திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் என்ன?

படத்தின் காப்புரிமை MKSTALIN

மு. கருணாநிதிக்குப் பிறகு தி.மு.கவின் புதிய தலைவராக செவ்வாய்க்கிழமையன்று பதவியேற்றிருக்கிறார் மு.க. ஸ்டாலின். தமிழகத்தின் மிகப் பெரிய கட்சிகளில் ஒன்றான திராவிட முன்னேற்றக் கழகத்தை வழிநடத்திச் செல்வதில் அவர் சந்திக்கவிருக்கும் சவால்கள் என்ன?

கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி தி.மு.கவின் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் கட்சித் தலைவர் மு. கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் கருணாநிதி. அதற்கு சில நாட்களுக்கு முன்பாக தனக்குப் பிறகு தனது சமுதாயப் பணிகளை மு.க. ஸ்டாலின் தொடர்வார் என்று கூறியிருந்தார். இது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது பதிலளித்த கருணாநிதி, "ஏன் ஸ்டாலின் வரக்கூடாதா? அவர் தி.மு.கழகம் இல்லையா? வரக்கூடாது என்று இப்போதிருந்தே அதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவருக்கு வேண்டுமானால் கடுப்பு ஏற்படும். .. திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு ஜனநாயக இயக்கம்" என்றார்.

கட்சியின் தேர்தலில், குறிப்பாக தலைமைக் கழகத்திற்கான தேர்தலில் தலைவராகவோ, பொதுச் செயலாளர் பதவிக்கோ ஒருவர் நிற்க வேண்டுமென்றால் அதை முன் மொழிந்து, பொதுக் குழுவில் பெரும்பான்மையோர் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும். அப்படி முன்மொழியக்கூடிய வாய்ப்பு எனக்கு தனிப்பட்ட முறையில் வருமானால் அந்த வாய்ப்பை நான் பயன்படுத்தி - இப்போது சொல்கிறேன் - ஸ்டாலினைத்தான் முன் மொழிவேன். ஏனென்றால், இது ஏற்கனவே பொது செயலாளர் பேராசிரியர் முன் மொழிந்தது" என்று குறிப்பிட்டார்.

கருணாநிதியின் இந்த பேட்டியின்போது கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகனும் உடனிருந்தார். ஆகவே இந்த செய்தியாளர் சந்திப்பையடுத்து மு. கருணாநிதிக்கு அடுத்து மு.க. ஸ்டாலின்தான் அடுத்த தலைவர் என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. செவ்வாய்க்கிழமையன்று நடந்த தேர்வு என்பது ஒரு சம்பிரதாயமான நடவடிக்கைதான்.

படத்தின் காப்புரிமை FACEBOOK/MK STALIN

கட்சியின் அடிமட்டத் தொண்டனாக இணைந்து, படிப்படியாக உச்சத் தொட்டிருக்கும் ஸ்டாலின், தி.மு.கவின் தலைவர் பதவியை அடைவதில் வெற்றிபெற்றுவிட்டார். பொதுக் குழுவில் துரைமுருகன் சுட்டிக்காட்டியபடி, தலைவர் பதவியை அடைவதில் மு. கருணாநிதி அடைந்த சிக்கல்களோடு ஒப்பிட்டால் மு.க. ஸ்டாலின் மிக எளிதாகவே அதைச் சாதித்திருக்கிறார். ஆனால் தி.மு.கவை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்திச்செல்லவும் ஆட்சியைப் பிடிக்கவும் மு.க. ஸ்டாலின் பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

"பதவியேற்றவுடன் மு.க. ஸ்டாலின் பேசிய பேச்சு நம்பிக்கையளிக்கிறது. காஷ்மீருக்கு அடுத்தபடியாக பா.ஜ.கவுக்கு எதிரான உணர்வு அதிகமாக இருப்பது தமிழகத்தில்தான். அதை மு.க. ஸ்டாலின் புரிந்துகொண்டிருக்கிறார். பா.ஜ.க. கலாச்சார ரீதியாக தமிழகம் மீது போர் தொடுக்கிறது என்பதையும் தொண்டர்கள்தான் கட்சிக்கு முக்கியம் என்பதையும் அவர் புரிந்துகொண்டிருக்கிறார். இதெல்லாம் மிகவும் நல்ல சமிக்ஞைகள்" என்கிறார் ஃப்ரண்ட்லைன் இதழின் ஆசிரியரான விஜயசங்கர்.

