அமெரிக்காவில் பிறந்து இந்திய தொழிலாளர்களுக்காக போராடும் சுதா பரத்வாஜ்

  • 30 ஆகஸ்ட் 2018
படத்தின் காப்புரிமை FACEBOOK
Image caption சுதா பரத்வாஜ்

பருத்தியிலான சேலையும், சாதாரணமான செருப்பும் அணிந்த சுதா பரத்வாஜை உங்களுக்கு முன்பு தெரியவில்லையென்றால், முதல் பார்வையில் அவரை ஒரு சாதாரண குடும்ப பெண்ணாகதான் நீங்கள் கருதுவீர்கள்.

இவ்வளவு எளிமையாக தான் அவர் தனது வீட்டில் இருந்து அலுவலகம் செல்கிறார். ஆனால், அவரது எளிமை குறித்து அச்சப்படும் நபர்களின் பட்டியல் மிகவும் நீளமாகும்.

இது சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவமாகும்.

சத்தீஸ்கரில் உள்ள ஒரு பன்னாட்டு சிமெண்ட் நிறுவனத்தின் மேலாளர் கிசுகிசுப்பான குரலில் கூறினார், ''சுதா பரத்வாஜின் பெயரை குறிப்பிடாதீர்கள்! அவரால்தான் கடினமாக உழைக்கும் சில தொழிலாளர்கள் எங்களுக்கு பிரச்சனையை உருவாக்குகின்றனர்.''

பஸ்தரில் உள்ள ஒரு சமூக பணியாளர்கள் குழுவை, ''உங்களுக்கு சுதா பரத்வாஜை தெரிந்து இருந்தால், நீங்கள் எங்களுக்கு எதிரானவர்கள்தான்'' என்று ஒரு போலீஸ் அதிகாரி எச்சரித்தார்.

ஆனால், இதுபோன்ற ஆயிரக்கணக்கான அபிப்பிராயங்களை தாண்டி சத்தீஸ்கரில் உள்ள கோண்டா முதல் ராமானுஜ்கஞ்ச் வரையிலான பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சுதா திதீ (சகோதரி) மட்டும்தான்.

பொருளாதார நிபுணரான ரங்கநாத் பரத்வாஜ் மற்றும் கிருஷ்ணா பரத்வாஜ் ஆகியோரின் மகளான சுதா கடந்த 1961ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தார்.

கடந்த 1971ஆம் ஆண்டு தனது தாய் கிருஷ்ணா பாரத்வாஜுடன் சுதா இந்தியாவுக்கு வந்தார். டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலுள்ள பொருளியல் துறையை நிறுவியவரான கிருஷ்ணா பரத்வாஜ், தனது மகளுக்கு முழு சுதந்திரத்தை அளித்தார்.

படத்தின் காப்புரிமை TWITTER

"நான் வயதுக்கு வந்தவுடனையே என்னுடைய அமெரிக்க குடியுரிமையை திரும்ப அளித்துவிட்டேன். ஐஐடி கான்பூரில் நான் படித்த ஐந்து வருட காலத்தில் டெல்லியிலுள்ள சேரிகள், தொழிலாளர் குடியிருப்புகளில் எனது நண்பர்களோடு இணைந்து பாடம் கற்பித்ததோடு, தொழிலாளர்களின் பிரச்சனைகள் குறித்து அறிய முயன்றேன்" என்று சுதா கூறுகிறார்.

ஐஐடி கான்பூரின் முதல்நிலை மாணவராக இருந்தபோதிலும், பெரிய நிறுவனத்தில் பணியில் சேராமல் கடந்த 1984-1985களில் சத்தீஸ்கரில் ஷங்கர் குஹா நியோகி தலைமையில் நடைபெற்ற தொழிலாளர் உரிமைகளுக்கான போராட்டத்தில் இணைவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அப்போது பலமுறை சத்தீஸ்கருக்கு பயணித்த சுதா, ஒருகட்டத்தில் அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டார்.

டாலி ராஜ்ஹரா என்ற பகுதியிலுள்ள ஷாஹித் மருத்துவமனைக்கு நோயாளி ஒருவருடன் வந்த கோமல் தேவன்கன் என்பவர், "சுதாவும் அவரது சகாக்களும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தது மட்டுமல்லாமல் அவர்களது ஆடைகளை தைத்தும் கொடுத்தனர். நியோகி தொழிலாளர்களுக்கு கொடுத்த வாசகங்களை சுதா பரத்வாஜ் போன்றோர் நடைமுறை உணர்த்தியுள்ளனர்" என்று அவர் கூறினார்.

போர்குணத்துடன் செயல்பட்ட தொழிலாளர்களின் தலைவரான குஹா நியோகி கடந்த 1991ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். ஷங்கர் குஹா நியோகியின் செயலாளராக சுதா பரத்வாஜ் இருந்தார்.

படத்தின் காப்புரிமை TWITTER

சத்தீஸ்கரிலுள்ள தொழிலாளர்களுக்காக தனது போராட்டத்தை தொடங்கிய சுதா, அதன் பிறகு தனது பணியை நிறுத்தவேயில்லை.

ஷங்கர் குஹா நியோகியின் சத்தீஸ்கர் முக்கி மோர்ச்சா அமைப்பு அரசியல் கட்சியாக உருவெடுத்தபோது அதன் செயலாளராக சுதா பதவியேற்றார்.

ஒரு குறிப்பிட்ட கட்சியின் பதவியை மட்டுமே விரும்பாத சுதா, தொடர்ந்து பல்வேறு விவசாயிகள், தொழிலாளர் அமைப்புகள் சார்ந்த பிரச்சனைகளுக்காக போராடினார்.

இப்போதும்கூட அவர் தன்னை ஒரு சாதாரண சமூக சேவகராகதான் கருதுகிறார்.

பல்வேறு சமூக இயக்கங்களின் குழுவான, 'சத்தீஸ்கர் பச்சாவோ அந்தோலனை' சேர்ந்த அலோக் ஷுக்லா என்பவர், "எங்களை போன்றோருக்கு ஒரு எடுத்துக்காட்டாக சுதா செயல்பட்டார். அவர் தொடர்ந்து அமைதியாக பணிபுரிவதை வழக்கமாக கொண்டிருந்தார்" என்று கூறினார்.

சத்தீஸ்கரில் நடந்த தொழிலாளர் போராட்டத்தின்போது, வழக்காடல் சார்ந்த செலவுகள்தான் அதிகமாக இருந்தது. தொழிலாளர்களுக்கு நீதியை பெற்றுத்தருவதற்காக பணமும், கடும் உழைப்பும் வழக்காடல் சார்ந்த விடயங்களுக்காக செலவிடப்பட்டது.

சகாக்களின் அறிவுரையின்படி, தனது 40வது வயதில் சட்டத்தை பயின்ற சுதா, பழங்குடியினர் மற்றும் தொழிலாளர் சார்ந்த வழக்குகளில் தானே நேரடியாக நீதிமன்றத்தில் வழக்காட தொடங்கினார்.

சுதா பல தொழிலாளர் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியதன் வாயிலாக பல்வேறு விடயங்களை அறிந்திருந்ததால், வழக்குகளில் சுதாவுக்கு சாதகமாகவே தீர்ப்புகள் வந்தன. அதில் பெரும்பாலான வழக்குகள் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் நடந்தன.

படத்தின் காப்புரிமை TWITTER

சில வருடங்களுக்கு பின்னர், பல்வேறு பின்தங்கிய குழுக்களுக்கு உதவுவதற்காக வழக்கறிஞர்களால் 'ஜன்ஹிட்' என்ற பெயரில் தன்னார்வ அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும், மாவட்ட நீதிமன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரை 300க்கும் மேற்பட்ட வழக்குகளில் இந்த அமைப்பு போராடியுள்ளது. பிலாஸ்பூரிலுள்ள தனது அலுவலகத்தில் பல்வேறு வழக்குகள் பற்றிய ஆவணங்களின் குவியலோடு சுதா அமர்ந்திருப்பார்.

பியுசிஎல் என்ற மனித உரிமைகள் அமைப்பின் சத்தீஸ்கர் கிளையின் பொதுச்செயலாளராக உள்ள சுதா பரத்வாஜ் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பல வழக்குகளில் ஆஜராகியுள்ளார்.

சட்டவிரோதமாக நிலக்கரி எடுத்தல், பஞ்சாயத்து விதிகளை மீறுதல், காடுகள் மற்றும் தொழிற்சாலைகள் சார்ந்த விதி மீறல்கள் மற்றும் உரிமைகள் தொடர்பாக போராடியவராகவும் சுதா அறியப்படுகிறார்.

தொழிலாளர் போராட்டத்தின்போது தனது அனைத்து சொத்துகளையும் நன்கொடையாக அளித்த சுதா பாரத்வாஜுக்கு டெல்லியில் ஒரு வீடு உள்ளது. அதில் பெறப்படும் வாடகை தொழிலாளர் சங்கம் ஒன்றிற்கு நிதியாக செலுத்தப்படுகிறது.

"அமைப்பில் எப்போதுமே நிதியாதாரம் சார்ந்த பிரச்சனைகள் இருந்தாலும், குழந்தைகளின் கல்விக்காகவும், தொழிலாளர்களுக்கான மருத்துவமனைகளையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம்" என்று சுதா பரத்வாஜ் கூறியிருக்கிறார்.

ஒத்த கொள்கைகளை கொண்டவர்களால் அளிக்கப்படும் நன்கொடைகள் மூலமாகவே தொழிலாளர்களின் உரிமைக்காக போராடும் 'ஜன்ஹிட்' அமைப்பின் நிதித்தேவைகள் பூர்த்திசெய்யப்படுகிறது.

"வாழ்க்கையில் கடந்துவந்த பாதையை நான் திரும்பி பார்க்கும்போது, தொழிலாளர்கள், பழங்குடியினரின் போராட்டங்களுக்கு என்னாலான உதவிகளை செய்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். மனிதகுலத்திற்கு உதவுவதையே முக்கிய எண்ணமாக கொண்ட மனிதர்கள் உள்ளார்கள். அவர்களில் ஒருவராக மீண்டும் பிறப்பதற்கு நான் விரும்புகிறேன்" என்று சுதா கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :