஸ்கர், ஜார்கண்டிலுள்ள மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கு காஷ்மீரில் செயல்படுத்தப்பட்ட அதே பணியில் திட்டமிடப்பட்டத்தை அவர் கண்டறிந்தார்" என்று அவர் மேலும் கூறினார்.

நவ்லகாவின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்து பேசிய தவான், "இது விவேகமான குரல்கள் மற்றும் எதிர்ப்பை நசுக்கும் முயற்சியாகும். இதை நாம் துணிச்சலுடன் எதிர்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

வரவர ராவ்

புனே போலீசாரால் கைது செய்யப்பட்ட மற்றொருவரான தெலங்கானாவை சேர்ந்த பெண்டியாலா வரவர ராவ் இடதுசாரி கருத்துகளையும் கொண்ட எழுத்தாளர், கவிஞர் மற்றும் 'விப்லாவா ரட்சயாட்ல சங்கம்' என்னும் எழுத்தாளர்கள் அமைப்பின் நிறுவனராவார்.

இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது இவர் மீது பல சதி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், பின்பு அவை திரும்ப பெறப்பட்டன.

படத்தின் காப்புரிமை SUKHCHARAN PREET
Image caption வரவர ராவ்

ராம்நகர், செகந்திராபாத் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் நடைபெற்ற மோதல் சம்பவங்கள் குறித்த வழக்குகளில் இவர் விசாரிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2002ஆம் ஆண்டு ஆந்திரப்பிரதேசத்தில் மாவோயிஸ்டுகளின் வன்முறையை நிறுத்துவதற்காக சந்திரபாபு தலைமையிலான அப்போதைய அரசாங்கம் ஏற்படுத்திய இருதரப்பு பேச்சுவார்த்தையில் இவர் கட்டார் என்பவரோடு இணைந்து மத்தியஸ்தராக செயல்பட்டார்.

ஹைதராபாத்திலுள்ள இவரது மகள் வீட்டிலும் புனே காவல்துறையினர் சோதனை நடத்தியதாக இவரது உறவினரும், பத்திரிக்கையாளருமான வேணுகோபால் கூறுகிறார்.

அருண் பெரேரா

மகாராஷ்டிராவின் பாந்த்ராவில் பிறந்த அருண் பெரேரா மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிகிறார். சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின்கீழ் இவர் நான்கு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மேலும், கடந்த 2012ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவதற்கு முன்பு இவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டிருந்தது. இவர் 'இந்தியன் அஸோசியேஷன் ஆஃப் பீப்பிள்ஸ் லாயர்ஸ்' (ஐஏபிஎல்) அமைப்பில் பொருளாளராக உள்ளார்.

பீமா கோரேகான் வழக்கு தொடர்பாக கடந்த ஜூன் மாதம் தலித் உரிமை செயற்பாட்டாளர் சுதிர் தவாலே கைதுசெய்யப்பட்ட இவர் எதிர்ப்பு குரல் எழுப்பினார்.

வன்முறை வெடித்த பகுதிகளான கோரேகான் மற்றும் ஜோகேஸ்வரியில் கடந்த 1993ஆம் ஆண்டு பணியாற்றியபோது இவருக்கு மார்க்ஸிஸ்ட் கொள்கைகள் மீது விருப்பம் ஏற்பட தொடங்கியது.

அதன் பிறகு இவர் முழுநேர செயற்பாட்டாளராக தேஷ்பக்தி யுவ மஞ்ச் என்ற அமைப்பில் இணைந்தார். இந்த அமைப்பு பின்னாளில் அந்த மாநிலத்தின் மாவோயிஸ்ட் அமைப்பாக கருதப்பட்டது.

தனிமை சிறையில் அடைக்கப்பட்டு, சித்தரவதை செய்யப்பட்ட தனது சிறை அனுபவத்தை மையமாக கொண்டு இவர் எழுதிய "கலர்ஸ் ஆஃப் த கேஜ்: ஏ ப்ரிசன் மேமோயர்" என்ற புத்தகம் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

வெர்னோன் கோன்சல்வேஸ்

வெர்னோன் கோன்சல்வேஸ் மும்பையை சேர்ந்த எழுத்தாளர் மற்றும் செயற்பாட்டாளராவார். மும்பை பல்கலைக்கழகத்தில் படித்த இவர், அந்நகரத்திலுள்ள பல்வேறு கல்லூரிகளில் வருகை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் இவர் கடந்த 2007ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டார்.

படத்தின் காப்புரிமை GONZALVIS
Image caption வெர்னோன் கோன்சல்வேஸ்

சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் இவருக்கு நாக்பூர் மாவட்ட நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டாலும், ஏற்கனவே தண்டனை காலத்தை சிறையில் கழித்ததால் கடந்த 2013ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். இவரது மனைவி சூசன் ஆப்ரஹாம் மனித உரிமை வழக்கறிஞராவார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்