தாமதமான விசாவால் தமிழக வீராங்கனைக்கு நழுவிய வாய்ப்பு - நடந்தது என்ன?

  • 2 செப்டம்பர் 2018

தமிழக வீராங்கனையான கோவையை சேர்ந்த வசந்தி, அடுத்த மாதம் ஸ்பெயினில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டிகள் மூன்றில் கலந்துகொள்ள முடியாமல், ஒரு போட்டியில் மட்டுமே கலந்துகொள்ளும் வகையில் விசா கிடைத்துள்ளதால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

கோவையை சேர்ந்த வசந்தி கடந்த ஓராண்டு எடுத்த பயிற்சியால் மாநில மற்றும் தேசிய அளவில் மூத்ததோர் தடகள போட்டியில் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.

அடுத்த மாதம் 6 ஆம் தேதி ஸ்பெயினில் நடைபெற உள்ள சர்வதேச மூத்தோருக்கான தடகள போட்டியில் பங்கேற்க வசந்தி தேர்வாகி உள்ளார். இந்நிலையில், எல்லா போட்டிகளிலும் பங்கேற்கும் வகையில் குறித்த தேதியில் விசா கிடைக்காதது அவரை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் வசந்தி. ஓட்டல் மற்றும் வீட்டு வேலை செய்து வந்தவர், தற்போது தடகள வீராங்கனையாக உருவெடுத்துள்ளார். அதுவும் கடந்த ஓராண்டில் தடகளத்தில் கால் பதித்து சர்வதேச போட்டியில் பங்கேற்கும் அளவிற்கு ஜொலித்துக் கொண்டிருக்கிறார் வசந்தி.

பெற்றோர்களை ரோல் மாடலாக வைத்து அவர்களது குழந்தைகள் ஒரு துறையை தேர்வு செய்வது வழக்கமான ஒன்று. ஆனால் தனது குழந்தைகளை ரோல் மாடலாக வைத்து தடகளத்தை தேர்வு செய்துள்ளார் வசந்தி. தடகளத்தில் கால் பதித்தது குறித்து அவர் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.

''எனக்கு திருமணமாகி 18 வருஷம் ஆகிருச்சு. எனது கணவர் ஆனந்தன் தனியார் பஸ்ல டிரைவரா வேல பாத்துட்டு வராரு. எங்களுக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. பையன் 12ம் வகுப்பு படிக்கிறான். பொண்ணு 10 ஆம் வகுப்பு படிக்கிறா. என் ரெண்டு குழந்தைங்களும் தடகள போட்டியில் மாநில, தேசிய அளவுல நடக்குற போட்டில பதக்கம் வாங்கிருக்காங்க. அவுங்களுக்கு கோவைல மாஸ்டர் வைரவநாதன் பயிற்சி குடுக்குறாரு. அவங்கள பாக்கும்போது எனக்கும் ஓடனும்னு ரொம்பவே ஆசையா இருக்கும்'' என்று கூறினார்.

''அப்பதா வைரவநாதன் சார் 35 வயசுக்கு மேல இருக்குறவங்களுக்கும் தடகளப் போட்டில கலந்துக்குற வாய்ப்பு இருக்குனு சொன்னாரு. அப்பரம் கோவைல நடந்த மராத்தான் போட்டிகள்ல கலந்துகிட்டேன். போன ஒரு வருஷம்தா முறையா பயிற்சி எடுத்து மூத்தோர் தடகள போட்டில கலந்துட்டு வரேன். இந்த ஒரு வருஷத்துல மாநில அளவுல நடந்த போட்டில 4 தங்கமும், தேசிய அளவுல நடந்த போட்டில ஒரு தங்கம் - 3 வெள்ளி பதக்கங்கள் பெற்றுள்ளேன்'' என்கிறார் வசந்தி.

''கடைசியாக பெங்களூருவில் நடைபெற்ற மூத்தோர் போட்டியில் தங்கம் வென்றேன். இதனால அடுத்த மாசம் ஸ்பெயின்ல நடக்குற சர்வதேச போட்டில செலக்ட் ஆகிருக்கேன்."

குழந்தைகள படிக்க வைக்கிறதுக்கும், குடும்பத்துக்குமே என் கணவர் சம்பளம் போதுமானதா இல்ல. நானும் இந்த ஒரு வருஷமா பயிற்சில இருக்குறதால வேலைக்கு போக முடில. அதிகமா படிக்காததால வீட்டு வேலைக்குதா போயிட்டு இருந்தேன். ஸ்பெயினுக்கு போக 3.5 லடசம் செலவாகும்னு சொன்னாங்க. நான் திறமையா ஓடறத பாத்து நிறைய பேர் ஸ்பெயின் போறதுக்கு ஸ்பான்சர் பண்றதா சொன்னாங்க. அதுமாரியே 200 ரூபாய்ல இருந்து 1 லடசம் ரூபாய் வரைக்கும் பணம் தந்து உதவுனாங்க.

அடுத்த மாதம் 6 ஆம் தேதி ஸ்பெயினில் துவங்கவுள்ள மூத்தோர் தடகள போட்டியில் தான் மூன்று போட்டிகளில் கலந்துக் கொள்ளப் போவதாக முடிவாகி இருப்பதாக தெரிவித்தார் வசந்தி.

7 ஆம் தேதி 2000 மீட்டர் ஓட்டத்திலும், 12 ஆம் தேதி 5000 மீட்டர் ஓட்டத்திலும், 16 ஆம் தேதி 21 கிலோ மீட்டர் ஓட்டத்திலும் கலந்து கொள்ள வேண்டியது மொத்தமாக குளறுபடியாகி உள்ளது. "அடுத்த மாதம் 11 ஆம் தேதிதான் எனக்கு ஸ்பெயினுக்கு போறதுக்கான டிக்கெட்டே கெடச்சுருக்கு. இதனால நான் 7 ஆம் தேதி நடக்குற 2000 மீட்டர் ஓட்டத்திலேயும், 12 ஆம் தேதி நடக்குற 5000 மீட்டர் ஓட்டத்திலயும் கலந்துக்க முடியாத நிலையா இருக்கு" என்றும் அவர் தெரிவித்தார்.

போன மாசம் 16 ஆம் தேதில இருந்து விசா வாங்குறக்கான முயற்சி செய்துட்டு இருந்தேன். ஆனா எனக்கு பின்னாடி 22 ஆம் தேதி விசா அப்ளை பண்ணவங்களுக்கு அடுத்த மாசம் 2 ஆம் தேதியே ஸ்பெயினுக்கு போறமாதிரி விசா கெடச்சிருச்சு.

ஜூலை 30 ஆம் தேதி பெங்களூர்ல இருக்குற தனியார் ஏஜென்சிக்கு டிக்கெட்டுக்காக 1 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொண்டு சென்று ஆன்லைன்ல காத்திருந்தேன். 16 ஆம் தேதி நேர்ல வர சொல்லிருந்தாங்க. அங்க போனதும் எனக்கு ஸ்பான்சர் பண்ணுனவங்க அக்கவுண்ட் டீட்டைல், ஆதார் கார்டு எல்லாம் வேணும்னு சொன்னாங்க.

அது ஏதும் நான் எடுத்துட்டு போகாததால அதை எடுத்துட்டு பெங்களூர் வரவேண்டாம் சென்னை போயிருங்கனு சொன்னாங்க. எனக்கு அவ்ளவா இங்கிலீஷ் தெரியாததால பெங்களூர்ல ரொம்பவே கஷ்டப்பட்டேன். பெங்களூர்ல ரோட்ல அலையும்போது விசா சரியான நேரத்துக்கு கெடைக்காதோன்னு எனக்கு அழுகையே வந்துருச்சு.

"அதுக்கு பிறகு சென்னை ஆபீஸ்க்கு போனதும் மும்பை எம்பசில இருந்து லெட்டர் வேணும்னு சொல்லிட்டாங்க. எனக்கு என்ன பண்றதுனே தெரியல ரொம்ப கஷ்டமா போயிருச்சு.

என்னோட சாதனையை யாரும் மேலிடத்துல சொல்லாம விட்டுட்டாங்க. அதானாலதா எனக்கு சரியான நேரத்துல எந்த உதவியும் கிடைக்கல. ஒரு வழியா அங்க இங்கனு அலைஞ்சு 11 ஆம் தேதி ஸ்பெயினுக்கு போறமாரி விசா கெடச்சுருக்கு. நா கண்டிப்பா போயி ஒரு போட்டிலையாவது கலந்துக்குவேன். எனக்காக்க ஸ்பான்சர் பண்ணவங்களுக்காக நான் நிச்சயம் பதக்கம் வாங்குவேன்'' என உறுதியுடன் கூறுகிறார் தடகள வீராங்கனை வசந்தி.

விசாவிற்கான தாமதம் குறித்து வசந்தியின் பயிற்சியாளர் வைரவநாதன் பிபிசியிடம் தெரிவித்தபோது, கோவையில் தமிழ்நாடு மூத்தோர் தடகள சங்கத்திற்கு கீழ் செயல்படும் கோவை கிளை இரண்டு சங்கங்களாக பிரிந்து கிடக்கிறது என்றார்.

இந்த சங்கங்களுக்குள் இருக்கும் போட்டியில் வசந்தி போன்ற திறமையானவர்கள் எதிர்காலத்தை இழப்பதோடு நாட்டிற்கான பதக்கங்களும் கைநழுவிச் செல்கிறது. வசந்தி சர்வதேச போட்டியில் தேர்வானதற்கான கடிதமும் தாமதமாகியே கிடைத்ததாக அவர் தெரிவிக்கிறார்.

மூத்தோருக்கான தடகள போட்டியில் சாதிப்பவர்களை தமிழக விளையாட்டுத்துறை கவனத்தில் கொண்டு மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் சரியாக செயல்பட செய்ய வேண்டும் என்றும் பயிற்சியாளர் வைரவநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :