செயற்பாட்டாளர்கள் கைது: வீட்டுக்காவலில் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

  • 30 ஆகஸ்ட் 2018

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட ஐந்து செயற்பாட்டாளர்களையும் வரும் வியாழக்கிழமை வரை வீட்டுக் காவலில் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செயற்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, வரவர ராவ், அருண் பெரேரா மற்றும் வெர்னோன் கொன்சால்வேஸ் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரும் செயற்பாட்டாளருமான பிரஷாந்த் பூஷண் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அந்த மனுவை புதன்கிழமை விசாரித்தது. இடைக்கால நடவடிக்கையாக, கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்கள் ஐந்து பேரையும் வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி வியாழக்கிழமை வரை அவர்களது சொந்த வீட்டில் காவலில் வைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கிடையில், மகாராஷ்டிர அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், வரும் செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டது. அந்த பதில் தொடர்பாக வேறு எந்தத் தரப்பாவது பதில் மனு தாக்கல் செய்ய விரும்பினால் அடுத்த நாள் தாக்கல் செய்யலாம் என்றும், அடுத்த விசாரணை 6-ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

படத்தின் காப்புரிமை படத்தின் காப்புரிமைGONZALVIS

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மகாராஷ்டிராவின் பீமா கொரேகானில் நடந்த கலவரம் தொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். வரவர ராவைப் பொருத்தவரை, பிரதமர் நரேந்திர மோதியை கொலை செய்ய நடந்த சதித்திட்டம் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

ஏற்கெனவே, சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா ஆகிய இருவரும் டெல்லியில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை மகாராஷ்டிர போலீசார் புனே நகருக்கு கொண்டு செல்ல டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது. அதையடுத்து, அவர்கள் இருவரும் டெல்லியில் வீட்டுக் காவலில் வைக்கபட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செயற்பாட்டாளர்கள் கவுதம் நவ்லாகா மற்றும் சுதா பரத்வாஜ் ஆகிய இருவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அதனால், இடைக்கால நடவடிக்கையாக, வரவரராவ், அருண் ஃபெரைரா மற்றும் வெர்னோன் கொன்சால்வஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டால் அவர்களும் வீட்டுக் காவலிலேயே வைக்கப்படுவதில் ஆட்சேபணையில்லை என்று தெரிவித்ததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அவ்வாறே உத்தரவிடுவதாக அறிவித்தனர்.

தங்களது உத்தரவின் அடிப்படையில், டெல்லியில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட கவுதம் நவ்லாகா மற்றும் சுதா பரத்வாஜ் ஆகியோரை தொடர்ந்து அப்படியே வைக்கவும் உத்தரவிட்டனர்.

இதுதொடர்பான விவாதத்தின்போது, `சம்பவம் நடைபெற்று ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அவர்களைக் கைது செய்வது ஏன்? அவர்கள், ஒரு குறிப்பிட்ட கொள்கைக்காக குரல் கொடுக்கிறார்கள்' என்று நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டார்..

மேலும், `ஜனநாயகத்தில், எதிர்ப்பு என்பது ஒரு பாதுகாப்பு வால்வைப் போன்றது. அதை அழுத்த முயன்றால் வெடித்துவிடும்' என்றும் குறிப்பிட்டார்.

மேலும், சம்பந்தப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் யாரும் இல்லாத நிலையில், இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்கக்கூடாது என்று மகாராஷ்டிர அரசின் சார்பில் வாதிடப்பட்ட போதிலும், இது மிக முக்கியப் பிரச்சனை என்று கூறி அந்த வாதத்தை நீதிபதிகள் நிராகரித்தனர்.

பீமா கோரேகானில் ஜனவரி 1-ஆம் தேதி நடந்த கலவரம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகத்தான் இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மகாராஷ்டிர அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தாக்குதல் நடத்த திட்டம்

இந்த மாவோயிஸ்டுகளுக்கு மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், தற்போதுள்ள அரசியல் நடைமுறைகளுக்கு எதிராக செயல்படுவதாகவும் புனே போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பிற சட்டவிரோத குழுக்களுடன் அவர்களுக்கு உள்ள தொடர்பு குறித்தும், பெரிய அளவிலான சதித்திட்டத்தில் ஈடுபாடு இருப்பது குறித்தும் வலுவான ஆதாரங்கள் இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் 35 கல்லூரிகளில் இருந்து உறுப்பினர்களை தங்கள் குழுவில் சேர்த்து, தாக்குதல் நடத்த செயற்பாட்டாளர்கள் திட்டமிட்டிருப்பதாகவும் போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

ரொமிலா தாபர், தேவிக ஜெயின், சதீஷ் தேஷ்பாண்டே உள்ளிட்டோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், எதிர்ப்புக் குரல்களை ஒடுக்க மகாராஷ்டிர அரசு முயல்வதாகவும், ஒடுக்கப்பட்டோருக்காக குரல் கொடுப்பதை தடுத்து, பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த முயல்வதாவும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் நடந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், முதல் தகவல் அறிக்கையில் அவர்களது பெயர் இல்லாத போதிலும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மூத்த வழக்கறிஞர்கள் பிரஷாந்த் பூஷண், அபிஷேக் சிங்வி, இந்திரா ஜெய்சிங், ராஜு ராமச்சந்திரன் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் பலர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்க முயல்வதாக சிங்வி வாதிட்டார். சுதா பரத்வாஜ் மற்றும் கவுதம் நவ்லாகா ஆகியோர் டெல்லியில் இருந்து புனேவுக்கு அழைத்துச் செல்வதற்கான டிரான்சிட் ரிமாண்ட் மட்டுமே தடை செய்யப்பட்டிருப்பதாகவும் மற்ற மூவர் உள்பட ஐந்து பேரையும் அடுத்த விசாரணை வரை வீட்டுச் சிறையிலேயே வைக்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

வரவர ராவ் உள்பட மூவரும் புனே நகருக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்கள் மீண்டும் சொந்த வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு காவலில் வைக்கப்படுவார்களா அல்லது புனே நகரில் விருந்தினர் இல்லங்களில் வைக்கப்படுவார்களா என்பது நீதிமன்ற உத்தரவில் தெளிவுபடுத்தப்படவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :