‘என்னை தற்கொலைக்கு தூண்டுகிறார்கள்’ - பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் கதறி அழுத பேராசிரியர்

  • 29 ஆகஸ்ட் 2018

இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.

இந்து தமிழ்: 'பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் தற்கொலைக்கு தூண்டுகிறார்கள்'

படத்தின் காப்புரிமை Facebook

அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள உதவிப் பேராசிரியர் முருகன், சிறையில் அடைத்து வைத்து தற்கொலைக்குத் தூண்டி எனது வாழ்க்கையை முடிக்கப் பார்க்கிறார்கள் என நீதிமன்ற வளாகத்தில் கதறினார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

"அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாகப் பணிபுரிந்தவர் நிர்மலாதேவி. இவர் மொபைல் போனில் மாணவிகளிடம் பாலியல்ரீதியில் பேசியதாக ஏப்ரல் 16-ம் தேதி கைது செய்யப்பட்டார்.இவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை காமராசர் பல்கலைக்கழக மேலாண்மைத் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய முருகன், முனைவர் பட்ட ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த வழக்கு விசாரணை விருதுநகரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெறுகிறது.

நீதிமன்றக் காவல் நீட்டிப்புக்காக நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் விருதுநகர் 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நேற்று காலை ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களது காவலை செப்டம்பர் 11-ம் தேதி வரை நீட்டித்து நீதித்துறை நடுவர் திலகேஸ்வரி உத்தரவிட்டார். ஆனால், அன்றைய தினம் இமானுவேல் சேகரன் நினைவு தினம் என்பதால் போலீஸார் பாதுகாப்புப் பணிக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையை நீதித் துறை நடுவரிடம் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து செப்டம்பர் 10-ம் தேதி வரை 3 பேருக்கும் காவல் நீட்டிப்பு செய்து நீதித் துறை நடுவர் திலகேஸ்வரி உத்தரவிட்டார்.

பின்னர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த முருகனை அவரது தாய் சோலையம்மாள், சகோதரி ஆகியோர் சந்தித்து கதறி அழுதனர். அப்போது, தான் குற்றம் செய்யவில்லை. சாமியை வேண்டிக் கொள்ளுங்கள் என்றார். மேலும், "நான் 120 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். இது மனித உரிமை மீறல். நான் குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்க எனக்கு நீதிமன்றத்தில் வாதாட வாய்ப்பு வழங்க வேண்டும். சிறையில் என்னை அடைத்து வைத்து தற்கொலைக்குத் தூண்டி எனது வாழ்க்கையை முடிக்கப் பார்க்கிறார்கள்" என ஆவேசத்துடன் கூறினார். இதனால், விருதுநகர் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து மூவரும் மதுரைக்கு அழைத்துச் செல்லப் பட்டு மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தினமணி: 'விண்வெளிக்கு மூவரை அனுப்புகிறது இந்தியா'

'ககன்யான்' திட்டத்தின் கீழ், வீராங்கனை உள்பட 3 பேரை விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

படத்தின் காப்புரிமை Getty Images

ககன்யான்' திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் பயன்படுத்தப்படும். வீராங்கனை உள்பட 3 பேரை விண்வெளிக்கு அனுப்பலாம் என்று திட்டமிட்டுள்ளோம்.இவர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன்பு, ககன்யான்' திட்டம் இரண்டு முறை ஆளில்லாமல் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டம் 2022-ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்வெளியில் வீரர்கள் 7 நாள்கள் வரை இருப்பார்கள். இவர்கள் செல்லும் விண்கலம் புவி தாழ் வட்டபாதையின் 300-400 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்படும். இந்த விண்வெளித் திட்டத்தை செயல்படுத்த ரூ.10ஆயிரம் கோடி வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அணுசக்தி ஆற்றல் மற்றும் விண்வெளி துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

படத்தின் காப்புரிமை இந்து தமிழ்

தினத்தந்தி: 'சாதி-மத அமைப்புகளை சேர்ந்தவர்கள் உறுப்பினராக தடை: ரஜினிகாந்த்'