தி.மு.கவின் அடிப்படை என்பது சமூகநீதிதான். இந்த சமூக நீதியை செயல்படுத்த அரசு நிறுவனங்களும் பொதுத்துறையும் வலுவாக இருக்க வேண்டும். ஆனால், உலகமயமாக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு, பொதுத் துறை நிறுவனங்கள் வீழ்ந்துவருகின்றன. அரசுப் பணிகளும் குறைந்து வருகின்றன. 'இந்தச் சூழலில் சமூக நீதி என்பது அர்த்தமிழந்து போகாமல் பாதுகாக்கும் பொறுப்பு தி.மு.கவுக்கு இருக்கிறது. அதனை அவர் எப்படிச் செய்கிறார் என்பதை பார்க்க வேண்டும்' என்கிறார் விஜயசங்கர்.

தமிழகத்தில் தற்போது உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளையும் அவர்களது அபிலாஷைகளையும் எதிர்கொள்வது ஸ்டாலினுக்கு முக்கிய சவாலாக இருக்கும் என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "கலைஞர் தலைவராக ஆனபோது, ஸ்தாபன காங்கிரஸ் வலுவாக இருந்தது. அது தவிர, இந்திரா காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை அதற்கடுத்த நிலையில் இருந்தன. ஆனால், இப்போது இருபதுக்கும் மேற்பட்ட கட்சிகள் இருக்கின்றன. இவற்றில் சில கட்சிகள் சில இடங்களில் வலுவாக இருக்கின்றன. இத்தனை கட்சிகளையும் அவர்களது விருப்பங்களை எதிர்கொள்வதும் தேர்தல் அரசியலில் சவாலாக இருக்கும்" என்கிறார் ராதாகிருஷ்ணன்.

படத்தின் காப்புரிமை FACEBOOK

ஆனால், கலைஞர் எதிர்கொண்ட காமராஜர், ராஜாஜி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற பெரிய தலைவர்கள் இப்போது இல்லை. அது மிக சாதகமான அம்சம் என்கிறார் அவர்.

"தமிழ் தேசியம் என்ற தத்துவம் நீண்டகாலமாகவே இருந்துவந்தாலும் சமீப சில வருடங்களாக அந்தக் கட்சிகள் திராவிடக் கட்சிகளைக் கடுமையாகத் தாக்கிவருகிறார்கள். வரும் தேர்தல்களில் மு.க. ஸ்டாலின் அதனைக் கடுமையாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தவிர, ஜெயலலிதாவும் கருணாநிதியும் இல்லாத சூழலில் தமிழகத்தில் கால்பதிக்க இந்துத்துவ சக்திகள் நினைக்கின்றன. அந்த சவாலை அவர் எளிதாகக் கருதிவிட முடியாது" என்கிறார் ராதாகிருஷ்ணன்.

தி.மு.கவை பா.ஜ.க. என்ன செய்ய நினைக்கிறது; அதை தி.மு.க. எப்படி எதிர்கொள்ள போகிறது என்பது மிக முக்கியமான கேள்வி என்கிறார் தன்னாட்சித் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளரான ஆழி. செந்தில்நாதன். பா.ஜ.க. தி.மு.கவுடன் நெருங்க நினைக்கலாம். அல்லது அழிக்க நினைக்கலாம். இரண்டுமே தி.மு.கவுக்கு சிக்கலை ஏற்படுத்தும். அதனை ஸ்டாலின் எப்படி எதிர்கொள்வார் என்று பார்க்க வேண்டும் என்கிறார் செந்தில்நாதன்.

மேலும், அ.தி.மு.க மீதும் பா.ஜ.க. மீதும் கடும் அதிருப்தி இருப்பதால் வரும் தேர்தலில் எளிதாக வென்றுவிடலாம் என தி.மு.க. நினைக்கக்கூடாது என்கிறார் செந்தில்நாதன். 'முதலாவதாக, தனது வாக்கு வங்கியை தி.மு.க. உறுதிப்படுத்த வேண்டும். இரண்டாவதாக, பிற கட்சிகளிலிருந்து அதிருப்தியால் பிரியும் வாக்குகளை உறுதிப்படுத்த வேண்டும். மூன்றாவதாக கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து அவர்களது வாக்குகளையும் சேர்க்க வேண்டும். ஏனென்றால் 100-500 வாக்குகளில்கூட இப்போது தோல்வி ஏற்படுகிறது. ஆனால், கடந்த இரு தேர்தல்களில் இந்த விஷயத்தில் ஸ்டாலின் தன்னை நிரூபித்தவரல்ல' என்கிறார் செந்தில்நாதன்.

படத்தின் காப்புரிமை FACEBOOK/MK STALIN

தமிழ்நாடு பார்த்துப் பார்த்து உருவாக்கிய பொதுவிநியோகத் திட்டம் தற்போது நாசமாக்கப்பட்டு வருகிறது. மு.க. ஸ்டாலின் முதல்வரானால் இந்த விவகாரம் அவருக்கு பெரும் சவாலாக உருவெடுக்கும். தவிர மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோய்க் கொண்டிருக்கின்றன. இம்மாதிரி விஷயங்களை பல மாநிலத் தலைவர்களை ஒருங்கிணைத்து எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதை அவர் எப்படிச் செய்வார் என்று பார்க்க வேண்டும் என்கிறார் விஜயசங்கர்.

தி.மு.க. என்ற கட்சியைப் பொறுத்தவரை மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் மு.க. ஸ்டாலின் பக்கம் ஒட்டுமொத்தமாக இருப்பதைச் சுட்டிக்காட்டும் விஜயசங்கர், அவர்கள் மீது கீழ்மட்டத் தொண்டர்களுக்கு இருக்கு அதிருப்தியை ஸ்டாலின் எப்படி சரிசெய்வார் என்பதை பார்க்க வேண்டும் என்கிறார். கட்சி அமைப்புக்கு முழுமையாக புதுரத்தம் பாய்ச்ச வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது என்கிறார் அவர்.

ஸ்டாலின் எதிர்கொள்வதிலேயே மிகப் பெரிய சவால் என்பது அவர் தொடர்ந்து கருணாநிதியுடன் ஒப்பிடப்படுவதாகத்தான் இருக்கும் என்கிறார் விஜயசங்கர். ஆனால், கருணாநிதி உருவான காலகட்டம் வேறு. ஸ்டாலின் உருவான காலகட்டம் வேறு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். காலம்தான் தலைவர்களை உருவாக்குகிறது என்கிறார் அவர்.

தேசிய அளவில் தி.மு.க. தன்னை கவனிக்கத்தக்க கட்சியாக மாற்றவேண்டும்; சி.என். அண்ணாதுரை மாநிலங்களவையில் பேசிய உரைகள் இப்போதும் பேசப்படுகின்றன. ஆகவே சரியான நபர்களைத் தில்லிக்கு அனுப்பி ஒரு கவனிக்கத்தக்க கட்சியாக தன்னை தி.மு.க. நிலைநிறுத்த வேண்டும் என்கிறார் ராதாகிருஷ்ணன்.

மு.க. ஸ்டாலினின் மூத்த சகோதரரான மு.க. அழகிரி தனது பலத்தைக் காட்ட செப்டம்பர் ஐந்தாம் தேதி சென்னையில் ஒரு பிரம்மாண்டமான ஊர்வலத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறார். தன்னைக் கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டுமென்றும் என்பதை இது தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஸ்டாலின் எதிர்கொள்ள வேண்டிய அரசியல் சவால்களோடு ஒப்பிடும்போது இது மிகச் சிறிய சவால்தான். ஆனால், இந்தக் கேள்விக்கு அவர் விரைவிலேயே ஏதோ ஒரு விதத்தில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டியிருக்கும்.

அதேபோல, உதயநிதி ஸ்டாலின் போன்ற தன் குடும்பத்தினரையே கட்சிக்குள் வலுக்கட்டாயமாக நுழைப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள், மாவட்டச் செயலாளர்கள் தத்தம் மாவட்டங்களில் குறுநில மன்னர்களைப் போல செயல்படுவது குறித்த குற்றச்சாட்டுகள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்களின் வாரிசுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்த குற்றச்சாட்டுகள் ஆகியவற்றையும் மு.க. ஸ்டாலின் எப்படி எதிர்கொள்வார் என்பதைப் பார்க்க வேண்டியிருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்