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. அதன்படி மன்ற நிர்வாகிகள் இனி வாகனங்களில் கொடியை நிரந்தரமாக பயன்படுத்த கூடாது என்றும், சாதி-மத அமைப்புகளை சேர்ந்தவர்கள் மன்றத்தில் உறுப்பினராக முடியாது என்றும் ரஜினிகாந்த் புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

படத்தின் காப்புரிமை Getty Images

"மன்ற நிர்வாகிகளோ, உறுப்பினர்களோ தங்களின் வாகனங்களில் மன்ற கொடியை நிரந்தரமாக பொருத்தக்கூடாது.மன்ற நிகழ்ச்சிகள், கூட்டங்கள், மாநாடுகள் நடக்கும் போது மன்ற உறுப்பினர்கள் பிரசாரத்திற்காக வாகனங்களில் பயன்படுத்தலாம். நிகழ்ச்சி முடிந்த பிறகு மன்றக்கொடிகளை வாகனங்களில் இருந்து அகற்றிட வேண்டும். மன்றக்கொடி துணியால் மட்டுமே தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். இளைஞர் அணியில் 35 வயதுக்குட்பட்ட இளைஞர் கள் மற்றும் இளம்பெண்களே இருக்க வேண்டும்.சாதி, மத சம்பந்தப்பட்ட சங்கங்களிலோ அமைப்புகளிலோ உறுப்பினராக உள்ளவர்கள் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினராக சேர அனுமதியில்லை.மன்ற பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்வு, நியமனம், நீக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலைமையின் முடிவே இறுதியானது.

மன்ற கட்டுப்பாட்டை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தீவிர குற்ற நடவடிக்கை புகார் எழுந்தால் சம்பந்தப்பட்ட உறுப்பினர் உடனடியாக தற்காலிக நீக்கம் செய்யப்படுவார். குற்றம் நிரூபணமானால் அவர் மன்றத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்.ஒழுங்கு நடவடிக்கை, பரிந்துரை மற்றும் நடவடிக்கைகள் என அனைத்திலுமே ரகசியம் காக்கப்பட வேண்டும். தலைமையின் அறிவுறுத்தல் இல்லாமல் ஊடகங்களில் இதுகுறித்து கருத்து சொல்லக்கூடாது.ஒரு குடும்பத்தில் ஒரு உறுப்பினருக்கு மட்டுமே பொறுப்போ அல்லது பதவியோ வழங்கப்படும்.

தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாக இருக்கக்கூடாது.மன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் ஒருபோதும் நடக்கக்கூடாது. தனி நபர் விமர்சனம் எதுவும் செய்யக்கூடாது. தலைமையகத்தின் எழுத்துப்பூர்வமான அனுமதி இன்றி பொதுமக்களிடமிருந்து மன்றத்தின் பெயரைப் பயன்படுத்தி நிதியோ அல்லது பிற பொருளுதவியோ ஒருபோதும் திரட்டக்கூடாது.தங்களால் இயன்ற நிதி உதவிகளைத் தந்து நடத்தும் நிகழ்ச்சிகளை எளிமையான முறையில் நடத்த வேண்டும்.

சட்டவிரோத செயல்களில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. துமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்தச் செயலையும் செய்யக்கூடாது.சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துகளை வெளியிடும் போது கண்ணியம் காக்க வேண்டும். ன்றத்தின் பெயரில் எந்தத் தனி நபரையும் கேலியாக சித்தரிக்கவோ அல்லது விமர்சிக்கவோ கூடாது." ஆகிய கட்டளைகளை விதித்துள்ளதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'முக்கொம்பு மேலணை ஆய்வு'

முக்குளிப்பவர்களை கொண்டு முக்கொம்பு மேலணை ஆய்வு செய்யப்பட்டு வருவதாக கூறுகிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி. செவ்வாய்க்கிழமை திறமைவாய்ந்தை முக்குளிப்பவர்கள் மேலணையில் எஞ்சி இருக்கும் பகுதிகளை ஆய்வு செய்தனர். இவர்கள் சென்னை ஐஐசி பேராசிரியர்களிடம் தங்கள் ஆய்வு முடிவுகளை தாக்கல் செய்வார்கள். அரசு எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் ஆய்வு முடிவுகளை வைத்து அமையும் என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி. அண்மையில் அந்த மேலணையின் 9 மதகுகள் உடைந்தன. அதனை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்